இலங்கை, பாகிஸ்தான் நடப்புகள் உணர்த்தும் அபாய எச்சரிக்கை மணிகள்!

இலங்கை, பாகிஸ்தான் நடப்புகள் உணர்த்தும் அபாய எச்சரிக்கை மணிகள்!

மது அண்டை நாடுகளான பாகிஸ்தானிலும், இலங்கை தீவிலும் ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்ட அரசுகள் கடந்த சில நாட்களில் ஆட்டம் கண்டு ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சியை தரும் சம்பவமாக மாறிவிட்டது. ஜனநாயகத்தில் மக்களே மன்னர்கள், அவர்கள் தந்த தீர்ப்பின்படி தான் ஆட்சியில் அமர்ந்தனர். ஆனால் அவர்களின் ஆட்சித் திறனில் குறைபாடுகள் எழுந்தால், மக்கள் குரல் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் ஆட்சியாளரை மாற்றுவது முடியாத ஒன்றாகும்!

இலங்கையில் ஆளும் கட்சி எதிர்க்கட்சிக்கு விடுத்துள்ள அழைப்பு கூட்டு மந்திரி சபையில் இணைந்து செயல்பட வாங்க என்பதே. பொருளாதரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில் இப்படி ஓர் அழைப்பு வந்திருப்பதை ஜனநாயக முறையை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு வித்தியாசமானதாகவே தெரியும்.

உண்மையில் அப்படி ஒரு கூட்டு மந்திரி சபை வந்தால் அது நிலைக்குமா? மேலும் மக்களால் தீர்மானிக்கப்பட்ட ஆளும் கட்சி, உண்மையில் ஆட்சியை றெ முடியாத தீர்ப்பை பெற்ற எதிர்க்கட்சிக்கு எப்படி ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற முடியும்? அது வாக்காளர்களின் தீர்ப்புக்கு எதிரானதாக கருதப்படலாம் அல்லவா? நல்ல அமைச்சராக செயல்படும் எதிர்க்கட்சி நபரை ஆட்சியில் பங்கேற்க வைத்தாலும் ஆளும் கட்சிக்கு நல்ல பெயர் எடுத்துத் தரவா செயல்படுவார்?

இலங்கையில் எழுந்துள்ள இன்றைய பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வு காண எதிர்க்கட்சியில் இருக்கும் நல்ல நிபுணரை அழைத்து நடுநிலையோடு செயல்பட அழைத்திருப்பது சரி தான், அதே சமயம் ஏன் அறிவாளி நிபுணரை தேடிப்பிடித்துக் கொண்டு வந்து இருக்கலாமே என்ற வாதமும் எழுகிறது. இலங்கை சிறு தீவில் இன்றைய பிரச்சனை மலைபோல் தோன்றினாலும் விரைவில் சமாளித்து விடலாம். அதை உறுதி செய்ய இந்தியாவும், தமிழகமும் தயாராகத்தான் இருக்கும். ஆனால் பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி முற்றிலும் அரசியல் சூழ்ச்சியாகவே தெரிகிறது.

இம்ரான் கானே தனது பதவி இழப்புக்கு அமெரிக்காவின் கெடுபிடி அரசியலும் ஓர் முக்கிய காரணம் என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டியுள்ளார். ஜனநாயக நாடுகளில் இப்படிப்பட்ட காட்சிகள் தோன்ற என்ன காரணம்? முதல் பொறுப்பு நிச்சயம் மக்களின் தீர்ப்பு என்பதும் உண்மை தான். ஆனால் மக்களால் தேர்வு செய்பவரை நல்லவர் என்று எப்படி அடையாளம் காண்பது?

அழகுப் போட்டியில் நடுவரின் நிலை தான் வாக்காளர்களுக்கு! தனக்குப் பிடித்த வசீகர முகம் ஏன் முதல் இடத்தை பிடிக்கவில்லை? தேர்வு செய்யும்போது முன்பே தரப்பட்டிருக்கும் வரைவுகள் படி பல்வேறு குணாதிசயங்களுக்கு மதிப்பெண் தந்து விட்டால் அழகிய முகத்திற்கு அதிக வாக்கும் பெற முடியாது போக வெற்றி வாய்ப்பு கைத்தவறி விடும் அல்லவா? அது போன்றே இவர் தான் நல்லவர் என்று முடிவு செய்தாலும் ஒட்டுமொத்த வாக்கெடுப்பில் மிகவும் பின்தங்கி விடுவார் அல்லவா?

அதுவும் ‘வாக்குக்குப் பணம்’ நம் நாட்டில் மிக ஆழமாக வியாபித்துள்ள நிலையில் நல்லவர் ஜெயித்து ஆட்சியில் பங்கேற்க முடியாது. ஆனால் வல்லவர் எப்படியாவது ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுகிறார்! இன்றைய நிலையில் நம் நாட்டில் ஒருவாரு நிலையான ஆட்சியை அமைக்க முடிகிறது. அதற்காக நமது தேர்தல் ஆணையத்தை வெகுவாகவே பாராட்டியாக வேண்டும். ஆனால் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்கள் நம்மை ஆதிக்கம் செலுத்திட தற்போதைய சட்டத்திட்டங்கள் ஜனநாயகத்தை ஸ்திரமாக பாதுகாக்குமா?

சமீபத்து சட்டமன்ற தேர்தல்களில் உத்திரப்பிரேதசம், பஞ்சாப் உட்பட எல்லா மாநிலங்களிலும் தேர்தல் கமிஷனின் முழு கட்டுப்பாட்டில் நடைபெறாது இருந்ததை ஏற்றுக் கொண்டால் மட்டுமே விரைவில் புதிய மாற்றுச் சட்டங்கள் வந்து ஜனநாயகத்தை ஸ்திரமானதாக மாற்ற முடியும்.

உதாரணத்திற்கு சமூக வலைதளங்களில் வாக்கு சேகரிக்கும் நேரடி விளம்பரங்களை விட அதிகமாக மறைமுக விளம்பர உத்திகள் தோன்றி இருப்பதை பார்த்தோம். பேஸ்புக், ட்விட்டர் முதலிய தளங்களில் நேரடி விளம்பரத்தை கண்காணித்து கட்டுப்படுத்த முடியும். ஆனால் அதில் வெளிவந்து, உலா வரும் தகவல்களை எப்படி தடுப்பது? மேலும் ஆன்லைன் ஓட்டு போடும் முறை தேர்தல் வாக்குறுதியின் செலவுகளை ஏன் அரசு கஜானா தலையில் விழ வேண்டும்? அரசியல் கட்சிகளின் உறுதியை செயல்படுத்த அவர்களே செலவு செய்வது சாத்தியமா?

இதையெல்லாம் இந்திய தேர்தல் வாரியம் நாடு தழுவிய விவாதத்தை ஏற்படுத்தி அடுத்த தலைமுறை மாற்றங்களை கொண்டு வர முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும். நாம் ‘ஏனோ – தானோ’ ஜனநாயகம் கிடையாது, ஆனால் மெத்தனமாக இருந்து விட்டால் அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு எழுந்து வரும் தொழில்நுட்பங்கள் நமது ஜனநாயகத்தை நிலைகுலைய வைத்துவிடும் அபாயம் இருக்கிறது. அதை உணர்த்தும் அபாய எச்சரிக்கை மணிகள் இலங்கை, பாகிஸ்தான் நடப்புகள், என்ன அப்படித்தானே!

ஆர். முத்துகுமார்

error: Content is protected !!