January 30, 2023

இந்திய வம்சாவளி ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராகிறார்!- இவர் பின்னணி இதோ!

முன்னொரு காலத்தில் நம் நாட்டை ஆண்ட பிரிட்டனை ஆளப் போகிறார் இந்திய வம்சாவளி ரிஷி சுனக். 45 நாட்களில் லிஸ் ட்ரஸ் பிரதமர் பதவியை துறக்க, ரிஷி சுனக் போட்டியின்றி அந்த அரியணைக்கு தேர்வாகியுள்ளார். இங்கிலாந்தின் பிரதமராக தேர்வாகியுள்ள ரிஷி சுனக் ஒரு இந்திய வம்சாவளி. . 42 வயது நிரம்பிய ரிஷி சுனக், நாட்டின் இளம் வயது பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இங்கிலாந்தின் பிரதமர் ஆக பொறுப்பேற்கவுள்ள ரிஷி சுனக் குறித்த பின்னணி இதோ:

42 வயதான ரிஷி சுனக் பிரிட்டன் நாட்டின் சவுத்ஹாம்ப்டன் பகுதியில் பிறந்தவர். இவரின் தந்தை அந்நாட்டின் சுகாராத்துறையில் பொது மருத்துவராக பணியாற்றி வருகிறார். தாயார் மருந்துக் கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரின் தாத்தா பாட்டி இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பஞ்சாப்பில் இருந்து அவர்கள் கிழக்கு ஆப்ரிக்காவுக்குக் குடிபெயர்ந்த நிலையில், 1960களில் பிரிட்டன் நாட்டிற்குக் குடிபெயர்ந்துள்ளனர். வின்செஸ்டர் கல்வி நிறுவனத்தில் பள்ளிப்படிப்பை முடித்த ரிஷி சுனக், ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை முடித்தார். உலகின் முன்னணி நிதி நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ்சில் முன்னணி பொறுப்புகளை வகித்து வந்தார்.

இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான ‘இன்போசிஸ்‘ நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளான அக்சதா மூர்த்தியை 2009ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். இருவரும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படிக்கும்போது காதலித்து பின்னர் மணம் முடித்துக்கொண்டனர். இருவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி இந்தியாவில் உள்ள மிக முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர். இந்தியாவில் ஐடி செக்டாரின் தந்தை என்று அழைக்கப்படுபவர் என்பது தனி எபிசோட்.

இத்தனைக்கும் கடந்த 2015ஆம் ஆண்டில் தீவிர அரசியல் களத்தில் குதித்த ரிஷி சுனக் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு ரிச்மன்ட் பகுதியின் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். பிரெக்சிட் ஆதரவாளரான இவர், அன்றைய பிரதமர் தெரேசா மேவின் அரசில் அமைச்சராக பணியாற்றினார். 2019ஆம் ஆண்டு தேர்தலில் போரிஸ் ஜான்சன் பிரதமராக ஆதரவு அளித்து பரப்புரை செய்தார் ரிஷி. தேர்தலில் வென்று போரிஸ் ஜான்சன் பிரதமரான நிலையில், ரிஷி சுனக்கிற்கு நிதித்துறை தலைமைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

பின்னர் 2020ஆம் ஆண்டில் பிரதமர், துணைப் பிரதமர் ஆகியோருக்கு அடுத்த அந்தஸ்தில் இருக்கும் அமைச்சரவை பதவி ரிஷி சுனக்கிற்கு வழங்கப்பட்டது. கோவிட் காலத்தில் ரிஷி சுனக் நிதித்துறையில் செய்த நடவடிக்கைகள் அவருக்குப் பாராட்டுகளைத் தந்துள்ளது. அதே வேளை, குறுகிய காலத்திலேயே அரசியலில் இவர் பெரும் வளர்ச்சி பெற்றதற்கும் பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்தியர்களிடையே அதிக எதிர்பார்ப்புக்கள் இருந்த நிலையில் தற்போது ரிஷி சுனக் பிரதமராக அறிவிக்கப்பட்டது பெருமைக்குரியதாக இருக்கிறது.

நிலவளம் ரெங்கராஜன்