December 8, 2022

அமெரிக்காவில் கொரோனா; தகனம் செய்யவோ புதைக்கவோ முடியாத சூழல்!

சர்வதேச அளவில் தன்னை பெரியண்ணாவாகவும்  பெரும் பணக்கார வல்லரசு நாடாகவும் கருத வைக்கும் அமெரிக்கா தற்போது கொரோனா என்னும் கண்ணுக்குத் த்ரியாத வைரஸின் கோரப் பிடியில் சிக்கித் சின்னா பின்னமாகி வருகிறது.

இப்போதைய நிலைமையில் அமெரிக்காவில் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையும் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவு மிக அதிகமாக 50,000-த்தை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது. அங்கு நாள் ஒன்றுக்கு 1500 முதல் 2000 பேர் வரை உயிரிழப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் வீட்டுக்குள் அடைந்து இருக்கும் மக்கள் மனதளவில் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக, நியூயார்க் நகரின் நிலையைப் பற்றி விவரிக்க வார்த்தைகளே இல்லை. நியூயார்க்கில் மட்டும் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப் பட்டு 23,474 பேர் உயிரிழந்துள்ளனர். ஆரம்பகட்டத்திலேயே தனிமனித இடைவெளியை அமல்படுத்தாததே வைரஸ் அதிகளவில் பரவியதற்குக் காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் நியூயார்க் நகரில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் இடத்தில் நின்ற ட்ரக்கில் பல அழுகிய உடல்கள் கண்டறியப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

நியூயார்க்கின் புரூக்ளின் நகரில் உள்ள உடிக்கா அவென்யூவில் உள்ளது ஆண்ட்ரூ டி.கிளெக்லி என்னும்  இறுதிச் சடங்கு செய்யும் இடம். இந்தக் கட்டடத்துக்கு வெளியில் நேற்று முன்தினம் முதல், இரண்டு வாடகை ட்ரக்குகள் நின்றிருந்துள்ளன. திடீரென நேற்று காலை முதல் அதிலிருந்து துர்நாற்றம் வீசத்தொடங்கியுள்ளது. இதனால் பதற்றமடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவலர்களை போனில் அழைத்து தகவல் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் இரு ட்ரக்கிலும் 12-க்கும் அதிகமான உடல் கள் அழுகிய நிலையிலிருந்ததைக் கண்டுபிடித்தனர்.

அவை அனைத்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 2 ட்ரக்குகளிலும் மொத்தமாக எத்தனை உடல்கள் இருந்தது என்பது பற்றி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ட்ரக்கில் இருந்த குளிரூட்டப் பட்ட பெட்டிகள் செயலிழந்ததால் உடல்கள் அழுகி துர்நாற்றம் வீசியதாகக் கூறப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள இறப்பு பராமரிப்பு இடங்கள், மருத்துவமனைகளில் உள்ள சவக் கிடங்குகள், கல்லறைகள், உடல் தகனம் செய்யும் இடங்கள் ஆகியவை கடந்த சில வாரங்களாக மிகவும் அசாதாரணமான நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃபுளூவுக்குப் பிறகு ஒரு வைரஸால் தற்போதுதான் நியூயார்க் மீண்டும் கடுமையான சோதனைக் காலத்தைச் சந்தித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலேயே உயிரிழப்பவர்களின் உடல்களை மிக விரைவாகத் தகனம் செய்யவோ புதைக்கவோ முடியாத சூழல் நிலவுகிறது.

இதனால் குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்படுகின்றன. பெரும்பாலான இடங்களில் அதுவும் இல்லாததால் தேவாலங்களில் அதிக சக்திவாய்ந்த ஏர் கண்டிஷனர்களை பயன்படுத்தி அங்கு இறந்த உடல்கள் வைக்கப்படுகின்றன. இப்படி இருந்தும் தினமும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே செல்வதால், இறுதிச் சடங்கு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தநிலையில்தான், புரூக்ளின் நகரின் நெருக்கமான சாலைகளில் அழுகிய நிலையில் இறந்தவர்களின் உடல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்கவேண்டுமென இறுதிச் சடங்குகளை ஒழுங்குபடுத்தும் குழு மற்றும் நியூயார்க் மாகாண சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இது பற்றி டெய்லி நியூஸ் ஊடகத்திடம் பேசியுள்ள புரூக்ளின் நகரக் காவலர்கள், “உடல் தகனம் செய்யும் இடத்துக்கு அருகிலிருந்த 2 ட்ரக்குகளில் சுமார் 15 உடல்கள் இருந்ததைக் கண்டோம். அவை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அதில் மொத்தம் எத்தனை உடல்கள் இருந்தன என்பது சரியாகத் தெரியவில்லை. நேற்று காலை அந்தப் பகுதி வழியாக நடந்து சென்ற யாரோ ஒருவர் இந்தத் துர்நாற்றத்தை அறிந்து எங்களுக்குத் தகவல் கொடுத்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அழுகிய நிலையில் இருக்கும் இந்த உடல்களை உடனடியாகப் புதைக்கவும் தகனம் செய்யவும் ஏற்பாடு நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளனர்.