வந்துருச்சு – காதி இந்தியாவின் மாட்டுச்சாணி பெயிண்ட்!
சமீபகாலமாகவே மாட்டுச்சாணியும், கோ மூத்திரமும் அதிகம் புழங்கக்கூடியச் சொற்களாகி விட்டன. சமூக ஊடகங்களில் ஒரு குறிப்பிட்டக் கட்சியினரை திட்டுவதற்கு மாட்டு மூத்திரம் குடிக்கிற பார்ட்டிதானே நீ என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே மாட்டு மூத்திரத்தை பாட்டில்களில் அடைத்து விற்கிறார்கள்; நிறையப்பேர் வாங்கிக்கொண்டும் போகிறார்கள். ஏன் மாட்டு மூத்திரமும், சாணியும் கேவலமானப் பொருட்கள் ஆனது? அது பசுமைப்புரட்சி ஏற்பட்டப் பிறகு பாரம்பரிய விவசாயத்தை இகழ்வதற்காகவும், நவீன வேதியியல் விவசாயத்தை நோக்கி விவசாயிகளைத் திருப்புவதற்காகவும் உருவாக்கப் பட்டதாக இருக்கலாம். என்றாலும் கிராமங்களில் தண்டனை முறையில் ஒன்றாக மாட்டுச் சாணத்தைக் கரைத்து தலையில் ஊற்றும் பழக்கம் இருந்துள்ளதையும் மறுக்க இயலாது.
இப்படியெல்லாம் இருந்த மாட்டுச் சாணம் இன்று தொழிற்சாலைப் பொருள் ஆகிவிட்டது. ஆமாம், ஏற்கனவே சாணத்தை உரமாகப் பயன்படுத்துவதோடு அதை விபூதி போன்ற ஆன்மிகப் பொருட்களைத் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர்; அத்துடன் இப்போது பல்வேறு வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களையும் தயாரிக்கத் துவங்கியுள்ளனர். அப்படி ஒரு வரவுதான் மாட்டுச் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் ‘பெயிண்ட்’.
மோடி அரசின் தற்சார்புக் கொள்கையின் ஒரு அம்சமாகவும், சுற்றுச்சூழலைக் காக்கும் அம்சமாகவும் இந்தப் பெயிண்ட் இருக்கும் என்று கூறப்படுகிறது. காதி நிறுவனத்தின் மூலம் இது தயாரிக்கப்பட்டு விற்பனைச் செய்யப்படுகிறது. ’காதி பிராக்கிருதிக் பெயிண்ட்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பெயிண்ட் டிஸ்டம்பரை ரூபாய் 120 க்கும், எமல்ஷனை ரூபாய் 225 ற்கும் விற்பனைச் செய்கிறது.
இதனை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சந்தை விற்பனைக்கு அறிமுகப்படுத்தினார். இந்த பெயிண்டை வாசனையற்றது, விலை மலிவானது, அதாவது சந்தையில் விற்கப்படும் வேதியியல் பெயிண்ட்களை விட இது விலை மலிவானது என்று கூறப்படுகிறது.
இந்த புதுமையான பெயிண்ட் துவக்க விழாவில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, “ இது விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கும் பிரதமரின் எண்ணத்தின் செயல் வடிவம். இதனால் நகர்புறங்களில் இருந்து கிராமம் நோக்கி மக்கள் இடம் பெயரும் போக்கு அதிகரிக்கும்.” என்று குறிப்பிட்டார்.
பல்வேறு தேசிய அளவிலான ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்டு சான்றிதழ் பெற்றப் பின்னரே இப்பெயிண்ட் தயாரிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கு பி ஐ எஸ் 428 2013 தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கட்டடங்களின் உட்புறம், வெளிப்புறம் இரண்டிலும் பூசக்கூடிய இப்பெயிண்ட் நான்கு மணி நேரத்தில் உலர்ந்து விடும் என்று கூறுகின்றனர். இரண்டு வகையான பெயிண்டுகளும் வெள்ளை நிறத்தில் கிடைக்கின்றன; நீங்கள் தேவையான நிறத்தை இதில் கலரண்ட்களைப் பயன்படுத்தி ஏற்படுத்திக்கொள்ளலாம்.