March 31, 2023

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களுக்கும் 200 சதவீதம் சுங்கவரி!

புல்வாமாவில் இந்திய வீரர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ் தானுக்கு இந்தியா வழங்கி இருந்த ” வர்த்தக நட்பு நாடு’ என்ற சிறப்பு அந்தஸ்து மத்திய அரசு ரத்து செய்ததன் தொடர்ச்சியாக பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்கள் மீதான சுங்க வரி 200% ஆக உயர்த்தியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு வழக்கப்பட்ட வர்த்தக ரீதியில் அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை விலக்கி கொள்ள முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ‌அருண் ஜெட்லி நேற்று தெரிவித்தார். அதோடு, தூதரகங்கள் மூலமாக பாகிஸ்தானை தனிமைப்படுத்த முயற்சிகளை வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொள்ளும் எனத் தெரிவித்தார். மேலும் பாகிஸ்தானை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்த அனைத்து முயற்சிகளையும் வெளியுறவுத் துறை அமைச்சகம் மேற்கொள்ளும் எனவும் அருண் ஜெட்லி குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான சுங்க வரி 200 சதவீதம் ஆக உயர்த்தியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “பாகிஸ்தானுக்கான மிகவும் வேண்டப்பட்ட நாடு என்ற அந்தஸ்தை உடனே நீக்குவது என அமைச்சரவை முடிவு செய்துள்ளது. புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து சுங்கவரி உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து பழங்கள், சிமெண்ட், பெட்ரோலியப் பொருட்கள், தோல் பொருட்கள் உள்ளிட்டவை இந்தியாவிற்கு இறங்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 2017-18ம் ஆண்டில் வர்த்தகம் 3,482 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.