ஏடிஎம்களில் பணம் இல்லை என்றால் வங்கிகளுக்கு ரூ.10,000 அபராதம்!-= ரிசர்வ் பேங்க் அதிரடி!

நாடெங்கும் பல வங்கிகளின் ஏடிஎம் மையங்கள் செயல்பட்டு வந்தாலும் அவசர தேவைக்கு பணம் எடுக்க ஏடிஎம் செல்லும் போது சில சமயம் ஏடிஎம்களில் பணம் இல்லாத காரணத்தினாலும், தொழில்நுட்ப கோளாறு காரணத்தினாலும் பணம் எடுக்க முடியாத நிலை வாடிக்கையாளருக்கு ஏற்படுகிறது. இந்நிலையில் அக்டோபர் 1 ந்தேதி முதல் வங்கி ஏடிஎம்களில்ஒரு மாதத்தில் 10 மணி நேரம் பணம் இல்லாமல் இருந்தால், தொடர்புடைய வங்கிக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் திட்டத்தை ரிசர்வ் வங்கி நடைமுறைப்படுத்துகிறது.

இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் உள்ள தகவல் இதோ:

வங்கிகள் தங்களது ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பப்படாமல் இருக்கும் சூழலை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையாக, ஏடிஎம்களில் பணம் நிரப்பபடாததற்கு அபராதம் விதிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

அதன்படி, அக்டோபர் மாதம் 1 ந் தேதி முதல் ஏடிஎம்களில் ஒரு மாத காலத்தில் 10 மணி நேரத்திற்கும் மேலாக பணம் நிரப்பப்படாமல் இருந்தால், தொடர்புடைய வங்கிக்கு ரூ.10,000 அபராதமாக விதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஏடிஎம்களில் பணம் இல்லாததால் ஏடிஎம் மையங்கள் செயல்படாமல் இருக்கும் நேர அளவை கணக்கில் எடுத்துக் கொள்ளும் அடிப்படையிலும் பணம் இல்லாததால் மக்கள் ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாவதை தடுக்கும் பொருட்டும் இந்த திட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதாக ரிசர்வ் வங்கி தனது அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.