February 7, 2023

தமிழ்நாடு ஆளுநர் உரையில் குழப்படிகள்!

ளுநர் ரவிக்கும் தமிழ் நாட்டு அரசுக்கும் இடையில் நடந்து வந்த பனிப்போர் நேற்று முழுமையான போராக மாறி இருக்கிறது. நேற்று சட்ட மன்றத்தில் நடக்கவிருந்த உரைக்காக தமிழ் நாட்டு அரசு தயாரித்துக் கொடுத்திருந்த கன்டன்ட்டை முழுவதும் படிக்காமல் அதில் இருந்து சில பகுதிகளை ஆளுநர் தவிர்த்திருந்திருக்கிறார். ‘பெரியார், அண்ணா, அம்பேத்கர், கலைஞர், போன்றோர் வழிகாட்டுதலில் திராவிட மாடலைப் பின்பற்றும் அரசு,’ என்ற பத்தியை விட்டு விட்டிருக்கிறார். ‘தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து அந்நிய முதலீடுகளைக் குவித்து, அனைத்து துறைகளிலும் முன்னேற்றப் பாதையில் நடைபோடுகிறது,’ என்ற வாக்கியத்தையும் படிக்காமல் விட்டிருக்கிறார். கூடவே சுயமாக கொஞ்சம் கன்டன்ட்டையும் சேர்த்துப் பேசி இருக்கிறார்.

அந்த உரை முடிந்ததும் பத்திகளை தவிர்த்ததை ஆட்சேபித்த முதல்வர் ஸ்டாலின் ஒரிஜினல் உரையை மட்டுமே அவைக்குறிப்பில் பதிந்து கொள்ள ஒரு தீர்மானத்தை முன் மொழிந்திருக்கிறார். அதனை எதிர்த்து சட்டசபையில் இருந்து ஆளுநர் ரவி வெளி நடப்பு செய்திருக்கிறார். இது சர்ச்சையாகி இருக்கிறது. ஆளுநர் உரை என்பது ஆளுநர் சொந்தமாக வழங்கும் உரை அல்ல. அது உண்மையில் அரசின் உரைதான். அரசாங்கம் தங்களுக்கு வேண்டிய எதை வேண்டுமானாலும் அந்த உரையில் எழுதிக் கொள்ளலாம். அதைப் பேசுவது ஆளுநரின் கடமை. பிரிவினைவாதம், மதவாதம், தீவிரவாதம், இன ஒழிப்பு கூக்குரல்கள் இப்படி எதுவும் உரையில் இல்லாத பட்சத்தில் எந்தப் பத்தியையும் ஆட்சேபிக்கவோ, தவிர்க்கவோ ஆளுநர்களுக்கு முகாந்திரம் இல்லை. சொந்தமாக தான் விரும்பியதைப் பேச வேண்டும் என்றால் சொந்தமாக ஒரு மாநிலத்தில் ஆட்சியமைத்து அங்கே அவையில் இஷ்டம் போல பேசலாம்.

ஆனால் நமது ஆளுநர் விசித்திரமானவர் இல்லையா? சாவி தில்லியில் இருந்து கிடைத்ததா அல்லது வேறு எங்கிருந்தாவது கிடைத்ததா என்று தெரியவில்லை. தானே தேர்தலில் ஜெயித்து ஆட்சியில் இருப்பவர் மாதிரி நடந்து கொண்டு வருகிறார். தமிழகம்/தமிழ் நாடு, சனாதன தர்மம், வரலாற்றுத் திரித்தல் என்று வழக்கமான இந்துத்துவ உளறல்களை உளறிக் கொட்டிக் கொண்டு, மாநில அரசுக்கு முடிந்த அளவு தொல்லை கொடுப்பதை தினசரி அலுவலாக செய்து கொண்டு வருகிறார். அந்த அவலத்தின் உச்சிதான் நேற்றைய சம்பவம்.

இப்படி ஆளுநர் உரையில் குழப்படிகள் இதற்கு முன்பே இதர மாநிலங்களில் நடந்திருக்கிறது, எனினும் தமிழ் நாட்டில் இதுதான் ஃபர்ஸ்ட் டைம் – என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கு எதிராக முதல்வர் முன்னெடுத்த தீர்மானம் அவசியமானது. அரசு தனது அதிகாரத்தையும் உரிமையையும் நிலை நாட்டிய செயல். அதற்கு வெளிநடப்பு செய்ததை முதிர்ச்சியற்ற செயலாகவே பார்க்கிறேன். தவிர, ஆளுநர் என்ன எதிர்பார்த்திருந்தார்? தான் இப்படி அதிகாரபூர்வ உரையை இஷ்டத்துக்கு மாற்றி உளருவோம்; அதை அரசு வாயை மூடிக் கொண்டு ஏற்றுக் கொண்டு விடும் என்று நினைத்தாரா?

உரையை திருத்திப் படிப்போம் என்ற திட்டத்தில் தெளிவாக இருந்தவருக்கு, அதை ஆளும் கட்சி எதிர்த்தால் எப்படி எதிர்கொள்வோம் என்று திட்டமிடவில்லை போலத் தெரிகிறது. இப்படி அவையில் இருந்து வெளிநடப்பு செய்வதெல்லாம் எதிர்க்கட்சிகள் செய்யும் காரியம். அது அரசியல் ரீதியிலான எதிர்ப்பை பதிவு செய்வதற்கு நடத்துவது என்பதால் புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால் ஒரு ஆளுநரே அப்படி செய்தால் அவரும் அரசியல் செய்கிறார் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். இத்தனை காலம் அவைக்கு வெளியே அரசியல் செய்து கொண்டிருந்தவர் இப்போது நேரடியாக அவையிலேயே செய்யத் துணிந்து விட்டிருக்கிறார்.

ஜனநாயகம், சட்டமன்றப் பாரம்பரியம், மாநில உரிமைகள் இவை எவை குறித்தும் கிஞ்சித்தும் அறிவும் அக்கறையும் இல்லாதவர்கள் மட்டும்தான் ஆளுநர் வெளி நடப்பை சிலாகிக்க முடியும். மீதி அனைவரும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய செயல் இது. ஆளுநர் ரவிக்கு வன்மையான கண்டனங்கள். அவரது முதிர்ச்சியற்ற அட்வென்சரை முறியடித்த முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.

– ஸ்ரீதர் சுப்ரமணியம்