September 21, 2021

அடர் ஆரஞ்சு நிறம் கலந்த ப்ளூ கலர் ஜெர்சி நிரந்தரமல்ல – கோலி நம்பிக்கை!

இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளின் சீருடை ப்ளூ கலரை அடிப்படையாக கொண்டது என்பதால், இந்திய அணிக்கு மாற்று சீருடை வடிவமைக்கப்பட்டது. அடர் ஆரஞ்சு நிறம் கலந்த ப்ளூ கலர் ஜெர்சி புதிதாக வடிவமைக்கப்பட்டது. ஆனால், இந்த ஜெர்சி ரசிகர்களின் விமர்ச னத்திற்கு உள்ளானது. இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் ஊழியர்களின் சீருடை போல இருக்கிறது என்று பலரும் கிண்டல் செய்ய, ஸ்விக்கி டெலிவரி பாய்ஸ்களின் டிரெஸ் போல இருக்கிறது என்றும் கேலிக்கள் எழுந்த நிலையில் நீல நிற ஜெர்சி அணிந்து விளையாடுவதே பெருமையாக கருதுகிறோம் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி இன்று தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதனிடையே, நாளை (ஜூன் 30ம் தேதி) இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆரஞ்சு நிற ஜெர்சி அணிந்து பங்கேற்பதாக அறிவிப்பு வெளியானகி, இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி பங்கேற்க உள்ள ஆட்டத்திற்கான ஆரஞ்சு நிற ஜெர்சி அதிகாரப்பூர்வமாக நேற்று வெளியிடப் பட்டது.

இதையடுத்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது இங்கிலாந்துடனான போட்டியில் புதிய ஜெர்சி அணிந்து விளையாடுவது குறித்து ,”ஒரு போட்டியில் இந்த ஆரஞ்சு நிற ஜெர்சியை அணிந்து கொள்ளலாம். நிரந்தரமாக இந்த ஜெர்சியை அணிந்துகொண்டு விளையாடவேண்டிய அவசியம் இருக்காது என நான் நினைக்கிறேன்.நீலம் தான் எப்போதும் நம் வண்ணம். நாங்கள் நீல நிற ஜெர்சியை அணியும்போது பெருமையாக கருதுகிறோம். எனினும், புதிய ஜெர்சியில் உள்ள நீலம், ஆரஞ்சு வண்ணங்கள் எனக்கு பிடித்திருக்கிறது” என்று விராட் கோலி தெரிவித்தார்.

ஆனாலும் இந்திய அணிக்கு ஆரஞ்சு நிற ஜெர்சி வழங்கப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, நாட்டையே காவிமயமாக மாற்ற முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி இருந்ததும் இந்த புதிய சீருடையுடன் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் ஊழியர் இருக்கும் புகைப்படமும், புதிய ஜெர்சியுடன் விராட் கோலி இருக்கும் புகைப்படமும் போட்டு மீம்ஸ்கள் பரவுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.