December 2, 2021

கோவிட் 19 – தொற்றுடன்தான் இன்னும் இரண்டு வருடமாவது வாழ்ந்தாக வேண்டும்!

கோவிட்-19 தொற்று என்பது அடுத்த வாரமோ அடுத்த மாதமோ ஏன் ? அடுத்த வருடமோ கூட தீர்வுறும் பிரச்னை அல்ல.இன்னும் குறைந்த பட்சம் இரண்டு வருடங்களாவது கோவிட்-19 தொற்று சில ஏற்ற இறக்கங்களுடன் தொடர்ந்து அதன் பாதிப்பு இருக்கத்தான் போகிறது.
மூன்று வகைகளில் இந்த கொரோனா தொற்று தொடரலாம் என மருத்துவ வல்லுநர்கள் கணக்கிடுகின்றனர்.இப்போது வந்தது ஒரு உச்சத்தை தொட்டு பிறகு குறைந்து இதை போலவே பல உச்சங்களை தொட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு குறைந்து போவது, இந்த குளிர்காலத்தில் இப்போதைய நிலையை விட ஒரு பெரும் உச்சத்தை அடைந்து பிறகு சிறு அலைகளாக குறைந்து போவது அல்லது பல சிறு அலைகளாக தொடர்ந்து இரண்டு வருடங்களை கடந்து குறைந்து போவது என்பதே இந்த மூன்று பாதைகள்.
லாக்டவ்ன் என்பதன் மூலம் ஏற்படுத்தப்பட்ட சமூக விலகியிருத்தலால் இந்த நோய் பல இலட்சங்கள் கோடிகள் என பரவாமல் ஆயிரங்கள் இலட்சங்கள் என்ற அளவில் மட்டுமே பரவி உலகம் முழுவதும் பலர் தற்காலிகமாகவே இந்த தொற்றில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.
ஆனால் பொருளாதார வாழ்வியல் காரணங்களுக்காக லாக்டவ்னை தளர்த்தும் போது மீண்டும் கோவிட் தொற்றின் பரவல் படிப்படியாக மிக அதிகமாகவே ஆகப்போகிறது.
ஒரு குறிப்பிட்ட சதவிகித அளவிற்கு மேலே நோய் தொற்று பரவினால் சமூக விலகியிருந்தலை செயல்படுத்தும் பொது கட்டுபாடுகளை மீண்டும் பயன்படுத்தவே வேண்டியிருக்கும்.
இப்படி தொற்று பரவும் சதவிகிதம் கூடும் போது விலகியிருத்தலும் பிறகு தளர்த்தலும் என தொடர்ந்து முயன்று வரும்போது சமூகத்தில் 55 சதவிகித பேருக்கு ஹெர்ட் இம்யூனிட்டி என்ற சமூக நோய் எதிர்ப்பு சக்தி உருவான பிறகு இந்த கோவிட் தொற்றின் பரவலின் வீரியம் என்பது படிப்படியாக குறைந்து போகும்.
இதற்கு நடுவே தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கான கட்டமைப்பை பன்மடங்கு அதிகரிப்பது, நோய்  குணமாக்கும் மருத்துவத்தை முறைப்படுத்தி இன்னும் திறன் மிகுந்ததாக ஆக்குவது,மிதமான பாதிப்பு உடைய நோயாளிகளை அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது,நோய் தடுப்பு ஊசி கண்டுபிடித்தல் மற்றும் தயாரிப்பை பன்மடங்கு முனைப்புடன் செயல்படுத்துவது ஆகியவயை.
இவை அனைத்தையும் விட இன்று மக்கள் பழகியிருக்கும் கைகளை சுத்தமாக வைத்து இருத்தல், மாஸ்க் அணிதல்,கூட்டமான இடங்களை தவிர்த்தல், சமூக இடைவெளியுடன் வரிசைகளை கடைபிடித்தல், அரசு அவ்வப்போது வெளியிடும் கட்டுப்பாடுகளை மிகுந்த சிரத்தையுடன் கடைபிடித்தல் மற்றும் மருத்துவர்களுக்கும் மருத்துவதுறைக்கும் முழுமையான ஒத்துழைப்பை நல்குதல் ஆகியவை நமது அன்றாட பழக்கமாக கொண்டு தொடர்வதுமே இந்த கோவிட் தொற்றுடன் வாழ பழகி இன்னும் குறைந்த பட்சம் இரு ஆண்டுகளிலாவது இந்த நோயின் தாக்கத்தை நன்காக குறைக்கமுடியும்.
இந்த கோவிட் தொற்றை கட்டுபடுத்துவது – அரசின் கடமை மட்டும் அன்று – மருத்துவர்களின் கடமை மட்டும் அன்று – இது நம் அனைவரது கடமையும் பொறுப்பும் கூட்டுமுயற்சியுமே.
கார்த்திகேயன் தரிபெல்