18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி முன்பதிவு தொடங்கிடுச்சு: முழு விபரம்!

18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி முன்பதிவு தொடங்கிடுச்சு: முழு விபரம்!

நாடெங்கும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான பதிவு இன்று முதல் தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி முன்பதிவு இன்று மாலை 4 மணிமுதல் தொடங்கி விட்டது.

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்தும் விதத்தில், அனைத்து மாநிலங்களிலும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், மே 1 ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதனால் ஏராளமான இளைஞர்கள் தடுப்பூசி மையங்களில் குவிய வாய்ப்பு உள்ளது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில், மருத்துவமனைகளுக்கும் தடுப்பூசி மையங்களுக்கும் செல்வதற்கு பதிலாக, இணையத்தில் பதிவு செய்து அந்த நடைமுறைகளை பின்பற்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இன்று மாலை 4 மணிமுதல் 18 வயதைக் கடந்தவர்கள் www.CoWin.gov.in/home என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தது. அதன் படி, தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியுள்ளது. ஒரே நேரத்தில் ஏராளமானோர் முன்பதிவு செய்வதால் ஓடிபி எண் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளும் தேதி போன்ற விவரங்கள் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்படுகிறது.

அதேபோல், ஆரோக்ய சேது செயலின் மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதை பதிவு செய்ய, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஒன்று அவசியம் என்று தெரியப்படுத்தியுள்ளது. மேலும் உங்கள் பதிவின் போது செல்போன் நம்பரும் குறிப்பிடப்படவேண்டும். ஒரு செல்போன் நம்பரில் இருந்து நான்கு பேர் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் ஒவ்வொருவருக்கும் தனித்தனி புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நாம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் தனித்தனி செல்போன் எண்களில் இருந்து ஒருவரே பதிவு செய்வது, இரண்டாவது டோஸ் போட மற்றொரு முறை பதிவு செய்வது, தடுப்பூசி போட்ட அன்று, மது அருந்துவது, வெவ்வேறு தளங்களில் ஒருவரே பதிவு செய்வது போன்ற செயல்களை செய்யக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் பதிவு செய்வதற்கான வழிகாட்டு நெறிகள் “know how to book your appointment” என்ற தலைப்பில் 14 பக்கங்களில் தரப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!