April 17, 2021

கொரோனா பாகம் 2வது வீச்சு விரைவில் அரங்கேறும் – தென் கொரியா எச்சரிக்கை!

கண்ணுக்குப் புலப்படாமலேயே மனிதர்களுடனே பயணித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் அடுத்த 18-24 மாதங்களுக்கு நீடிக்கும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் புதிய குழு ஆய்வு கணித்துள்ளதுடன் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த நோயை அவ்வப் போது மீண்டும் தலை தூக்கும் என்று சொல்லி இருந்தது. இந்நிலையில் ‘இந்த வருட இறுதியில் கொரோனா வைரசின் இரண்டாது அலை வீசு வாய்ப்புள்ளதால், மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்’ என, தென்கொரிய அதிபர் தெரிவித்துள்ளதும் பெரும்பாலானோரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை பீதிக்குள்ளாக்கி முடக்கி வைத்துள்ள கொரோனா வைரசால் சீனாவிலிருந்து பரவத் துவங்கிய ஓரிரு வாரங்களில், வைரசால் அதிகம் பாதிக்கப் பட்ட நாடுகளின் பட்டியலில் தென்கொரியா 2வது இடத்திலிருந்தது. ஆனாலும் தென்கொரியா வில் மேற்கொள்ளப்பட்ட துரித மற்றும் கடுமையான நடவடிக்கைகள் வைரஸ் பரவலைக் குறைத்தது. இதையடுத்து அங்கு, நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்து உள்ளது. ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், ‘இந்த வருட இறுதியில் தென் கொரியாவில் மீண்டும், கொரோனா வைரஸ் பெரிய அளவில் வெடிக்கும்’ எனத் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், “தென் கொரியாவில் கொரோனாவால், 10,874 பேர் பாதிக்கப்பட்டனர்; அதில், 9,610 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்; 256 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரங்களில் புதிதாக யாரும் வைரசால் பாதிக்கப்படவில்லை. இதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது.

ஆனால், சியோலின் இட்டாவேன் மாவட்டத்தில், சிலருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளது. இதனால் எப்போது, எங்கு, யாரை கொரோனா வைரஸ் தாக்கும் எனக் கூற முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்த வருட இறுதியில், தென்கொரியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பெரிய அளவில் வெடிக்க வாய்ப்புள்ளது. அதனால், தொற்று நோய் தடுப்பு தொடர்பாக எந்த பாதுகாப்பையும் நாம் குறைக்கக்கூடாது”என்று தெரிவித்துள்ளார்