October 26, 2021

துரைக்கண்ணு மரணப்படுக்கையில் இருந்த போது நெருக்கடி? – மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!

வர இருக்கும் சட்டசபைத் தேர்தல் செலவுக்காகப் பதுக்கப்பட்ட 800 கோடி ரூபாயை பறிமுதல் செய்த பின்னர் அமைச்சர் துரைக்கண்ணு மரணச் செய்தி வெளியிடப்பட்டது என்றும் அந்த மரணத்தை மீட்பதற்காக காவல் துறையினர் கந்துவட்டிக்கார்களை போல் நடந்து கொண்டதாகவும் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை

தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற போதும், அவர் சுயநினைவின்றி மரணப் படுக்கையில் உயிருக்குப் போராடியபோதும், மாற்றுக் கட்சியினரும்கூட அவர் நலம் பெற்றுத் திரும்ப வேண்டும் என்பதையே விரும்பினர். ஆனால், சொந்தக் கட்சிக்காரர்களான அ.தி.மு.க.வின் தலைமையோ, அமைச்சர் தரப்பிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்த பல நூறு கோடி ரூபாயைத் திரும்பப் பெறுவதற்காக, அவரது குடும்பத்தினருக்கு நெருக்கடி கொடுத்தது என்றும், பணத்திற்குத் தேவையான உத்தரவாதம் கிடைத்தபிறகே, அமைச்சரின் மரண அறிவிப்பு வெளியானது என்றும், அதிர்ச்சி தரும் செய்திகள் நாளேடுகளிலும், புலனாய்வுப் பத்திரிகைகளிலும் விரிவாக வெளியாகியுள்ளன.

அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், தங்களுக்குப் பதவி தந்து வாழ்வளித்ததாக உதட்டளவில் மட்டும் உச்சரிக்கும் ஜெயலலிதாவின் மரணத்தின் மர்மத்தையே புதைத்தவர்கள். எளிமையாகத் தோற்றமளித்த – அதிகம் அறியப்படாத ஓர் அமைச்சரின் மரண அறிவிப்பில் மர்மம் இருக்கலாம் என்பதைப் புறக்கணிக்க முடியவில்லை.

ஊழல் வாயிலாக எடப்பாடி பழனிசாமியும் அவரது அமைச்சர்களும் கொள்ளையடித்துச் சேர்த்த பணத்தின் ஒரு பகுதி, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் செலவுகளுக்காக மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அதைக் கேட்டுத்தான் அமைச்சரின் குடும்பத்தாரிடம் ‘விசாரணை’ நடைபெற்று, பணத்தை மீட்டதற்குப் பிறகே, அமைச்சரின் மரண அறிவிப்பு வெளியானதாகவும், பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. மீட்கப்பட்ட தொகையின் மதிப்பு 300 கோடி ரூபாய் முதல் 800 கோடி வரை இருக்கும் என்றும், அதிர வைக்கும் செய்திகள் வெளியாகின்றன

மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவரான கும்பகோணம் மணஞ்சேரி பகுதியைச் சேர்ந்த கள்ளப்புலியூர் ஊராட்சி மன்றத் தலைவரும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவராகக் குற்றம் சாட்டப்பட்டவருமான முருகன் என்பவரை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். அவர் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்துச் சாலை மறியல் செய்த மறைந்த அமைச்சரின் ஆதரவாளர்களான மேலும் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊழலில் மூழ்கி, ஊழலில் திளைத்து, ஊழலையே முழுநேர வேலைத் திட்டமாகக் கொண்டுள்ள முதல்வர். பழனிசாமி அரசு, கொள்ளையடித்த பணத்தை மட்டுமே நம்பி தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது என்ற அருவருப்பையே இந்த நடவடிக்கைகள் நாட்டு மக்களுக்குச் சுட்டிக் காட்டுகின்றன. சூறையாடி, வாரிச் சுருட்டிய பல கோடிக்கணக்கான பணம், கொடநாடு மர்ம மாளிகையில் பதுக்கப்பட்டிருந்ததைப் போல, அதன் தொடர்பாக மர்மக் கொலைகள் நடந்து பச்சை ரத்தம் வழியெங்கும் சிந்தியதைப் போல, இப்போதே வெவ்வேறு மாவட்டங்களில் அ.தி.மு.க. தலைமையால் பல நூறு கோடி ரூபாய் பதுக்கப்பட்டு இருக்கிறது என்கிற திடமான சந்தேகத்தை வலுப்படுத்துகிறது, மறைந்த அமைச்சர் குடும்பத்தார் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மீதான கைது நடவடிக்கைகள்.

கைது செய்யப்பட்டோர் மீது, பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார்கள் வந்தபோதெல்லாம் கண்டு கொள்ளாமல், ஆட்சித் தலைமை உத்தரவிட்டதும் சட்ட மாண்புகளைச் சட்டெனக் காற்றில் பறக்கவிட்டு, கந்துவட்டி வசூல் கூட்டம் போலத் தமிழகக் காவல்துறை செயல்படுவது, அதன் உயர்ந்த மதிப்பைப் படுபள்ளத்தில் வீழ்த்தியுள்ளது.

பணம் பாதாளம் வரை பாயும் என்ற மமதை எண்ணத்துடன் ஆட்சியாளர்கள் நாள்தோறும் கொள்ளையடித்து, அதனைக் கொண்டு சட்டமன்றத் தேர்தலை வளைத்து விடலாம் எனப் பகல் கனவு காண்கிறார்கள். மாபெரும் மக்கள் சக்திக்கு முன்னால், அ.தி.மு.க.வின் பகல்கனவு சிதைந்து சிதறிவிடும் என்பதை, 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும். வட்டியும் முதலுமாக, கூட்டு வட்டியையும் சேர்த்து, சட்டம் தன் கடமையைச் செய்யும்; அதன் கரங்கள் வேண்டுமளவுக்கு நீளும்! “இவ்வாறு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.