August 3, 2021

சில மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை: -காரணம் =ஈகோ இஷ்யூ?!

நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்தியபிரதேசம், கர்நாடகம் போன்ற சில மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொஞ்சம் ஆறுதல் செய்தியாக தமிழகத்தில் இதுவரை ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் மனிதர்களின் நுரையீரலை தாக்கி அதை பலவீனமடைய செய்வதால் நோயாளிகள் பலருக்கு கடுமையான மூச்சு திணறல் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. அவர்கள் உயிர் பிழைக்க தொடர்ந்து ஆக்சிஜன் கொடுக்கப்பட வேண்டும்.இதனால் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கான தேவை அதிகரித்து உள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயாரிக்கும் ஆலைகள் இல்லாத மாநிலங்கள் மற்ற மாநிலங்களிடம் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி வருகின்றன,

தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் மத்தியபிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.

ஆனால் கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் மற்ற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை விநியோகிக்க மாநில அரசு தடை விதித்துள்ளது. இதனால் செப்டம்பர் 7ம் தேதி முதல் அண்டை மாநிலங்களுக்கான ஆக்சிஜன் சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மத்தியபிரதேசம் மற்றும் கர்நாடகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

மத்தியபிரதேசத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாட்டால் 4 நோயாளிகள் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதை மத்தியபிரதேச அரசு மறுத்துள்ளது. இதேபோல் பஞ்சாப் மாநிலமும் பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை விநியோகிக்க தடை விதித்துள்ளது.

டெல்லியில் ஆக்சிஜன் சிலிண்டருக்கான தேவை அதிகரித்ததால் ஆக்ராவில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தூர் மற்றும் போபாலில் தேவை அதிகரித்தபோது உத்தபிரதேசத்தில் உள்ள ஜான்சி மற்றும் புந்தேல்கண்டின் மற்ற பகுதிகளும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் பாதிக்கப்பட்டன.

கர்நாடகத்திலும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில், 19 மாவட்ட மருத்துவமனைகளில் 13ல் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லை. இதனால் 50 நோயாளிகளை பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற வேண்டியிருந்தது.

கர்நாடகத்தில் நாள் ஒன்றுக்கு 100-150 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவைப்பட்ட நிலையில் தற்போது ஒரு நாளைக்கு 500 மெட்ரிக் டன் வரை தேவை அதிகரித்துள்ளது. இந்த தேவையை பூர்த்தி செய்ய கர்நாடக அரசு போராடி வருகிறது. இதற்கிடையில் மத்திய சுகாதாரத்துறை பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் விநியோகம் செய்வதற்கு தடை விதிக்கக்கூடாது என மாநில அரசுகளை வலியுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளது.

இப்படி ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தேவை அதிகரித்துள்ள நிலையில் அதன் விலையும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு தேசிய மருந்து விலை ஆணையத்தால் ஆக்ஸிஜனுக்கான உச்சவரம்பு விலை ரூ .17 ஆக நிர்ணயிக்கப்பட்டது. தெலுங்கானாவில், வட மாநிலங்களில் இருந்து ஆக்சிஜனை இறக்குமதி செய்யத் தொடங்கிய பின்னர், ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலை ஒரு கன மீட்டருக்கு ரூ .10 லிருந்து கன மீட்டருக்கு ரூ .50 ஆக உயர்ந்துள்ளது.

ஆந்திராவில், ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலை அதிகரிக்கவில்லை என்றாலும், தனியார் மருத்துவமனைகள் ஆக்சிஜன் கொண்ட படுக்கைகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கின்றன. கர்நாடகாவில், ஒப்பந்த வகையைப் பொறுத்து ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலை ரூ.135ல் இருந்து ரூ.350 ஆக அதிகரித்துள்ளது.

பல தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட முக்கிய காரணம் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் விநியோகஸ்தர்கள் இடையே நிலவும் வேறுபாடு தான் என கூறப்படுகிறது. அவர்கள் இந்த வேறுப்பாட்டை தீர்த்து கொண்டால் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்படுவது தவிர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.