October 24, 2021

கமாண்டர் அபியிடம் மோடி மீண்டும் பிரதமாவாரா என்று பாக். ராணுவம் கேட்டதா?

பாகிஸ்தான் பிடியிலிருந்து மீட்கப்பட்ட அபி டீ-ப்ரீஃபிங் நடைமுறைக்கு உட்படுத்தப்படுகிறார் என்றொரு பக்கம் தகவல் வருகிறது. அதே சமயம் தான் பாகிஸ்தானில் பிடிப்பட்ட அன்று மாலை எல்லாரும் என்னை சுற்றி அமர்ந்து கொண்டு பிரதமரை பற்றிய கேள்விகளை எழுப்பினர். முதலில் பதில் கூற மறுத்தேன். பிறகு அது ராணுவ ரகசியம் இல்லை என்பதாலும் அவரை பற்றி உலகமே அறியும் என்பதாலும் அவரைப்பற்றி எனக்கு தெரிந்ததை கூறினேன். ஒரு சில விஷயங்களை மறைத்தேன். அவர்களின் பிரதான கேள்வியே மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா என்பது தான் என்று கேட்டதாக ஒரு தகவல் பரவுகிறது. இதனிடையே டெல்லி மருத்துவமனையில் விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சந்தித்து பேசினார் என்பது மட்டும் போட்டோவுடன் செய்தி வந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி பாகிஸ்தான் பகுதியில் உள்ள பாலகோட் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலின்போது அபிநந்தன் வர்தமான் என்ற விங் கமாண்டர் ஓட்டிய மிக் ரக விமானத்தை பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்

இதில் விமானத்திலிருந்து பாதுகாப்பாக பாராசூட் மூலம் தரையிறங்கிய அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. அதன்பின் சர்வதேச அழுத்தங்கள், இந்தியாவின் நெருக்கடிகள் ஆகியவற்றால், அபிநந்தன் இரண்டரை நாட்களுக்குப் பின் நேற்று இரவு அடாரி வாகா எல்லைப் பகுதியில் இந்திய அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைக்கப் பட்டார். இதையடுத்து, விங் கமாண்டர் அபிநந்தன் நேற்று இரவு 11.45 மணிக்கு டில்லிக்கு அழைத்துவரப்பட்டார்.

இந்நிலையில், இன்று காலை இந்திய விமானப்படை தலைமை அதிகாரி பி.எஸ்.தனோவாவை சந்தித்து பாகிஸ்தான் வசம் காவலில் இருந்தபோது என்ன நடந்தது என்பது குறித்து விவரித்தார். இதனையடுத்து டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் விமானப்படை விமானி அபிநந்தனை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது விங் கமாண்டர் அபிநந்தனின் உடல்நலம் குறித்து விசாரித்த நிர்மலா சீதாராமன், அவரின் மன தைரியம் மற்றும் உறுதியான நிலைப்பாடை கண்டு ஒட்டுமொத்த நாடும் பெருமைக்கொள்வதாக அவரிடம் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் இருந்தபோது நடந்த அனைத்து நிகழ்வுகள் குறித்தும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், அபிநந்தன் விளக்கியுள்ளார்.

அதே சமயம் உடல் ரீதியாக யாரும் துன்புறுத்தவில்லை, ஆனால் மன ரீதியாக பாகிஸ்தானியர்கள் துன்புறுத்தினர் என்று அபிநந்தன் கூறியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் மோடி பிரதமாவரா? என்று பாக் ராணுவம் கேட்டதாக வரும் தகவல் உன்மையில்லை என்றும் தெரிகிறது!