குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த பரிந்துரை!

குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த பரிந்துரை!

ரண்டு முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை செலுத்தலாம் என்று மத்திய அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

கொரோனா தொற்றின் 2வது அலை பாதிப்பு குறைந்துள்ள நிலையில், பொதுமக்கள் இடையே 3வது அலை குறித்த அச்சம் இருந்து வருகிறது. கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு தடுப்பூசி செலுத்திக்கொள்வது மட்டுமே தீர்வே என்பதால், தடுப்பூசி செலுத்துவதை மத்திய , மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. பொதுமக்களும் ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். தற்போதுவரை இந்தியாவில் சுமார் 96 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த வார இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 100 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

18 வயதுக்கு உட்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி செலுத்துவதற்கான முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்தியாவின் ஜைடஸ் கெடில்லா நிறுவனத்தின் ஊசியில்லா கரோனா தடுப்பூசியான ஜைகோவ்-டி மருந்தை 12 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. 3 டோஸ்களைக் கொண்ட இந்தத் தடுப்பூசி, 28 மற்றும் 56 நாட்கள் இடைவெளியில் செலுத்த வேண்டும்.

இந்நிலையில், 2 வயது முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனையை நடத்தி வந்தது. இந்த பரிசோதனையின் 2ம் மற்றும் 3ம் கட்ட சோதனை முடிவுகள்இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு (DCGI) அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவேக்சின் தடுப்பூசியை 2 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அவசர கால பயன்பாட்டுக்கு செலுத்தலாம் என்று இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு (DCGI) மருத்துவ நிபுணர் குழு (SEC) பரிந்துரைத்துள்ளது.

எனவே, விரைவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!