March 26, 2023

அறிவியலுக்கு விடை தெரியாத பல்வேறு கேள்விகளால் எழும்சர்ச்சை!

றிவியலுக்கு இது எப்படி உருவாகியது என்று தெரியுமா? …என்று ஒரு மத நம்பிக்கையாளர் அறிவியலுக்கு விடை தெரியாத பல்வேறு கேள்விகளை எழுப்பி சவால் விட்டிருக்கிறார். அறிவியலுக்கு நிறைய கேள்விகளுக்கு விடை தெரியாது. அவை பற்றி நான் பல முறை எழுதி இருக்கிறேன். கருந்துளைக்குள் அடங்கிய எனர்ஜி என்னவாகிறது? பிக் பேங்க் நடந்த 1 3/4 வினாடிக்கு முன் நடந்தது என்ன? கருந்துகள்கள் எங்கே இருக்கின்றன. கரும் ஆற்றலை எப்படி உணர்வது? இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி அறிவியலுக்கு விடை தெரியாத கேள்விகளின் லிஸ்ட் 19ம் நூற்றாண்டில் நீளமாக இருந்தது. அவற்றைத் தொடர்ந்து நோண்டி விடாக் கண்டனாக தேடி நிறைய கேள்விகளுக்கு 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விடை கண்டுபிடித்தார்கள். அப்போதும் பல கேள்விகள் பாக்கி இருந்தன. 20ம் நூற்றாண்டின் இறுதியில் அவற்றில் சிலவற்றின் முடிச்சுகள் அவிழ்ந்தன. மீதி இருந்தவற்றில் பலவற்றின் மர்மம் 21ம் நூற்றாண்டின் துவக்கத்தில் அவிழ்ந்தன.

இன்னும் கொஞ்சம் கேள்விகள் பாக்கி இருக்கின்றன. ஆனால் லிஸ்ட் 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்ததை விட சிறிதாகவே இருக்கிறது. சில புதிய கேள்விகளும் சேர்ந்திருக்கின்றன. உதாரணத்துக்கு பிக் பேங்க் பற்றிய கேள்வியே 19ம் நூற்றாண்டு லிஸ்ட்டில் இல்லை. காரணம் பிக் பேங்க் பற்றியே அப்போது நமக்கு எதுவும் தெரியாது. போலவே கரும் ஆற்றல் (Dark Energy) என்று ஒன்று இருப்பதே 1998ல்தான் தெரிய வந்தது. அதற்குப் பின் அது குறித்த கேள்விகள் லிஸ்டில் சேர்ந்து கொண்டு விட்டன.

இப்படி புதுப்புது விஷயங்களை அறிவியல் தானே கண்டுபிடித்து தானே கேள்விகளை எழுப்பி தானே தேடித் தேடி விடைகளை கண்டு கொண்டு வருகிறது. இருப்பினும் பெண்டிங்கில் பல உள்ளன. அவற்றில் பல முடிச்சுகள் இன்னும் ஐம்பது ஆண்டுகளில் அவிழ்ந்து விடும். ஆனால் அப்போதும் கேள்விகள் பாக்கி இருக்கும். அதுதான் அறிவியலின் கடுந்தவம். தொடர்ந்து கேள்விகள் கேட்பதன் மூலமும், தொடர்ந்து கேள்விகளை ஊக்குவிப்பதன் மூலமுமே அறிவியல் வளர்கிறது. உயர்கிறது. அறிவியலில் அதாரிட்டி என்று யாரும் கிடையாது. நான் இறைவனின் தூதன். நான் quantum fluctuation பற்றி சொல்கிறேன். கேட்டுக் கொள்ளுங்கள் என்று யாரும் சொல்ல முடியாது. சிரித்து விடுவார்கள். ஆனானப்பட்ட ஐன்ஸ்டைன் முன்வைத்த gravitational waves தியரியை அவர் சொல்லி நூறு ஆண்டுகள் கழித்து ஒரு பரிசோதனை வெற்றி பெற்ற பின்னர்தான் ஏற்றுக் கொண்டார்கள்.

அதெல்லாம் ஒரு புறம் இருக்க, இப்படி விடை தெரியாத கேள்விகளை வைத்துக் கொண்டு அறிவியல் திணறிக் கொண்டிருப்பதை எள்ளி நகையாடும் அந்த நண்பர் என்ன சொல்ல வருகிறார்? இவற்றுக்கான பதில் மதங்களிடம் இருக்கிறது என்கிறாரா? கருந்துளைக்குள் என்ன அடங்கி இருக்கிறது என்பதை லிங்க புராணம் விளக்குமா? க்வாண்டம் துகள்களின் நிச்சயமற்ற தன்மையை பைபிளில் விவரித்து இருக்கிறார்களா? பிக் பேங்க்கின் ஆரம்ப கணங்கள் பற்றிய சமன்பாடுகள் குரானில் உள்ளனவா?

இது எதற்குமே பதில், இல்லைதான். கருந்துளை ரேஞ்சுக்கெல்லாம் கூடப் போக வேண்டாம், பூமி உருண்டையா, தட்டையா என்பது கூட புனித நூல்களை வழங்கிய எந்தக் கடவுளுக்கும் தெரிந்திருக்கவில்லை. கிரகணங்கள் ஏன் ஏற்படுகின்றன என்ற சின்ன விபரம் கூட எந்தத் தூதரும் விளக்கவில்லை. இந்த லட்சணத்தில் அறிவியலை கேள்வி கேட்க மட்டும் வாய் நீளுகிறது. பிரச்சினை என்னவெனில் அறிவியலிடம் நிறைய கேள்விகளுக்கு விடைகள் உள்ளன. நிறைய கேள்விகளுக்கு விடைகள் இல்லை. ஆனால் மதங்களிடம் எந்தக் கேள்விக்குமே விடைகள் கிடையாது. உலகம் எப்படித் தோன்றியது என்றால் அதற்கு ஒரு அம்புலிமாமா கதை. உயிர்கள் எப்படி தோற்றுவிக்கப்பட்டன என்றால் அதற்கு ஒரு காமிக் புக்ஸ் கதை. இதுதான் அவர்களின் அணுகுமுறையாக இருந்திருக்கிறது. அவை சுவாரசியமான கற்பனைகள் என்பதைத்தாண்டி மத நூல்கள் வேறு ஏதாவது பங்களித்து இருக்கின்றனவா?

ஆனால் ஒன்று: மதங்களிடம் கேள்விகள் இல்லாவிடினும் நிறைய பதில்கள் உள்ளன. கூடவே அவற்றை யாரும் கேள்வியே கேட்கக் கூடாது என்ற நிபந்தனைகளும் உள்ளன. அப்படி கேள்வி கேட்கக் கூடாத பதில்கள் எனக்குத் தேவையில்லை. மாறாக பதில்கள் தெரியாத கேள்விகள் பரவாயில்லை. யுவல் நோவா ஹராரி சொல்வது போல ‘Questions you cannot answer are far better for you than answers you cannot question!’

ஸ்ரீதர் சுப்ரமணியம்