இந்த கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது!-
கொஞ்சம் அதீத வீரியத்துடன் இரண்டாம் அலையாக பரவும் இந்த கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என தோன்றுவதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானம் கெப்ரிசிஸ் தெரிவித்துள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று 2வது அலை வீசி வருகிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக தலைவர்கள் கடும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் தகுதி உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் வலியுறுத்தப்படுகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா பரவல் முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் டெட்ராஸ் அதானம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பல்வேறு நாடுகளில் உள்ள மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. பல நாடுகளில் தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும் மக்களின் அலட்சியம் காரணமாக அது தொடர்ந்து பரவி வருகிறது.
கொரோனா பரவல் குறித்த பல்வேறு குழப்பங்கள், அந்நோய்க்கான சிகிச்சையில் உள்ள சிக்கல்களை பார்க்கும்போது அது முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என தோன்றுகிறது. இளம் வயதினர் தங்களுக்கு கொரோனா வராது என நம்பி அலட்சியமாக இருப்பது தவறு. பொதுமக்களின் ஒத்துழைப்பு மூலம் இத்தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியம் என்பது நமக்கு தெரியவந்துள்ள உண்மை” என்று அவர் கூறினார்.