காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவி ;டிசம்பர் 16-ம் தேதி தேர்தல்!
சோனியா காந்தி (வயது 70), 1998–ம் ஆண்டு, மார்ச் மாதம் 14–ந் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்றார். அந்த வகையில் அவர் தலைமைப் பொறுப்பை ஏற்று 19 ஆண்டுகள் முடிந்து விட்டன. அவர் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் உள்ளார். தற்போதைய சூழலில் கட்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்ச வேண்டும், ராகுல் காந்தி (வயது 47) தலைவராக வேண்டும் என்று மூத்த தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வந்தனர். அவர் கட்சியின் தலைமைப்பதவிக்கு வருவதற்கான பயிற்சியையும், தகுதியையும் அடைகிற விதத்தில் அவருக்கு கட்சியின் துணைத்தலைவர் பதவியை சோனியா காந்தி 2013–ம் ஆண்டு ஜனவரி மாதம் 19–ந் தேதி வழங்கினார். அவரும் 4 ஆண்டுக்கு மேலாக துணைத்தலைவர் பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், ராகுல் காந்தியை தலைவர் ஆக்குவதற்கு சோனியா காந்தி பச்சைக்கொடி காட்டி விட்டார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்து வந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் இன்று (நவ.20 ) நடைபெற்றது. அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இதில் பங்கேற்றனர். கூட்டத்தில், ராகுல் காந்தியை காங்கிரஸின் தலைவராகத் தேர்வு செய்யத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு டிசம்பர் 16இல் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் டிச.1இல் தொடங்குகிறது. டிச.4ஆம் தேதி மனு தாக்கல் செய்வதற்குக் கடைசி நாள். டிச. 19ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் ராகுல் கட்சியின் தலைவராகப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதனை மெய்ப்பிக்கும் வகையிலேயே தேவை ஏற்பட்டால், டிசம்பர் 16ம் தேதி தேர்தல் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலில் யாரும் போட்டியிடாத பட்சத்தில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் நேரத்திலேயே ராகுல் காந்தி தலைவராவது உறுதியாகும்.
காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவராக உள்ள சோனியா காந்தி கடந்த 1998ம் ஆண்டு தலைவர் பதவியை ஏற்றார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் நீண்ட காலம் (19 ஆண்டுகள்) இருந்தவர் என்ற சிறப்புக்குச் சொந்தக்காரரான சோனியாவின் தலைமையில் தொடர்ச்சியாக 2004 மற்றும் 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை காங்கிரஸ் கட்சி வென்றது என்பதும் ராகுல் காந்தியை மூத்த தலைவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வதால், அவருக்கு எதிராக யாரும் வேட்புமனு தாக்கல்செய்ய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஆகவே, டிசம்பர் 11-ம் தேதி, காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.