August 13, 2022

டியர் காம்ரேட் – விமர்சனம்!

ரஷ்யப் புரட்சி வீரர்கள் தங்கள் சக வீரர்களை‘காம்ரேட்’ என்று அழைத்துக்கொண்டனர். இதையே பின்பற்றி இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் உருக்கொண்டபோது அந்த இயக்கத்தில் இருந்தவர் கள் ‘காம்ரேட்’ தங்களுக்குள் அழைத்துக்கொண்டனர். அதற்கு இணையான தமிழ்ச் சொல்லாக மலர்ந்தது ‘தோழர்’. அதே சமயம் சீனாவில் ஓரினச் சேர்க்கையாளர்களையும் காம்ரேட் என்றே குறிப்பிட்ட வரலாறுமுண்டு. இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா , ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பரத் கம்மா இயக்கி இருக்கும் ஒரு தெலுங்கு காதல் கம் பொலிடிக்கல்(?) படம் ஒன்றை எடுத்து தமிழிலும் ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

டோலிவுட்டின் சாக்லேட் பாய் என்றழைக்கப்படும் நாயகன் விஜய் தேவரகொண்டா. இவரது தாத்தா சாருஹாசன் காம்ரேட்டாக இருக்கிறார். அவர் பாணியைப் பின்பற்றி கல்லூரியில் படிக்கும் விஜய் தேவரகொண்டா மாணவர்களின் பிரச்னைக்காக போராடி வருகிறார். இதனிடையே உறவுக் கார ஃபேமிலி பொண்ணான கிரிக்கெட் ஸ்டேட் பிளேயரான ராஷ்மிகாவும் விஜய்யும் அறிமுகம் ஆகி சினிமாவுக்கே உரிய இலக்கணப்படி லவ்வராகியும் விடுகிறார்கள். இதனிடையே லோக்கல் எம் எல் ஏ- மகனுடன் ஹீரோ அடி தடி மோதலில் இறங்கியதை நேரில் பார்த்து அப்செட்டாகி இக்காதலே வேண்டாம் என்று காணாமல் போய் விடுகிறார் ராஷ்மி.

அவளை மறக்க இயலாமல் பாதை மாறி பயணிக்கு ஹீரோ ஒரு சூழ்நிலையில் ராஷ்மிகா மனநல சிகிச்சையில் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போகிறார். அதையடுத்து அவரை தனிக் கவனம் செலுத்தி குணப்படுத்த வைத்து என்னாச்சு என்று விசாரித்தால், மகளிர் கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவராக உள்ள நபர் தவறாக நடந்து கொள்ள முயன்றதால்தான் அவள் மன நலம் பாதிக்கப் பட்டாள் என்று தெரிய வருகிறது, பிறகென்ன என்பது மாதிரியான வழக்கமான கதைதான்.

விஜய் தேவரகொண்டா ஆரம்ப கால நம்மூர் இளைய தளபதி ரேஞ்சில் நடித்திருக்கிறார். அதே சமயம் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா-வின் கேரக்டரும் அவர் பர்ஃபாமென்சும் சூப்பர். க்யூட் தங்கச்சி, கிரிக்கெட் பிளேயர், கலாய்த்து கண்ணால் பேசி குறும்புட்டும் பெண், காதலி, வருத்தங் களையும் வலிகளையும் சுமக்கும் பாதிக்கப்பட்ட பெண் என்று சகல சூழலுக்கும் தேவையான நடிப்பை வழங்கி எக்ஸ்ட்ரா மார்க் வாங்கிறார்.

இயக்குனர் பரத் கம்மா காதலையும், காம்ரேட் சிந்தனையையும் ஒரே நேர் கோட்டில் யோசித்து படைத்துள்ள இப்படம் மூலம் புது ட்ரெண்டை உருவாக்கி விட்டார் என்று சொல்லலாம். குறிப்பாக வரும்போது சந்தோஷத்தைக் கொடுக்குற காதல், போகும்போது ஏன் வருத்தத்தைக் கொடுக்குது, ஒரு காம்ரேட் போராடுனா அந்தப் போராட்டம் அவனுக்கு நிம்மதியைக் கொடுக்கணும் சுதந்தி ரத்தை கொடுக்கணும், தைரியமா இருக்குறது தப்பில்லை… இந்தப் பிரச்சினையில ஏதாவது இழந்தா நீ ரொம்ப வருத்தப்படுவ, என்னை பயமுறுத்துறதா நினைச்சுக்கிட்டு நீங்கதான் பயப்படு றீங்க என்பது போன்ற உருப்படியான, பொருத்தமான, வலுவான வசனங்களை தேர்ந்தெடுத்து பொருத்தமாக கோர்த்திருப்பதிலு ஜெயித்து விட்டார். சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு படத்தை தூக்கி நிறுத்துகிறது. ஜஸ்டின் பிரபாகரன் பின்னணி இசை பிரம்மாதம். பாடல்களும் மோசமில்லை.

ஆனால் என்னதான் தலைவாழை போட்டு ஏகப்பட்ட பதார்த்தங்களுடன் விருந்து படைத்தாலும் வயிறு கொள்ளுமளவுதான் சாப்பிட முடியும் என்பதை மறந்து போனவர்கள் மாதிரி கிட்டத்தட்ட மூன்று மணி நேர சினிமாவாகக் கொடுத்து அலுப்படைய வைத்து விட்டார்கள். குறிப்பாக இண்டர் வெல் வரை சொல்லும் பிளாஷ் பேக்-கே கொஞ்சம் கொட்டாவி விட வைத்து விட்டதால் மெயின் போர்ஷனான இரண்டாம் பாதியில் முழுமையாக ரசிகனை ஈர்க்கவில்லை.

மொத்தத்தில் இந்த காம்ரேட் – ஆஃப்பாயில்

மார்க் 2.75 / 5