October 17, 2021

நகரத்தைத் தேடி வரும் நாட்டு மாட்டுப் பால் வியாபாரம்! – லிட்டர் 100 ரூ மட்டுமே!

உலகமே A2 புரதப்பாலைக் கொடுக்கும் நாட்டு மாடுகள் பக்கம் திரும்பிப் பார்க்கத் தொடங்கியுள்ள இந்த நிலையில், A1 மற்றும் A2 என்றால் என்னவென்று கேட்கும் நிலையிலேயே நாம் இருக்கிறோம். நாட்டு மாடுகள் இருந்தவரை நாம் பொருளாதாரத்தில் தற்சார்பு பெற்றிருந்தோம். ஆனால், இன்று உலகமய சிக்கலில் நம் இனமோ அல்லது அதற்கான அடிச்சுவடோ இல்லாத அளவிற்கு, நமது அனைத்து தற்சார்புகளையும் நாம் இழந்து நிற்கிறோம்.

milk oct 11

இயற்கையான கருவூட்டலில் தன் இனத்தைப் பெருக்கிய நம் நாட்டு மாடுகள், இன்று செயற்கை கருவூட்டலினால் சரியாக சினை பிடிக்காமல் சிக்கலில் தவித்து வருகின்றன. காரணம் செயற்கை கருவூட்டலில் இருக்கும் விந்தணு கலப்பின் காளை விந்தணு. இந்த கலப்பின காளையின் விந்தணுவும் நாட்டு மாடுகளின் கருமுட்டையும் சரியாக இணை சேர முடியாததால், தன் இனத்தைப் பெருக்க முடியா மல், கேரளாவிற்கு ஏற்றுமதியா கிறது என்பதே உண்மை. இதில் தப்பிப் பிழைத்த நாட்டு மாடுகளும், குறைவாகவே பால் கறப்பதால், இருக்கும் சில நாட்டு மாடுகளும் இன்று கேரளாவிற்கு ஏற்றுமதியாகிறது.

பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் பாலில் நல்ல பால் கிடைப்பதே அரிதாக இருக்கும் போது, இதில் நாட்டு மாட்டுப் பாலை நாங்கள் எங்கே தேடுவது என்று கேட்கலாம். ஆனால், கீழ்க் கண்ட நாடுகளில் A2 புரதப் பாலுக்கு மாறி வரும் போது, நாம் ஏன் மாற முடியாது? மனம் உண்டானால் எல்லாவற்றிற்கும் வழி உண்டு!

கென்யா நாட்டின், மாடுகளில் பாலில் நூறு விழுக்காடு A2 புரதம் இருக்கிறது.

தற்போது நியூசிலாந்து, ஆஸ்தி ரேலியா போன்ற நாடுகளில் 50:50A1 மற்றும் A2 புரதப் பால் இருக்கிறது. A2 புரதப் பாலுக்கு என்றே தனியாக நிறுவனங்கள் தொடங்கி பாலை உற்பத்தி செய்து கொடுக்கிறார்கள்.

வட அமெரிக்காவில் 50 விழுக் காடாக இருக்கும் A1 புரதப் பாலை கொடுக்கும் மாடுகளை, A2 புரதப் பால் கொடுக்கும் மாடுகளாக மாற்றுவதற்கு ஆராய்ச்சிகள் நடை பெற்று வருகின்றன.

கலப்பின மாடுகளின் பாலில் நோய் மூலக்கூறு உடைய A1 புரதம் உள்ளது. நாட்டு மாடுகளின் பாலின் A2 புரதம் உள்ளது. இது உடலுக்குத் தீமை செய்யாமல் உடலைக் காப்பாற்றுகிறது என்கிறாகள் ஆராய்ச்சியாளர்கள். நாட்டு மாடுகளில் வேர்வை நாள மும், திமிலும் இருப்பதால் பசுவின் வெப்பம் இவற்றின் வழியாகவே வெளியேறுகிறது. அதனால் நாட்டு மாடுகள் கொடுக்கும் பால் ஊட் டச்சத்து மிகுந்ததாக இருக்கிறதாம். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு தமிழகத்தில், புதிய கலாசாரமாக கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு, நாட்டு மாட்டு பால் வினியோகம் செய்வது அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர், 75 முதல், 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்படும் தானியங்கள், காய்கறிகளுக்கு, பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த வரிசையில் தற்போது, நாட்டு மாடுகளில் இருந்து கறக்கப்படும் பாலுக்கு, நகரங்களில் வரவேற்பு அதிகரித்துள்ளது.

இது குறித்து, சேலம் மாவட்டம், ஓமலுார் நாலுகால் பாலத்தைச் சேர்ந்த சிலர், ”நாட்டு மாட்டு பாலில், ‘ஏ 2’ புரதம் அதிகளவில் உள்ளதோடு, மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும் தன்மையை கொண்டுள்ளது. நாட்டு மாடுகள் ரகத்தில் சாஹிவால், சிகப்பசக்கி, காங்கேயம், கார்பார் இனங்கள், மனிதர்களுக்கு அதிகளவில் நன்மை தருகின்றன. இவைகளுக்கு, காடுகளில் மேய்வதை தவிர, வேறு செயற்கை உணவுகள் வழங்கப்படுவது இல்லை.நாட்டு மாட்டு பாலின் சிறப்பை உணர்ந்தவர்கள், எங்களுக்கு ஆர்டர் கொடுக்கின்றனர். நாங்கள் சுத்தமாக கறந்து, தண்ணீர் கலக்காமல், கலப்படமின்றி வழங்குவதால் கூடுதல் விலைக்கு விற்கிறோம்.அதே நேரத்தில், நாங்கள் வழங்கும் பாலில் தண்ணீரை கலந்தால், ஐந்து லிட்டராக மாற்றி, இன்றைய ஆவின் பால் விலையான, 44 ரூபாயை விட, குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடியும். ஆனால், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, அத்தகைய செயல்களில் ஈடுபடுவது இல்லை” என்றனர்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க பொதுச் செயலர் இது குறித்து, “நாட்டு மாடுகளின் இனத்தை பொறுத்தவரை, அவற்றுக்கென சில குணாதிசயங்கள் உண்டு. இந்த இன மாடுகளின் பால், சுத்த வெள்ளையாக இருப்பதுடன், திடத்தன்மை சற்று அதிகமாகவும், கையால் தொட்டால் ஒட்டும். ஆனால், உயரின, கலப்பின மாடுகளின் பால், மஞ்சள் கலந்த வெள்ளையாக இருப்பதுடன், தொட்டால் கையில் ஒட்டாது.நாட்டு மாட்டு பாலில், அதிகளவில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், அதை தொடர்ச்சியாக குடித்து வந்தாலே ஆரோக்கியம் மேம்படும். சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் நாட்டு மாடு வளர்ப்பு, அவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பாலின் விற்பனை அதிகரிப்பது வரவேற்கத்தக்கது. நாட்டு மாட்டு பால், ஒரு லிட்டர், 75 முதல், 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது”என்றார்.