September 25, 2021

அரசியல் சாசன அமர்வு விசாரிக்க போகும் – முத்தலாக் விவகாரம்?

முஸ்லிம்களிடையே வழக்கத்தில் உள்ள முத்தலாக் விவாகரத்து, மறுமணம் தொடர்பான சிக்கலான நிக்கா ஹலாலா, பலதார மணம் உள்ளிட்ட நடைமுறைகள் சட்டரீதியில் செல்லுபடியாகுமா? என்று கேள்வி எழுப்பி அந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்ணான ஷாய்ரா பானுவும், வேறு சிலரும் சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். குறிப்பாக இஸ்லாமிய மதத்தை சேர்ந்த கணவர் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய விரும்பினால், தொடர்ந்து 3 முறை ‘தலாக், தலாக், தலாக்’ என்று கூறிவிட்டால், மனைவியை பிரிந்து விடலாம் என்பது வழக்கத்தில் உள்ளது. ஒரே மூச்சில் முத்தலாக் சொல்வது மத ரீதியாக தடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சில மத அறிஞர்கள் ஒரே மூச்சில் ‘முத்தலாக்’ கூறலாம் என்று கூறுகிறார்கள்.குரான் கூறியுள்ள ‘தலாக்’ முறையில், மனைவியை விவாகரத்து செய்ய விரும்புகிற கணவர் முதலில் ‘தலாக்’ சொல்லி பிரியலாம். மீண்டும் சேரலாம். இப்படி இரண்டு முறை பிரியலாம், சேரலாம். மூன்றாவது முறை ‘தலாக்’ சொல்கிறபோது, அது நிரந்தர பிரிவாக அமைந்து விடும்.

talak feb 17

இந்த நிலையில்தான், நடைமுறையில் உள்ள ‘முத்தலாக்’ முறைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சாயரா பானு என்ற பெண்ணும், மற்றும் பலரும் வழக்கு தொடுத்துள்ளனர்.அந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.அதன்படி மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில். முத்தலாக், பலதார மணம் உள்ளிட்ட நடைமுறைகளைத் தாங்கள் எதிர்ப்பதாகக் கூறியிருந்தது. அரசியல்சாசனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள பாலினச் சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மை, சர்வதேச மரபுகள், முஸ்லிம் நாடுகளில் நடைமுறையில் உள்ள திருமணச் சட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நடைமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு கருத்து கூறியிருந்தது.

அதே சமயம் , “முத்தலாக் போன்ற நடைமுறைகள் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இருப்பதால் அவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை, மதச் சுதந்திரத்தில் தலையிடுவதாகக் கூறி அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் விமர்சித்து கருத்து தெரிவித்தது. அதேபோல், மற்றொரு முக்கிய இஸ்லாமிய அமைப்பான ஜாமியத் உலமா-இ-ஹிந்த், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் “முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் யாரும் தலையிடக் கூடாது. ஏனெனில் முத்தலாக் உள்ளிட்ட நடைமுறைகள் எங்கள் மதத்தில் மிகவும் ஆழமாக வேரூன்றியவை’ என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில், ஷாய்ரா பானு உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது,”மனுதாரர்களும், வழக்குரைஞர்களும் ஒன்றாக அமர்ந்து எங்கள் முன் வைக்கப்பட வேண்டிய விவகாரங்களை இறுதிசெய்ய வேண்டும். நாங்கள் இந்த விவகாரத்தின் அடுத்தகட்ட விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு பட்டியலிடுகிறோம். குறிப்பிட்ட எந்த ஒரு வழக்கிலும் யதார்த்த உண்மைகள் குறித்து நாங்கள் பரிசீலிப்பதில்லை. மாறாக, அவற்றில் உள்ள சட்டரீதியிலான அம்சங்களையே நாங்கள் பரிசீலிப்போம்.முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் விவாகரத்து என்பதை நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமா? அல்லது நீதிமன்றக் கண்காணிப்பின்கீழ் இயங்கும் அமைப்பு விசாரிக்க வேண்டுமா? என்ற கேள்வியானது சட்டத்தின் வரம்புக்கு உட்பட்டதாகும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதன்பட்சி இது தொடர்பான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதிகள் என்.வி. ரமணா, டி.ஒய். சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், வழக்கு தொடர்பாக வழக்குதாரர்கள் எழுப்பியுள்ள 3 அம்சங்களை கவனத்தில் கொண்டனர். மேலும், இந்த வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்புவது பற்றி அடுத்த மாதம் 30-ந் தேதி முடிவு செய்யப்படும் என அறிவித்தனர்.இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்கள் தரப்பு கருத்துகளை 15 பக்கங்களுக்கு மிகாமல் அடுத்த விசாரணை நாளுக்குள் சமர்ப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.