கேரள அரசு பவானி ஆற்றில் அநியாயமாக படு வேகமாக அணை கட்டுமானத்தின் போக்கு தீவிரம்!

கேரள அரசு  பவானி ஆற்றில் அநியாயமாக  படு வேகமாக  அணை கட்டுமானத்தின் போக்கு தீவிரம்!

கேரள அரசு,அட்டப்பாடி-தேக்குவட்டை கிராமத்தில் பவானி ஆற்றின் குறுக்கில் தடுப்பணை கட்டும் பணியில் இறங்கியுள்ளது. தமிழக-கேரள அரசியலில் மீண்டும் விவகாரமாக இது மாறியிருக்கிறது.தமிழகத்தின் நீலகிரி வனப்பகுதியும், கேரளத்தின் நிலம்பூர் வனப்பகுதியும் இணையும் எல்லைப்பகுதியான அங்கந்தா எனப்படும் பகுதியில் உருவாகும் பவானி ஆறு, நீலகிரி மாவட்ட காடுகளில் 3 கிமீ தூரம் பயணித்து கேரள வனப்பகுதிகளுக்குள் நுழைந்து அட்டப்பாடி பிரதேசத்ததில் உள்ள சைலண்ட் வேலிக்கு வருகிறது. இங்கு பல கிளைகளாக பிரியும் பவானி நதியின் உயிர்முடிச்சு கிட்டத்தட்ட 24 கிமீ கடந்து முக்காலி கிராமத்தை அடைகிறது.

dam jan 23

இந்த முக்காலி கிராமத்துக்கு கிழக்கே சுமார் 24 கிமீ தூரம்தான் தமிழகப்பகுதியான ஆனைகட்டி. முக்காலியிலிருந்து வடகிழக்கே நகரும் #பவானி அட்டப்பாடியில் 35 கிமீ தூரம் வளைந்து நெளிந்து பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்களை பசுமையாக்கிவிட்டு தமிழகத்தின் பில்லூர் பகுதிக்கு வந்து சேருகிறது. பில்லூர் அணைதான் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு பெரிய அளவில் குடிநீர் தேவையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

கோவைக்கு தென்மேற்கமுத்திக்குளம் (முக்காலிக்கு தென்கிழக்கே சுமார் 30 கிமீ தொலைவில்) பகுதியில் பல்வேறு நீரோடைகளின் மூலம் உருவாகும் சிறுவாணி கேரள காடுகளில் (இதுவும் அட்டப்பாடி பிரதேசம்தான்) கோவையின் நீர்த்தேவைக்குரிய சிறுவாணி அணையில் நிரம்பிவிட்டு அதன் உபரி நீர் நேரே வடக்கு நோக்கி கிளை விரிக்கிறது. இது வெங்கக்கடவு, சித்தூர், சிறுவாணி, நெல்லே பள்ளி, கூழிக்கடவு, அகழி போன்ற அட்டப்பாடி மலைக் கிராமங்களை சுமார் 25 கிமீ கடந்து கூட்டப்பட்டி என்ற இடத்தில் பவானியுடன் கலக்கிறது.

இப்படி சிறுவாணியை சேர்த்துக் கொண்டு பவானி மேலும் சுமார் 10 கிமீ பயணித்து தமிழகத்தின் பில்லூர் அணைக்கு வந்து சேருகிறது. இதில் #அட்டப்பாடி முக்காலி பகுதியில் 2003-ல் பல்வேறு தடுப்பணைகளை கட்டத்திட்டமிட்டது #கேரளஅரசு. முக்காலியில் அணைகள் கட்டினால் தமிழகப் பகுதிகளுக்கு தண்ணீரே வராது என்று சர்ச்சை கிளப்பிய விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்கள் எடுத்ததன் விளைவு அந்தப்பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டது.2012-ல் திரும்ப தூசி தட்டப்பட்டது. சிறுவாணிக்கு குறுக்காக சித்தூர் என்ற இடத்தில் ஏற்கனவே கட்டப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட அணையை கட்ட திட்டமிட்டது கேரள அரசு. சித்தூர் அணையில் ஒரு பெரிய அணையையும், அந்த ஆறுகளின் வழியோரங்களில் 12 தடுப்பணைகளும் கட்டி 6.5 டி எம்சி தண்ணீரை எடுக்க திட்டமிட்டு அதற்கு நிதியும் அறிவித்தது. அதற்கு எதிராகவும் தமிழகத்தில் எதிர்ப்புகள், போராட்டங்கள் வெடித்தன.

இறுதியில் #சிறுவாணிநதி ஓரங்களில் அணைகட்ட சின்ன ஆய்வைக்கூட செய்யாமல் கேரள அரசு ஒதுங்கிக் கொண்டது. அதற்குப் பிறகு கடந்த ஆண்டும் சிறுவாணி, சித்தூரில் அணைகட்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலை பெற்று, அணைகட்ட ஆய்வுப்பணிகளை தொடங்கியது. அதற்கும் தமிழகத்திலிருந்து எதிர்ப்பு, போராட்டங்கள். #முக்காலிக்கு கீழே தேக்குவட்டை என்ற கிராமத்தில் கடந்த 10 நாட்களாக தடுப்பணைகட்டும் பணியில் இறங்கியுள்ளது கேரள அரசு.

கோவை- கேரள எல்லைப்பகுதிகள் மீண்டும் பதற்றத்திலும், பரபரப்பிலும் ஆழ்ந்துள்ளது. தற்போது தடுப்பணை கட்டப்படும் தேக்குவட்டை கிராமம் கோவையிலிருந்து மன்னார்காடு (கேரளா) செல்லும் வழியில் 70 கிமீ தாவளத்தை அடுத்து வலது புறம் அருகே 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கே 50-க்கும் மேற்பட்ட தமிழர்கள் மற்றும் பழங்குடி குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களின் சுமார் 500 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியை 50 எச்.பி. மோட்டார் பம்ப் செட் மூலம் எடுத்து குழாய்கள் வழியே கொண்டு சென்று கொடுக்க திட்டம் செய்துள்ளதாம் கேரள அரசு. இதேபோல் இந்த தடுப்பணைக்கு முன்னும் பின்னும் பவானி ஆற்றின் குறுக்கே 5 இடங்களில் உடனடியாக தடுப்பணை கட்டி அங்குள்ள கிராமங்களுக்கும் இதேபோல் பம்ப் செட் மூலம் தண்ணீர் கொடுக்க முடிவு செய்துள்ளது.

பவானி வறண்டு கொண்டிருக்கிறது. கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம் குடிநீர் ஆதாரங்கள் மோசமாகியுள்ளன. இந்த நிலையில் அட்டப்பாடியிலேயே அணைகட்டித்தடுக்கப்பட்டால் நிலைமை என்னவாகும்?

கே.எஸ் . இராதாகிருஷ்ணன்

Related Posts

error: Content is protected !!