June 24, 2021

செல்லாத நோட்டு கூட்டுறவு வங்கிகளை சின்னாபின்னமாகி விட்டது

கூட்டுறவு வங்கிகள் மூன்றடுக்கு முறையில் செயல்படுகின்றன.

1.மாநில கூட்டுறவு வங்கிகள்
2.மத்திய கூட்டுறவு வங்கிகள்
3.நகரக் கூட்டுறவு வங்கிகள்

மத்திய கூட்டுறவு வங்கி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு (கோவாப்பரேட்டிவ் சொசைட்டி) கடன் வழங்குகிறது. சொசைட்டிகள் உறுப்பினர்களிடம் வைப்பு நிதி (டெப்பாசிட்) பெறுகின்றன. கடன் வழங்குகின்றன.அதற்கான நிதி மத்தியக் கூட்டுறவு வங்கி மூலமாக அவற்றுக்கு வழங்கப்படுகிறது.

edit shyam nov 29a

தமிழகத்தில் 782 மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள் உள்ளன. பொதுமக்களின் வைப்பு நிதி ரூ.22,660 கோடி உள்ளது. நாடு முழுவதும் 369 மாவட்டங்களில் 13,943 மத்திய கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. அவற்றில் 2 லட்சத்து 96 ஆயிரத்து 803 கோடி டெப்பாசிட் உள்ளதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது.

இந்த நிலையில் கூட்டுறவு வங்கி என்றால் மாநில கூட்டுறவு வங்கிகளும் நகர கூட்டுறவு வங்கிகளும் தான் என்று மத்திய அரசு ஒரு அறிவிப்பாணையை திடீரென்று வெளியிட்டுள்ளது. மத்திய கூட்டுறவு வங்கிகளை அந்தப் பட்டியலில் இருந்து எடுத்து விட்டது.

கூட்டுறவு இயக்கம் என்பது இந்தியாவில் சுமார் 100 வருடங்களைக் கடந்தது. கிராமப்புபுறங்களில் மத்தியக் கூட்டுறவு வங்கிகளும், சொசைட்டிகளும் உயிர்த்துடிப்புடன் பணியாற்றி வருகின்றன.

வங்கிகள் சம்பளம் வாங்கும் அதிகாரிகளைக் கொண்டு இயங்குபவை. ஆனால் கூட்டுறவு சங்கங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்குனர்களைக் கொண்டு இயங்குபவை. அதில் அரசியல் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அது தான் அந்த முறையின் தனித்துவம்.

ஏற்கனவே செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுக்க மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்தியக் கூட்டுறவு சங்கங்களை வங்கிப் பட்டியலில் இருந்தே தடாலடியாகத் தூக்கியுள்ளது மத்திய அரசு.

உறுப்பினர்களின் வளங்களைப் பயன்படுத்தி உறுப்பினர்களின் நலனுக்காக நிறுவப்பட்டவை கூட்டுறவு வங்கிகள். உறுப்பினர்களுக்கு கடன் மற்றும் நிதிச் சேவைகளை வழங்குவதே அவற்றின் நோக்கம்.

சாதாரண வங்கிகளில் பணம் போடும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி நடவடிக்கைகளில் எந்தப் பங்கும் இருக்காது. ஆனால் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராகிப் பணம் போடுபவர்களுக்கு வங்கி நடவடிக்கைகளில் பங்கு இருக்கும்.

வங்கிக் கடன் என்ற கான்செப்டையே முதன்முதலில் கிராம தொடக்க கூட்டுறவு வங்கிகள் மூலம் தான் நமது விவசாயிகள் தெரிந்து கொண்டனர். அது வரை தனியாரிடமும், கமிஷன் மண்டி, கந்து வட்டிக்காரர்களிடமும், உரக்கடைக்காரர்களிடமும் கடன் பெற்று சாகுபடி செய்துவந்தனர். நீண்ட கால கடன் கூட்டுறவு நிலவள வங்கிகள் மூலம் வழங்கப்பட்டது.

நான் மதுரை விவசாயக் கல்லூரியில் பட்டப் படிப்பு பயின்றபோது மத்தியக் கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் போன்றவற்றில் பயிற்சி தருவார்கள். பின்னர் அரசு விவசாய அதிகாரியானபோதும் கூட்டுறவுத் துறையோடு நெருங்கிய தொடர்பு வைத்திருப்போம். ஏனென்றால் பயிர்க்கடன் போன்ற அத்தியாவசிய வேளாண் நிதி உதவிகளை அவர்கள் தான் செய்வார்கள். எங்கள் வருட இலக்கை அடைய அது தான் உதவியாக இருக்கும். பொய்யாகப் புள்ளி விவரம் தரும் கீழ்மட்ட அலுவலர்களை செக் செய்ய அந்தப் பகுதி சொசைட்டிகளின் பயிர்க்கடன் விவரங்களைச் சரி பார்ப்போம்.

இந்திராகாந்தி வங்கிகளை அரசுடமை ஆக்கியபிற்கு கிராமங்களில் வங்கிக் கிளைகள் திறக்கப்பட்டன. அவை நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன் வழங்கத் துவங்கின. ஆனாலும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் இன்றும் உயிர்த் துடிப்புடன் செயல்பட்டு வருகின்றன.

நகரக் கூட்டுறவு வங்கிகளும் கூட்டுறவு சங்க விதியின் கீழ் மாநில அரசின் மூலம் பதிவு செய்யப்பட்டவையே.ஆனால் அவற்றின் எண்ணிக்கை குறைவு. தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி என்பது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் பேரவை. மாநிலம் முழுவதுக்கும் சேர்த்து ஒன்று.

இவை போக பல்வேறு சிறப்பு கூட்டுறவு வங்கிகளுக் உள்ளன. உதாரணம் – கைத்தறி நெசவாளர் கூட்டுறவு வங்கி, மண்பாண்டம் செய்வோர் கூட்டுறவு வங்கி.

உயர்மதிப்பு நோட்டு ஒழிப்புப் பிரச்னையில் –

மாநிலக் கூட்டுறவு வங்கி (1), நகரக் கூட்டுறவு வங்கி (தமிழகத்தில் 32) ஆகியவற்றை மட்டுமே நவம்பர் 24 முதல் கூட்டுறவு பேங்குகள் என்று ரிசர்வ் வங்கி வரையறை செய்துள்ளது.

செல்லாத நோட்டு கூட்டுறவு வங்கிகளை சின்னாபின்னமாகி விட்டது. விடிவு என்ன என்று தெரியவில்லை. அல்லித்துறையிலும், மணிகண்டத்திலும், அந்தநல்லூரிலும் (எல்லாம் அன்றைய திருச்சி மாவட்டக் கிராமங்கள்) பணியாற்றிய நாட்கள் நினைவுக்கு வருகின்றன. முண்டாசுக் கட்டோடு, சட்டையின்றி வரும் விவசாயிகள் சொசைட்டிகளைத் தங்கள் சொந்த வங்கியாக நினைத்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன.

அந்த சொந்தமும் உரிமையும், ஸ்டேட் பேங்க்கிலும், இந்தியன் வங்கியிலும், யூனியன் வங்கியிலும் வருமா?

தெரியவில்லை.

2017ல் உருவாகப்போவதாக சொல்லப்படும் “கேஷ்லெஸ் இந்தியா” என்ன மாதிரியான எதிர்காலத்தை நமது கிராமங்களுக்கு வைத்திருக்கப் போகிறது?

தெரியவில்லை.

ஷ்யாம்