கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய உயிர் நாசத்தை விட மிக அதிகமாக மாசு தூசியால் விளைகிறது!

கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய உயிர் நாசத்தை விட மிக அதிகமாக மாசு தூசியால் விளைகிறது!

ஒரு வழியாக கொரோனா பெருந்தொற்றை வீழ்த்தி விட்டோமா? அதுதான் இல்லை. விவாதிக்கப்பட்டு வருவது கொரோனா பெருந்தொற்று, அதாவது Pandemic என்ற நிலை மாறி பல இடங்களில் தோன்றி வரும் நோய் அதாவது Endemic என்ற அந்தஸ்தை எட்டி விட்டதா? என்பதை பற்றிதான். அதாவது பல்வேறு தொற்று நோய்கள் நம்மிடம் பரவலாகவே இருக்கும், ஆனால் அதனால் எல்லோருக்கும் பாதிப்பு இருக்காது. அப்படியே தொற்று ஏற்பட்டாலும் நோயின் தாக்கம் உயிருக்கு ஆபத்தாய் முடியாது.அந்த இறுதிக் கட்டத்தை கொரோனா பெருந்தொற்று எட்டி விட்டது என்று உறுதிப்பட எந்த நாடும், உலக சுகாதார அமைப்பும் கூறவில்லை. ஆனால் பெரும்பாலும் பல பொது இடங்களில், பலர் சங்கமிக்கும் இடங்களில் முன்பு கடைப்பிடிக்கப்பட்ட எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. சட்டப்படி தேவையில்லை என்ற அளவுக்கு மாறிவிட்டது.

கடந்த ஒரு வாரத்தில் மிக அதிகமான தொற்று அமெரிக்காவில் பதிவாகியுள்ளது, அதன்படி 6 லட்சத்து 65 ஆயிரம் பேர் பாதிப்படைந்துள்ளனர். இந்தியாவில் 92 ஆயிரம் பேர் பாதிப்படைந்து அப்பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. உலகளவில் கிட்டத்தட்ட 40 லட்சம் பேர் அதே ஒரு வாரத்தில் பாதிப்படைந்துள்ளனர். இதில் நல்ல செய்தி என்னவென்றால் கொரோனா பெருந்தொற்றுக்கு பலியானோர் உலகெங்கும் அதே ஏழு நாளில் 8156 பேர் மட்டுமே. அதில் அமெரிக்காவில் 1881 பேரும் இந்தியாவில் 91 பேர் மட்டுமேயாகும்.

ஆக முழுமையாக முடிவுக்கு வராத நிலையில் பாதிப்பு மிக சொர்ப்பமாக இருப்பதால் சமூக விலகல், மாஸ்க் அணிவது தேவை இல்லை என்று முன்பு போல் சகஜ வாழ்வுக்கு மாறிட நேரம் வந்துவிட்டது என்று எண்ணினாலும் ஒருவேளை மீண்டும் சுனாமியாய் புதிய வேகத்தில், அசுரத்தனமாக மறுபிறவி எடுத்து வீரியத்துடன் தாக்கினால் பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி இருக்கும் நிலையில் பல அப்பாவி பொது மக்களின் நிலை கவலை தரும் வகையில் துயரமான நிலையாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. இதிலிருந்து தற்காத்துக் கொள்ள நமக்கு இருக்கும் ஒரு தற்காப்பு தடுப்பூசி போட்டு கொள்வதுதான்!

இதில் இந்தியா உலகிற்கே நல்ல உதாரணமாக இருக்கிறோம். நமது ஜனத்தொகையில் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசிகளை பெற்று விட்டார்கள். உலக ஜனத்தொகையில் 63 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி பெற்றிருக்கிறார்கள்.
குறைந்த வருவாய் கொண்ட ஏழைகள் வாழும் நாடுகளில் ஒரு தவணை தடுப்பூசி பெற்றவர்கள் உலகெங்கும் 18 சதவிகிதம் பேர் மட்டுமே ஆகும்.

அவர்களின் நிலையறிந்து தடுப்பூசிகளை தந்து உதவிய நாடுகளில் இந்தியா முன்னணியில் இருப்பதும் பெருமையான செய்தியாகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா ஒருங்கிணைந்து செயல்பட்டு கொரோனாவை வெற்றி கொண்டதுபோல் இதர பல தலைவலிகளுக்கும் நல்ல தீர்வை கண்டுபிடித்து செயல்படுத்தியாக வேண்டும்

உங்களுக்குத் தெரியுமா?

ஐ.நாவின் சுற்றுசூழல் ஆய்வறிக்கையின் படி உலக அளவில் கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய உயிர் நாசத்தை விட மிக அதிகமான நாசத்தை மாசு தூசு நம்மிடையே ஏற்படுத்தி வருகிறது. பூச்சிக்கொல்லிகள், பிளாஸ்டிக், மின் சாதன கழிவுகள் போன்றவற்றை நமது சுற்றுப்புறசூழலை மாசுபடுத்தி ஆண்டுக்காண்டு குறைந்தபட்சம் ஒரு கோடி பேரின் சாவுக்கு காரணமாக இருக்கிறது. நிமோனியா, புற்றுநோய், இருதய கோளாறு என பல்வேறு மரண நோய்களின் பெயரை அடுக்கிக் கொண்டே போகலாம். உண்மை நிலை என்னவென்றால் மரணத்தில் ஆறில் ஒன்று சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் தான் ஆகும்!

ஆக ஆண்டுக்காண்டு கிட்டத்தட்ட 70 லட்சம் பேர் கரும்புகை மாசு காரணமாக மிக இளம் வயதிலேயே நம்மிடமிருந்து விடை பெற்றுச் செல்கின்றனர்.மாசுபாடு அதிகரிப்பதற்கு அரசாங்கங்களும் நிறுவனங்களும் காரணமாக இருப்பதைச் சுட்டிக் காட்டியிருக்கும் ஐ.நா.வின் இந்த அறிக்கை, சில அபாயகரமான வேதியியல் பொருட்களுக்கு உடனடியாகத் தடைவிதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. மேலும் மாசுபட்ட பகுதிகளைச் சுத்தம்செய்ய வேண்டும் என்றும் அந்தப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களைப் பாதுகாப்பான வேறு பகுதிகளில் குடியமர்த்த வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

இந்த அறிக்கையின் வரைவாளரான சூழலியல் ஆர்வலரும் மனித உரிமைச் செயல்பாட்டாளருமான டேவிட் பாய்ட், மாசுபாடு மற்றும் நச்சுக் கூறுகள் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதில் தற்போது பின்பற்றப்பட்டுவரும் அணுகுமுறை தோல்வியடைந்துவிட்டது எனக் குறிப்பிட்டிருக்கிறார். சுற்றுச்சூழலுக்கான உரிமை தொடர்ந்து மீறப்பட்டுவருவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார். இனியும் தாமதிக்காமல் தூய்மையான சுற்றுச்சூழல் அடிப்படை மனித உரிமை என்று ஐநா மற்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்து அதை உலக நாடுகள் கடைப்பிடிக்க உத்திரவிடவேண்டும்.

ஆர். முத்துக்குமார்

error: Content is protected !!