June 26, 2022

பிரதமர் மோடி பங்கேற்ற ‘மேன் Vs வைல்ட்’ நிகழ்ச்சியின் கம்ப்ளீட் ரிப்போர்ட்!

சகல வயதினரும் விரும்பிப் பார்க்கும் டிஸ்கவரி சேனலின் பிரபலமான நிகழ்ச்சி ‘மேன் vs வைல்ட்’ ‘Man vs Wild’, இதில் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான பியர் க்ரில்ஸ் உலகின் பல்வேறு காடு, மலை, பாலைவனம், நீர்வீழ்ச்சி பகுதிகளுக்குச் சென்று அங்கே மாட்டிக்கொண்டால் அந்த சூழலில் எப்படி தப்பிக்கவேண்டும் என்று செய்துக்காட்டுவார். இது அச்சேனலின் பிரபமான பேவரிட் நிகழ்ச்சி. இதில் அவ்வப்போது பிரபலங் கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சி களும் ஒளிபரப்பாகும். கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டில் அமெரிக்காவின் அலாஸ்கா வனப்பகுதியில், பியர் கிரில்ஸும் அன்றைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் பங்கேற்ற ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி உலகளாவிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது.

இந்த வரிசையில் பியர் கிரில்ஸும் இந்திய பிரதமர் நரேந் திர மோடியும் உத்தராகண்ட் மாநிலம், ஜிம் கார்பெட் தேசிய வன விலங்கு பூங்காவில் சாகச காட்டுப் பயணம் மேற்கொண்ட ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ சிறப்பு நிகழ்ச்சி இன்று டிஸ்கவரி சேனலில் ஒளிப்பரப்பட்டது. நாளை மறுநாள் இந்தி, வங்கம், தமிழ், தெலுங்கு என 5 மொழிகளில் 180 நாடுகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்ச்சியின் நேரடி வர்ணனை இதோ..

இயமலையில் ஹெலிகாப்டரில் பறந்து செல்கிறார் பியர்ஸ் கிரில்ஸ். உத்தரகண்ட்டின் ஜிம் கார்பெட் பூங்காவில் ஹெலிகாப்டர் தரையிறங்குகிறது. இதற்கு பின் கிரில்ஸ், ஆறு கி.மீ., துாரம் நடந்து சென்று அந்த இடத்தை அடைகிறார். ‘உத்தரகண்ட்டில் உள்ள அடர்ந்த காட்டு பகுதியான ஜிம் கார்பெட் பூங்கா 520 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. இங்கு யானை, மான்கள், வங்க புலிகள் உள்ளிட்ட பல உயிரினங்கள் வாழ்கின்றன. 250 புலிகள் பாதுகாக்கப்படுகிறது’ என கிரில்ஸ் கூறினார்.15 நிமிடங்களுக்குப்பின், மோடி காரில் வந்து இறங்குகிறார்.

மோடி: வெல்கம் கிரில்ஸ். நீங்கள் இந்தியாவுக்கு இப்போது தான் வருகிறீர்களா?

பியர்ஸ்:  இல்லை எனது 18 வயதில் வந்துள்ளேன். இமயமலை மற்றும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளேன்.

மோடி: இப்பயணம் நன்றாக உள்ளது. இந்த பூங்கா ஒரு சிறந்த சுற்றுலாப்பகுதி. இங்கு நதி, காடுகள், தாவரங்கள் என பார்க்க வேண்டிய இடங்கள் அதிகம் உள்ளன. இந்தியா என்பது ஒரு பன்முக நாடு. இங்கு 100 மொழிகள் 1100 வட்டார மொழிகள் உள்ளன.

பியர்ஸ்: இடி இடிக்கிறதே, அதுவும் ஒரு மொழி தானே. இப்பகுதி ஆபத்தான இடம். வன விலங்குகள் உள்ளன. இங்கு சுற்றுலா வருபவர்கள் வாகனங்களை விட்டு இறங்கவே மாட்டார்கள். நாம் தற்போது ஒரு சாகச பயணத்துக்கு செல்கிறோம்.

மோடி: இந்த இடம் ஒன்று ஆபத்தானது இல்லை. இயற்கையை ஒன்றி சென்றால் ஆபத்து இல்லை. வன விலங்குகள்கூட நமக்கு நல்லது தான்செய்யும்

பியர்ஸ்: உங்களது பள்ளி பருவத்தை பற்றி கூறுங்களேன்.

மோடி: எனது சொந்த ஊர் குஜராத்தில் உள்ள வாத் நகர். அங்குதான் நான் படித்தேன். அங்கிருந்து தான், எனது சமூக சேவையை தொடங்கினேன். எங்களது குடும்பம் ஏழ்மையானது. சிறிய வீட்டில் தான் வசித்தோம். அரசு பள்ளியில்தான் படித்தேன். இயற்கையோடு ஒன்றிதான் எனது வாழ்க்கை இருந்தது. எனது குடும்பம் வசதியானது இல்லை. இதனால் அழுக்கு துணி சகஜம்தான். ஆனால் நான் பள்ளிக்கு போகும்போது, நேர்த்தியாகதான் செல்வேன். பள்ளி சீருடையை, அடுப்புகரி பயன்படுத்தி ‘அயர்ன்’ செய்துதான் அணிந்து செல்வேன்.

பியர்ஸ்: நீங்கள் நல்ல ஒரு மாணவர் என சொல்லுங்கள்.

மோடி: படிப்பில் நான் அவ்வளது சிறப்பானவன் என சொல்ல முடியாது. பள்ளி நேரம் தவிர டீக்கடை வைத்திருந்த எனது தந்தைக்கு உதவி செய்தேன். ரயில் நிலையத்தில் டீ விற்பனை செய்தேன். இதை என் வாழ்வில் மறக்கவே முடியாது.

காட்டில் கிடந்த யானை கழிவை இருவரும் பார்த்தனர். அதனை பியர்ஸ் பிழிந்து குடித்தார்.

பியர்ஸ்: இங்கிருக்கும் புலிகள் மறைந்திருந்து தாக்கககூடியவை. 3 மீட்டர் அளவுக்கு நீளமான புலிகள் இங்கு உள்ளன. இங்கு நாம் தான் நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இதற்கு முக்கியமான ஆயுதம் ஒன்று தேவைப்படுகிறது. ஜிம் கார்பெட் என்பவர் ஒரு இயற்கை மற்றும் வனவிலங்குகளுக்காக தன்னை அர்பணித்தவர். இங்கு புலிகள் 150 பேரை கொன்றுள்ளது என அவர் கூறியிருக்கிறார். ஆனால் அவரேதான் இங்கு புலிகளை காக்கவும் முயற்சி செய்தவர். சிறிய மரக்குச்சி மற்றும் கத்தியை வைத்து ஆயுதம் செய்தார் பியர்ஸ்.

மோடி: எனது 17 வயதில் வாழ்க்கையின் தேடலுக்காக இமயமலைக்கு சென்றேன். அதன்பின் பலமுறை அங்கு சென்றுள்ளேன். சாதுக்களை சந்தித்துள்ளேன். இந்த அனுபவம் எனது வாழ்க்கைக்கு இன்றும் உதவுகிறது

பியர்ஸ்: காடுகளில் பயணிக்கும்போது, கால் பாதத்தை விட்டு விடுங்கள். நினைவுகளை மட்டும் எடுத்துசெல்லுங்கள் என்று சொல்வார்கள். ஆபத்து வந்தால் தற்காத்துக்கொள்ளுங்கள் என்று மோடியிடம் தான் தயாரித்த ஆயுதத்தை வழங்கினார் பியர்ஸ். பின் அடர்ந்த வனப்பகுதிகள் நதியை இருவரும் சென்றனர். மான்கள் செல்வதை காண முடிந்தது.

பியர்ஸ்: நதியின் சத்தம் கேட்கிறது. நதியை அடைந்து விட்டோம். யானைகள் செல்வதை பார்க்க முடிகிறது. காட்டில் புலியை பார்த்தால் நான் உங்களைவிட வேகமாக ஓடுவேன்.

இருவரும் நதியை அடைந்தனர்.

பியர்ஸ்: நீங்கள் எந்த வயதில் பிரதமராக ஆவீர்கள் என நினைத்தீர்கள்?

மோடி: நான் முதலில் குஜராத் மாநில முதல்வராக 13 ஆண்டுகள் இருந்தேன். பின் இந்தியாவை ஆள நாட்டு மக்கள் என்னை முடிவெடுத்தால், தற்போது ஐந்து ஆண்டுகளாக பிரதமராக இருக்கிறேன். தற்போது 18 ஆண்டுகளுக்குப்பின், எனக்கு பிடித்த இடத்துக்கு (காடு) வந்துள்ளேன். மக்களின் கனவுகளை நனவாக்குவதில்தான் எனக்கு மகிழ்ச்சி. எனது தாய்க்கு வயது 97. இன்றும் அவரது வேலையை அவரே செய்து கொள்கிறார். காட்டில் உள்ள நாணல் மற்றும் கம்புகளை வைத்து படகு ஒன்றை பியர்ஸ் செய்தார்.

பியர்ஸ்: இந்த நதியில் நிறைய முதலைகள் உள்ளன.நீங்கள் உங்கள் அனுபவத்தில் ஏதாவது முதலையை பார்த்துள்ளீர்களா?

மோடி: சிறுவயதில் குளத்தில் குளித்தேன். அங்கு அந்தவசதி தான் இருந்தது. ஒருநாள் குளத்தில் இருந்த சிறிய முதலை குட்டியை வீட்டுக்கு கொண்டுவந்தேன். ‘இது பாவம்’ என தாய் திட்டியதால் குளத்தில் போய் விட்டு விட்டேன்.சிறுவயதில் நிதிநிலையால் நிறைய கஷ்டப்பட்டோம். ஆனால் அப்போது எனது தந்தை நிறைய அஞ்சல் அட்டைகளை வாங்கி வருவார். ஊரில் மழை பெய்து விட்டால், அதனை எங்களது உறவினர்களுக்கு கடிதம் மூலம் தெரியபடுத்தினார்.

அப்போது எனக்கு புரியவில்லை. தற்போதுதான் மழை எவ்வளவு முக்கியம் என்று தெரிகிறது. எனது பாட்டி மற்றும் தாய் படிக்கவில்லை. நிதிநிலையால் கஷ்டப்பட்டதால் எனது மாமாவுக்கு ஒரு யோசனை வந்தது. சமையலுக்கான விறகு வாங்கி விற்கலாம் என்ற தனது முடிவை, என் பாட்டியிடம் தெரிவித்தார். ஆனால் மரங்களை வெட்டுவது தப்பு. மரங்கள் இல்லாமல் நாம் இல்லை என்று கூறி மாமாவின் யோசனைக்கு பாட்டி மறுப்பு தெரிவித்து விட்டார்.

பியர்ஸ்: உங்களுக்கு முடிவுகளை எடுக்கும் போது பயம் இருக்காதா.

மோடி: நான் வாழ்க்கையில் பயத்தை எதிர்கொண்டதே இல்லை. பயம் என்றால் என்ன என்றே எனக்கு தெரியாது. எதையும் நேர்மறை எண்ணத்துடன்தான் அணுகினேன். வாழ்க்கையை முழுமையாக பார்க்க வேண்டும். உயர்வு, தாழ்வு வரும். கீழே செல்வதை நினைத்து பயப்படக்கூடாது.

பியர்ஸ்: என்னிடம் ஒரு திட்டம் உள்ளது. இந்த நாணல் படகு மூலம் இந்த நதியை கடக்க வேண்டும். இந்த படகை நான் சோதனை செய்யவே இல்லை. இந்த இமயமலை நதி மிகவும் குளிராக உள்ளது. பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மற்றும் விமானத்தில்தான் செல்வார். ஆனால் இன்று இந்த படகில் செல்ல உள்ளார்.

மழை பெய்து கொண்டு இருந்தது.

பியர்ஸ்: இது போன்ற படகில் செல்லும் முதல் இந்திய பிரதமர் நீங்கள்தான்.

மோடி: எனது சின்ன வயதில் இது சாதாரணம். எனது இமயமலை பயணத்தில் நிறைய இதுபோன்ற சூழலை சந்தித்துள்ளேன்.

நதியை கடந்து விட்டனர்.

பியர்ஸ்: சூப்பர் சார். இது வேப்ப இலை.வெந்நீரில் வேப்ப இலையை போட்டு குடித்தனர்.

மோடி: எங்கள் நாட்டில் மரத்தையும் கடவுளாகதான் பார்க்கிறோம். துளசி கல்யாணம் பாரம்பரியம் உள்ளது. துளசி இலையில் திருமணம் செய்து வைப்போம். சுற்றுச்சூழலை காக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. நம் சந்தோஷத்துக்காக காடுகளை அழிக்க ஆரம்பித்து விட்டோம். நாட்டை வெளியில் இருந்து யாரும் சுத்தம் செய்ய முடியாது. காந்தி நிறைய செய்திருக்கிறார். விரைவில் இந்தியா சுத்தமாகி விடும்.

இயற்கையோடஒன்றி அல்லது ஒன்றாமல் இருப்பது ஒருவரது தனிப்பபட்ட விருப்பம். ஆனால் நீர், வனத்தை ஏன் அழித்தீர்கள் என எதிர்காலத்தில் அவர்களது பிள்ளைகள் கேட்கும் நிலை ஏற்படக்கூடாது. இது ஒரு நல்ல அனுபவம். இயற்கையை அனுபவக்க வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவை பார்க்க ஆசைப்படுவார்கள். இந்தியா ஒரு சிறந்த சுற்றுலா நாடு. வெளிநாட்டு பயணிகள் நிறைய பார்க்க வருவார்கள்.

பியர்ஸ்: மறுபடியும் பத்திரமாக பாதுகாவலர்களிடம் உங்களை சேர்த்து விடுகிறன். நன்றி சார்.

மோடி: இன்றைய நாள் நன்றாக இருந்தது. நர்மதா நதியோடு தான் என் வாழ்க்கையை செலவழித்துள்ளேன். யோகாவை கற்று வருகிறேன். சிறு வயது போல இன்று நான் சந்தோஷமாக இருக்கிறேன்.

பியர்ஸ்: நனைந்த ஆடையை எப்படி காய வைக்க போகீறீர்கள்?

மோடி: போற போக்குல நுாறு வழி இருக்கு.

பியர்ஸ்: மொத்த உலகமும் இணைந்து பூமியை பாதுகாக்க வேண்டும். இந்தியாவை பற்றி நல்ல எண்ணத்தை மோடி ஏற்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சி, ட்விட்டரில் இந்திய அளவில் முதல் இடத்திலும், உலக அளவில் 2-வது இடத்திலும் டிரெண்டிங் ஆனது. இதன் மூலம் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது தொடர்பாக பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை ‘Narendra Modi App’ மூலம் அனுப்பலாம். இதில் மிகச் சிறந்த ஆலோசனை வழங்குவோர், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.