March 21, 2023

டேனி – விமர்சனம்!

தஞ்சாவூர் டிஸ்ட்ரிக்கில் பிரபலமான டாக்டர் ஒருத்தர் தன்னோட ஒரே மகன் கேட்கும் போதெல்லாம் பணத்தை அள்ளிக் கொடுத்து செல்லமாக வளர்க்கிறார். இதன் காரணமாக அந்த பையன் தன் அப்பாவின் ஹாஸ்பிட்டலில் ஒரு மருந்தை போதையாக உபயோகிக்க ஆரம்பித்து விடுகிறான், அதன் விளைவாக ஊரில் இளம்பெண்களைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொல்கிறான். இந்த கொலைகளை ஸ்டேசன் சப் இன்ஸ்பெக்டராக இருக்கும் துரை சுதாகர் அமுக்கி விடும் சூழலில் புதுசாக இன்ஸ்-ஸாக வரும் வரலட்சுமி இந்த மர்ம மரணங்கள் பற்றி விசாரிக்கிறார், அவருக்கு ‘டேனி’ என்ற போலீஸ் நாய் உதவி செய்கிறது, என்பது தான் மேட்டர்.

கதை (?) யின் நாயகி வரலட்சுமி மிடுக்கான போலீஸ் ஆபீசருக்கு பக்காவாக பொருந்திப் போகிறார். அவரை விட சப்-இன்ஸ்பெக்டராக வரும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் கேரக்டர் சாத்தான் குளம் காவலர்களை நினைவுப்படுத்துவதால் தனிக் கவனம் பெறுகிறார்.

டேனி என்ற பெயரில் வலம் வரும் நாய் -க்கு டைட்டிலில் மட்டும் முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள். டேனியை பராமரிப்பவராக நடித்திருக்கும் கவின், அவரது அப்பாவாக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, அனிதா சம்பத் உள்ளிட்ட சகல நடிகர்களும் டைரக்டர் சொன்ன வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

வழக்கமாக சிட்டியில் நடக்கும் இக்கொலைக் கதையை கிராமத்தில் நடப்பது போல் காட்டி. இந்த கொலைக்களுக்கான காரணத்தையும் கொஞ்சம் மேலோட்டமாகச் சொல்லி இருக்கிறார் இயக்குநர். கமிட் ஆன ஆர்டிஸ்ட்டுகள், லொகேசன் போன்றவைகளில் காட்டிய ஆர்வத்தை திரைக்கதையில் காட்டி இருக்கலாம்.

சாய் பாஸ்கரன் இசை, பி.ஆனந்த்குமாரின் கேமரா மற்றும் எஸ்.என்.பாசிலின் எடிட்டிங் ஆகியவை டேனி-யை வெறுப்படைய வைக்காமல் செய்கிறது..

மொத்தத்தில் இந்த டேனியின் மெயின் சப்ஜெக்டான க்ரைம் நடப்பதன் காரணத்தைப் பக்காவாகச் சொல்லி இருப்பதற்காகவே ஓடிடி-யில் குடும்பத்தோடு பார்க்கலாம்

மார்க் 2.75 / 5