கொரோனா பேட்ச் என்றால் இப்போது +2 தேர்வுக்குத் தயாராகும் பிள்ளைகள்தான்!

கொரோனா பேட்ச் என்றால் இப்போது +2 தேர்வுக்குத் தயாராகும் பிள்ளைகள்தான்!

டந்த பல ஆண்டுகளாக பள்ளியில் 10,11,12 வகுப்பு மாணவர்களைப் பயிலரங்கு வாயிலாகச் சந்தித்து வருகின்றேன். இவர்களுக்கு இரண்டு விதங்களில் நிகழ்ச்சி திட்டமிடப்படும். ஒன்று ஆகஸ்ட் மாதத்தில் அந்த ஆண்டுக்காக அவர்களைத் தயார்படுத்துவது, மற்றொன்றும் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை பொதுத்தேர்வுக்காகத் தயார்படுத்துவது. தயார்படுத்துவது என்றால் பாடத்திட்டம் தவிர்த்து, அவர்களுடைய அணுகுமுறை, இடையூறுகளைக் கையாளுவது, பயத்தைப் போக்குவது, கவனச் சிதறல்களைத் தவிர்ப்பது உள்ளிட்ட அவர்களுக்கு அப்போது தேவையாக இருப்பவற்றைக் கண்டறிந்து அவற்றில் உதவி செய்வது, வழி காட்டுவது.

எல்லாவற்றையும் கொரோனாவிற்கு முன்பு / பின்பு எனப் பிரிப்பதுபோல் இவர்களையும் வகைப்படுத்திவிடலாம். வகைப்படுத்தி முத்திரை குத்திவிடுவதால் மட்டும் எந்த நன்மையும் விளைந்துவிடுவதில்லை. முந்தைய ஆண்டுகளில் அவர்களைச் சந்தித்ததற்கும் இப்போது அவர்களைச் சந்திப்பதற்கும் மிகுந்த வேறுபாட்டினை உணர முடிகின்றது. அதுவும் குறிப்பாக இந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்வு எழுத உள்ளவர்கள்.

‘அதான் கொரோனா முடிஞ்சு எல்லாம் இயல்புக்கு வந்துடுச்சே, இவங்களுக்கு என்ன பிரச்சனை!?’ எனும் கேள்வி வரலாம். 2020ம் ஆண்டு 10வகுப்பு பொதுத்தேர்வுதான், முதன்முதலில் தேர்வு நடத்தப்படாமல் கைவிடப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டவர்கள். அவர்கள்தான் ’கொரோனா பேட்ச்’ என்றும் முத்திரையைப் பெற்றனர். உண்மையில் அவர்கள் கொரோனா பேட்ச் என்று அழைக்கப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. காரணம் அவர்கள் அனைவரும் படித்து தேர்வுக்குத் தயாராக இருந்த நிலையில் 2020 ஏப்ரல் மாதம் தேர்வு நடத்தமுடியாமல், தேர்ச்சி அறிவிக்கப்பட்டவர்கள். 11ம் வகுப்பு ஏறத்தாழ அவர்களுக்கு ஆன்லைன் வழிக் கல்வியாக இருந்தது, 12ம் வகுப்பில் 70% பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி, அவர்கள் தற்போது கல்லூரிகளில் முதலாம் ஆண்டில் இருக்கின்றவர்கள்.

பள்ளியில் கொரோனா பேட்ச் என்று யாரையேனும் குறிப்பிட வேண்டுமென்றால், இப்போது +2 தேர்வுக்குத் தயாராகும் பிள்ளைகளைச் சொல்லலாம். காரணம் அவர்கள் சுமந்து கொண்டிருக்கும் அழுத்தம் மிகவும் அசாதாரணமானது. 2020ம் ஆண்டு அவர்கள் 9ம் வகுப்பு நிறைவு செய்யும் நேரத்தில் பெருந்தொற்று வந்தது. வாழ்வில் முதன்முறையாக எழுத வேண்டிய 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கல்வியை அவர்கள் முழுக்க முழுக்க ஆன்லைன் வழியாகவே கற்றுக்கொள்ள வேண்டி அமைந்தது. பெரும்பாலான பள்ளி மாணவர்கள் 2020ல் ஆன்லைன் கல்வியை எப்படிக் கற்றுக்கொண்டார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும் தானே?

2020-21ம் கல்வி ஆண்டின் இறுதியில் அவர்களுக்கான தேர்வு இல்லாமலே தேர்ச்சி 2021 பிப்ரவரி மாதமே அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுத்தேர்வுக்கான ஒரு படிப்பு நிலையை, அவ்வளவாக அல்லது முழுவதுமாகவே படிக்காமல் அதைத் தாண்டியவர்கள்தான் தற்போது 12ம் வகுப்பில், வருகின்ற மார்ச் 13ம் தேதி பொதுத்தேர்வை முதன்முறையாக சந்திக்கவுள்ளனர். இந்தக் கல்வி ஆண்டில் நான் பள்ளிகளில் சந்தித்த மாணவர்களில் தற்போது 10ம் வகுப்பில் இருக்கின்றவர்கள், ஏறத்தாழ இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதாகவே உணர்கின்றேன்.

சில சவால்கள் உண்டு. 11ம் வகுப்பு பிள்ளைகள் 10ம் வகுப்பு அளவுக்கு முழுமையாக இயல்பாக இல்லையென்றாலும் குறை சொல்லும் அளவில் இல்லை. காரணம் அவர்களின் 10ம் வகுப்பு பெரும்பாலும் நேரடி வகுப்பு அனுபவமாக அமைந்தது, 70% பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்தவர்கள். 12ம் வகுப்புதான் மிகுந்த இறுக்கத்துடன் குழப்பத்துடன் இருக்கின்றனர். வழக்கமாக பயிலரங்கு தொடங்கிய ஐந்து நிமிடத்திற்குள் அவர்களோடு இணைந்து விட முடியும். 10, 11 வகுப்புகளில் அது ஓரளவு சாத்தியப்படுகின்றது. ஆனால் 12ம் வகுப்புகளில் தேர்வு நெருங்கும் இந்தத் தருணத்தில் அவர்களோடு இணைவது அத்தனை எளிதாக இல்லை. காரணம் அத்தனை இறுக்கமாக இருக்கின்றனர். படிப்பு தவிர்த்து இயல்பான உரையாடலுக்குக் கேட்கும் எளிய கேள்விகளுக்கும்கூட பதில் தராத இறுக்கம்.

‘படிப்பு எப்படி இருக்கு? படிக்க முடியுதா? தேர்வுக்கு தயாராகிறீர்களா? அடுத்த என்ன படிக்கலாம்னு முடிவெடுத்திருக்கீங்க?’ என்பதுள்ளிட்ட மிக எளிய கேள்விகளுக்கே பதில் தர முடியாத ஒரு இறுக்கத்தைக் காண முடிகின்றது. முந்தைய ஆண்டுகளில் 5-10 நிமிடங்களுக்குள் அவர்கள் மௌனத்தை உடைக்க முடிந்ததென்றால் இப்போது 30-45 நிமிடங்கள் கடுமையாகப் போராடித்தான் உடைக்க முடிகின்றது. உடைத்தப் பின் கொட்டித் தீர்க்கிறார்கள். ஆக வழக்கமாக திட்டமிடப்பட்ட நேரம் போதாமல் அவர்களின் அழுத்தம் தோய்ந்த அச்சங்களுக்கு நம்பிக்கை தர கூடுதலாக நேரமும், ஆற்றலும் கொடுக்க வேண்டியிருக்கின்றது.

இந்த அழுத்தம் மற்றும் இறுக்கத்தை உணர்ந்து கல்வித்துறையும், பெற்றோர்களும், ஆசிரியர்களும், நிர்வாகங்களும் இந்த ஆண்டு +2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவியர்களை அரவணைத்து வழி நடத்துவது மிகத் தேவையானது.

ஈரோடு கதிர்

error: Content is protected !!