காஷ்மீர் விவகாரம் : அமெரிக்காவில் பாகிஸ்தானியர்கள் ஆர்பாட்டம்!

நம்ம நாட்டில் உள் விவகாரமான  இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்யப் பட்டத்தை எதிர்த்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு பாகிஸ்தான் ஆர்வலர்கள் செவ்வாய்கிழமையன்று போராட்டம் நடத்தினர்.

ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு பிரிவு 370 ரத்து செய்யப்படுவதாக இந்திய அரசு அறிவித்தது. மேலும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் தனித்தனி யூனியன் பிரதேசங்களாக மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்திய அரசின் இந்த முடிவிற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகின்றன. பாகிஸ்தான் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள், முஸ்லிம் ஆதரவாளர்கள் தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக போராட்டம் நடத்தினர். இந்தியா மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கோஷமிட்டனர்.

இந்த போராட்டத்தை சிக்காகோ நகரில் உள்ள சவுண்ட் விஷன் என்ற மீடியா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. வட அமெரிக்காவில் உள்ள முஸ்லிம் மீடியா நிறுவனங்களின் முன்னோடியாக இந்த நிறுவனம் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் உள்ள மிக பெரிய முஸ்லிம் சிவில் உரிமை அமைப்புகளில் ஒன்றான கவுன்சில் ஆஃப் அமெரிக்கன் – இஸ்லாமிக் ரிலேஷன்ஸ் (Council on American-Islamic Relations) உறுப்பினர் களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். அந்த அமைப்பின் நிர்வாக இயக்குனர் நிஹாத் அவாத் செய்தியாளர்களிடம் பேசுகையில் ‘‘காஷ்மீர் மக்களுக்கு சுதந்திரம், உரிமை மற்றும் நீதி தேவை. அமெரிக்க வெளியுறவுத்துறை உடனடியாக இந்திய அரசிடம் பேசி மீண்டும் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்க வலியுறுத்த வேண்டும்’’ என்று கூறினார்.

பிற முஸ்லிம் அமைப்புகளான இஸ்லாமிக் லீடர்ஷிப் இன்ஸ்டிட்யூட் ஆப் அமெரிக்கா, ரோஹிங்கியா முஸ்லிம்கள் நல அமைப்பான பர்மா டாஸ்க் போர்ஸ், பாலஸ்தீனிய நல அமைப்புகள் ஆகியவற்றின் உறுப்பினர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

பாகிஸ்தான் ஆளுங்கட்சியான தெஹ்ரிக்-இ- இன்சாஃப் பின் அமெரிக்க பிரிவு உறுப்பினர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதேபோல் சிகாகோவில் அமைந்துள்ள இந்திய தூதரகம் முன்பாகவும் முஸ்லிம் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.

கண்டன பேரணி

அமெரிக்காவில் வசிக்கும் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் குலாம் நபி ஃபாய் வரும் சனிக்கிழமை இந்திய தூதரகம் மற்றும் வெள்ளை மாளிகை வெளியே இந்தியாவுக்கு எதிராக மாபெரும் கண்டன பேரணி நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. இடம் இருந்து ரகசியமாக நிதி பெற்ற குற்றச்சாட்டுக்காக குலாம் நபி ஃபாய்க்கு கடந்த 2012ம் ஆண்டு அமெரிக்க நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.