October 21, 2021

ஒற்றை ஆளாய் ஒரு மலையை பிளந்தவர் -தசரத் மான்ஜி !

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள கெலார் என்ற சிற்றூரைச் சேர்ந்த நிலமில்லாத விவசாயக் கூலி தசரத் மான்ஜி. 1959 ஆம் ஆண்டில் இவருடைய மனைவி ‘பால்குனி தேவி’, மலையின் மறுபக்கத்திலிருந்து குடிக்கத் தண்ணீர் கொண்டு வரும்போது மலையிலிருந்து இடறி விழுந்து படுகாயமடைந்தார்.அம்மலைச் சிற்றூர்களில் அவசர உதவிக்குக் கூட மருத்துவ உதவி கிடைக்காத சூழலில் 80 கி.மீ தூரத்தில் உள்ள வஜீரகஞ்ச் மருத்துவ மனைக்குச் செல்லும் போதே இவருடைய மனைவி இறந்து போனார்.

“இந்த மலையின் குறுக்கே ஒரு பாதை மட்டும் இருந்திருந்தால்…. தன் மனைவி இறந்து போயிருக்கமாட்டாள்” என்று உறுதியாக நம்பினார் தசரத் மான்ஜி. அவருடைய எண்ணம் எல்லாம் மலையைச் சுற்றியே வட்டமிட்டது.

தனது மனைவியைப் போல அவசர மருத்துவ உதவி கிடைக்காமல் யாரும் இறக்கக் கூடாது எனக் கருதிய மான்ஜி, இந்த மலையின் குறுக்கே ஒரு பாதை உண்டுபண்ணுவதே தன் இலட்சியம் எனக் கொண்டார்.

“மலையை உடைக்கப் போகிறேன்!” என்று தனி ஒரு ஆளாக கையில் உளியையும் சுத்தியலையும் எடுத்த மான்ஜி தசரத்தை, ‘பைத்தியம்’ என்று அலட்சியப்படுத்தினார்கள் கிராமத்து மக்கள். கேலி செய்தார்கள் விடலைகள்!

அந்த மக்களுடைய கண்களைப் பாறை மறைத்தது! தசரத்தின் கண்ணிலோ பாறை தெரியவில்லை. அவர் உருவாக்க விரும்பிய பாதை மட்டும்தான் தெரிந்திருக்கிறது!

மலை கரையத் தொடங்குவதைப் பார்க்கப் பார்க்க மக்களின் மனமும் மெல்ல கரையத் தொடங்கியது! மக்கள் சோறு கொடுத்தார்கள்! உளியும் சுத்தியலும் செய்து கொடுத்தார்கள்!

அந்தக் கிராமத்தின் பெண்களோ, மனைவி மீது கொண்ட காதலுக்காக மலையுடன் மோதத் துணிந்த இந்த ஆண்மகன் மீது மரியாதை கொண்டார்கள்!

பீகாரின் சுட்டெரிக்கும் வெயில், எலும்பைத் துளைக்கும் நள்ளிரவின் குளிர், இயற்கைச் சீற்றங்கள், உடல் நலிவு என எத்தனையோ இன்னல்களுக்கிடையில்…….

1959 முதல் 1981 வரை 22 வருடங்கள் கடுமையாக உழைத்து, 25 அடி உயரம், 30 அடி அகலம் 360 அடி நீளத்தில் பாதையை வடித்தான் தசரத் என்ற அந்த மாபெரும் சிற்பி!

இது ஒரு மன்னன் தன் காதலுக்காக ஆள் வைத்துக் கட்டி எழுப்பிய தாஜ்மகால் அல்ல. ஒரு அடிமை தன் சொந்தக் கரத்தால் வடித்த காதல் சின்னம்!

ஆனால் “இது என் மனைவிக்கான காதல் சின்னமில்லை” என்று மறுக்கிறார் மான்ஜி.

“அன்று மனைவி மீது கொண்ட காதல்தான் இந்தப் பணியில் என்னை இறக்கியது. இருப்பினும், ஆயிரக்கணக்கான என் மக்கள் கவலையின்றி இந்த மலையைக் கடந்து செல்வதைக் காணவேண்டும் என்ற ஆசை தான் அந்த 22 ஆண்டு காலமும் என்னை இயக்கியது” என்கிறார் மான்ஜி.

அதுவரை மலையினை 80 கி.மீ சுற்றிச் சென்றடைய வேண்டிய வஜீரகஞ்ச் 13 கி. மீ தூரமானது!

அன்று 50 கி.மீ தூரம் சுற்றிக் கொண்டு நகரத்துக்குச் சென்று கொண்டிருந்த 60 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்று பத்தே கிலோமீட்டரில் நகரத்தை அடைகிறார்கள்! அன்றாடம் 8 கி.மீ தூரம் பள்ளிக்கு நடந்த அக்கிராமத்தின் குழந்தைகள் மூன்றே கிலோ மீட்டரில் இன்று பள்ளியை அடைகிறார்கள்!

1981 இலேயே மலையைக் குடைந்து பாதையை அமைத்துவிட்டார். எனினும் அதன்மீது ஒரு சாலை போடுவதற்கு இந்த அரசால் முடியவில்லை.”எங்களிடம் அனுமதி பெறாமல் மலையைப் பிளந்திருப்பதால் அதில் சாலை அமைக்கக் கூடாது” என்று அனுமதி மறுத்திருக்கிறது வனத்துறை!

பின்னர் தசரத் மான்ஜியின் பெயர் பத்ம பூஷண் விருதுக்குச் சிபாரிசு செய்யப்பட்ட போது, “அவர் தனி ஆளாகத்தான் அந்த மலையைப் பிளந்தார் என்பதற்கு ஆதாரமில்லை” என்று கூறியது அதிகார வர்க்கம். ஆனால், இதனைப் பொருட்படுத்தாத மான்ஜி, பீகார் அரசு இவருக்கு இலவசமாக வழங்கிய ஐந்து ஏக்கர் நிலத்தையும் தனது கிராமத்தில் மருத்துவமனை கட்டுவதற்காக வழங்கியுள்ளார்.

தனது வாழ்வின் கடைசி நாட்களில் பித்தப்பை புற்றுநோயோடு போராடிக் கொண்டிருந்த போதுதான் அரசின் பார்வை இவர்மீது திரும்பியது.

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புற்று நோய்க்கான செலவை அரசு ஏற்பதாகக் கூறியது.

ஆனால் நோயின் தீவிரம் காரணமாக மான்ஜியின் உயிர் இதே நாளில் பிரிந்தது. ரயில் மூலம் சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்ட மான்ஜியின் உடல், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

மக்களின் புறக்கணிப்பு எனும் அந்தப் பாறையை நெஞ்சில் சுமந்தபடி, தன்னுடைய உளிச் சத்தத்திற்கு அந்த மலைத்தொடர் வழங்கிய எதிரொலியை மட்டுமே தன் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாய்ப் பருகி, உத்வேகம் பெற்று, 22 ஆண்டுகள் இயங்கியிருக்கிறார் தசரத் மான்ஜி.

ஒரு கை கொடுக்க தன் மக்கள் வரவில்லையே என்ற ஏக்கமின்றி, கசப்பு உணர்ச்சியின் சாயல் கடுகளவுமின்றி, நிபந்தனைகள் ஏதுமின்றி சாகும்வரை தன் மக்களை நேசித்த மனிதன் மரணித்த நாளான இன்று அவரை நினைவு கொள்வோம்??