March 22, 2023

பிளாட்பாரத்துக்குக் கூட வரத் தடை – 50 ரூ ஆனது டிக்கெட் கட்டணம்!

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 126 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் அதிக அளவில் மக்கள் ஒன்றுகூடலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 250 ரயில்வே நிலையங்களில், ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் விலை ரூ. 50 ஆக உயந்துள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ ரயில்வே நிலையங்களில் தேவைக்கு அதிகமாக மக்கள் கூடுவதைத் தடுக்கும் பொருட்டு, நாடு முழுவதும் 250 முக்கிய ரயில்வே நிலையங்களில், ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் விலை ரூ. 10-இல் இருந்து ரூ. 50 ஆக உயந்துள்ளது. இது ஒரு தற்காலிக நடவடிக்கைதான். கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதமே இத்தகைய தருணங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விலையை உயர்த்துவதற்கான அதிகாரத்தை மண்டல ரயில்வே மேலாளர்களுக்கு வழங்கியுள்ளோம்’ என்று தெரிவித்தார்.