தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வு!

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வு!

இந்தியா முழுவதும் கடந்தாண்டு ரூ.16,365.20 கோடி சுங்கக் கட்டணம் வசூல் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் ரூ.1756.57 கோடியும், ராஜஸ்தானில் ரூ.2,391.39 கோடியும் சுங்கக் கட்டணம் வசூலாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 20 சுங்கச்சாவடிகளில், ஏப்ரல் 1 ம் தேதி முதல், 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில், 461-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அமைத்துள்ளது. இதில் தமிழகத்தில் 46 சுங்கச்சாவடிகள் உள்ளன. அதில், 26 சுங்கச்சாவடிகளில், செப்டம்பர் 1-ந்தேதியில் இருந்தும், 20 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்தும் சுங்கக் கட்டணத்தை உயர்த்துவது நடைமுறையில் இருந்து வருகிறது. இவற்றில் பெரும்பாலானவை 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டவை.

இந்த சுங்கச்சாவடிகள் மூலம் கடந்த 2016-ம் ஆண்டு வரை ஆயிரத்து 560 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. 52 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையில் ஒருமுறை செல்ல, கார், ஜீப், வேன் ஆகியவற்றுக்கு 55 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக கட்டணம் உயர்த்தப்படுகிறது. இலகு ரக வர்த்தக வாகனம், இலகு ரக சரக்கு வாகனம், மினிபஸ் ஆகியவற்றுக்கு 90 ரூபாயில் இருந்து, 95 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது.

லாரி, ஆம்னி பஸ்களுக்கு 190 ரூபாயில் இருந்து, 205 ரூபாயாகவும், 3 ஆக்ஸில் வர்த்தக வாகனங்களுக்கு 205 ரூபாயில் இருந்து, 220 ரூபாயாகவும், கனரக வாகனங்களுக்கு 305 ரூபாயில் இருந்து, 320 ரூபாயாகவும், பெரிதாக்கப்பட்ட வாகனங்களுக்கு 375 ரூபாயில் இருந்து, 390 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதன்மூலம், ஒருமுறை செல்ல, குறைந்தபட்சம் 5 ரூபாய் முதல், அதிகபட்சம் 15 வரை கட்டணம் உயருகிறது. ஆனால் ஒரே நாளில் திரும்பி வரும் கட்டணம், 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!