March 27, 2023

மூளைச்சாவிற்கும் கோமா ஸ்டேஜிக்கும் வித்தியாசங்கள் உண்டு! விரிவான ரிப்போர்ட்

முன்னரெல்லாம் கோமா ஸ்டேஜ்க்கு போய்ட்டார், மீண்டு வரலாம், வராமலும் போகலாம், எதையும் சொல்வற்கில்லை என்று பல மாதங்கள், வருடங்கள்கூட அவருக்கு மருத்துவமனையில் போதிய சிகிச்சையோடு வசதிகள் செய்யப்பட்டோ, அல்லது வீட்டில் படுக்கையிலோ வைத்து பராமரிப்பதுண்டு. ஒரு சிலர் கோமாவிலிருந்து மீண்டு பழையநிலைக்கு வந்துள்ளனர் என்பதற்கும் ஆதாரங்கள் நிறைய உண்டு. மூளைச்சாவிற்கும் கோமா ஸ்டேஜிக்கும் வித்தியாசங்கள் உண்டு. எது கோமா எது மூளைச்சாவு என்பதை அறிய பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

இப்போதெல்லாம் ஒருவர் விபத்தில் சிக்கி தலையில் அடிபட்டு மயக்கநிலைக்கு போய்விட்டால் அவரை ரொம்ப சிம்பிளாக ப்ரெய்ன் டெட் என்று கூறிவிட்டு உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்பினால் தானம் செய்துவிடுங்கள் என்று அடிபட்டவரின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கு கின்றனர். இதில் மருத்துவர்கள் கூறுவதை நம்பி தன்னுடைய பிள்ளையின் உடல்உறுப்புகளை தானமாக எடுத்துக்கொள்ளச்சொல்லும் பெற்றோர்கள் உள்ளனர். இன்னொரு வகையானது, பெற்றோர்களிடம் மருத்துவர்கள் அவர்களின் குடும்ப சூழலை அறிந்து அவர்களுக்கு பணத்தை கொடுத்து உடல்உறுப்புகளை அகற்றுகின்றனர்.

 

மேலை நாடுகளில் மூளைச்சாவு என்று மருத்துவ மனைகள் அறிவிப்பதற்கு ஏராளமான விதிமுறைகள் உண்டு. அவ்வளவு சாதாரணமாக ஒருவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்பதை ஒரு மருத்துவ நிர்வாகம் தன்னிச்சையாக அறிவித்து விடமுடியாது. பல பரிசோதனைகள் செய்யப்பட்டு பின்னர்தான் அறிவிக்கவேண்டும். ஆனால் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்பது சமீபகாலமாக கார்ப்பரேட் மருத்துவமனைகளில் அடிபட்டு அனுமதிக்கும் பலருக்கு சொல்லப்படும் விஷயமாக உள்ளது. ஒருவர் மூளைச்சாவு அடைந்துவிட்டால் அவர் உயிர் உடலில் இருப்பதாகத்தானே பொருள். ஒரு உயிரை இப்படி மூளைச்சாவு, இனி அவ்வளவுதான், அந்த உடல் உயிருந்தும் பிரயோஜனமில்லை என்று சொல்லி உடல்உறுப்புகளை அகற்றுவது என்பது ஒரு கொலைக்கு சமமான விஷயமல்லவா. பெரும்பாலான விபத்துக்களில் இப்படி மண்டையில் அடிபட்டு அனுமதிக்கப்படுவோரை, மருத்துவ மனையின் தேவைகள் அறிந்து, அடிபட்ட நபரின் பெற்றோர்களின் சூழல் அறிந்து ப்ரெய்ன் டெட் என்று சொல்லி ப்ரெய்ன் வாஷ் நடைபெறுகின்றது.

ஒருவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் எனக்கூறி அந்த நபரிடம் இருந்து எடுக்கப்படும் உறுப்புகளானது, மருத்துவமனைகளில் அந்தந்த உறுப்புகளுக்காக காத்திருக்கும் ஆயிரக் கணக்கானோர்கள் காத்திருக்கும் பட்டியலில் பல மாதங்களாக, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருக்க அவர்களுக்கு பொருத்தாமல் கோடிக்கணக்கில் வாரி வழங்கும் செல்வந்தர்களுக்கு பொருத்தப்படுகின்றது. நம் நாட்டில் மருத்துவமும் மருத்துவ சிகிச்சையும் இந்த கார்ப்பெரேட் மருத்துவமனைகளுக்கு கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுத்தருகின்றது என்றால், தற்போது விபத்தில் அடிபட்டு அனுமதிக்கப்படும் பலரின் உயிர்களை, கோமா என்பதற்கு பதில் மூளைச்சாவு என்ற சொல்லை பயன்படுத்தி, அடிபட்டவரின் உடலிலிருந்து அகற்றப்பட்ட உறுப்புகளை கோடிக்கணக்கில் விற்று வியாபாரம் நடத்துகின்றனர். வரைமுறை இல்லாமல், மூளைச்சாவு என்பதை ஒரு மருத்துவக்குழு தீர்மானிப்பதை எப்படி அரசு அனுமதிக்கின்றது, நீதிமன்றங்கள் இவற்றை எல்லாம் எப்படி கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றது என்பது புரியாத புதிர்தான்..

மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்று ஒரு மருத்துவமனை கூறும்போது அதனை அப்படியே நம்பிவிடாமல் வேறொரு மருத்துவமனைக்கு நோயாளியை கொண்டுசென்று பரிசோதித்து உறுதி செய்து கொள்வது நல்லது. ஒருவேளை அது கோமா என்ற நிலையாகக்கூட இருக்கலாம். மீண்டு வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு..

மேலும் முகநூலில் ‘அதிசயம் ஆனால் உண்மை‘ என்ற ஐடியில் மூளைச்சாவு பற்றிய விரிவான விளக்கத்தை நண்பர் ஒருவர் பதிவு செய்துள்ளார். அவர் கூறும் அத்தனை விஷயங்களும் ஒத்துக்கொள்ளக்கூடிய ஒன்றுதான். ஆனால் அவை எல்லாம் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் முறைப்படி நடத்தப்படுகின்றதா என்பது மில்லியன் டாலர் கேள்வி.. அவரது செய்தியில் இடம் பெற்றுள்ள தகவல் இதுதான்!.

கோமாவுக்கும், மூளைச்சாவுக்கும் என்ன வித்தியாசம்

கோமா என்றால் நினைவு இழத்தல் என்பதும், மூளைச்சாவு என்றால் மூளை மரணம் அடைந்துவிட்டது என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால், கோமா எதனால் ஏற்படுகிறது, கோமாவுக்கும் மூளைச்சாவுக்கும் உள்ள வேறுபாடு என்ன, கோமா வந்தவர்களுக்கு மூளைச்சாவு வருமா, கோமா வந்தவர்களுக்கு எப்போது திரும்பவும் நினைவு வரும், என்பதில் நிறைய சந்தேகங்கள் உண்டு.

கோமா என்றால் என்ன?

நமது மூளை சுயநினைவுடன் செயல்பட உதவுவது மூளைப் பகுதியில் இருக்கும் ரெட்டிக்குலார் ஆக்டிவேட்டிங் சிஸ்டம் (Reticular activating system) மூளைத்தண்டுவடம், ஹைப்போதாலமஸ் ஆகிய பகுதிகளில் ஏதேனும் தற்காலிகமான பாதிப்பு ஏற்பட்டால், மூளையின் ‘ரெட்டிக்குலார் ஆக்டிவேட்டிங் சிஸ்டம்’ (RAS) பாதிக்கப்படும். இந்த ஆர்.ஏ.எஸ் பகுதியில் இருக்கும் நரம்புகள் தான் சுயநினைவுக்குக் காரணமாக இருக்கின்றன. பாதிக்கப்படும் அளவைப் பொறுத்து நினைவு இழக்கும் நிலை ஏற்பட்டு மயக்கமடைவார்கள். இந்த சமயங்களில் சுயநினைவுக்குக் காரணமான நியூரான்கள் சரியாக வேலை செய்யாமல், மூளைக்குச் சற்று குறைவாக ரத்தம் மற்றும் ஆக்சிஜன் செல்லும். இது, தற்காலிகமானதுதான். எதனால் ஆர்.ஏ.எஸ் பாதிக்கப்பட்டுள்ளது எனச் சரியாகக் கண்டறிந்து, பாதிப்புக்குக் காரணமான காரணியைச் சரிசெய்தால், கோமாவில் இருந்து மீள முடியும். அதுவரை, அவர்கள் படுத்த படுக்கையாக மட்டுமே இருக்க முடியும்.

ஏன் ஏற்படுகிறது?

தலையில் அடிபட்டு மூளை பாதிக்கப்படுவது, மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு அல்லது விரிசல் ஏற்படுவது, மூளையில் கட்டிகள் வளருவது, உடலில் வேறு பகுதியில் ஏற்பட்ட புற்றுநோய், மூளையைப் பாதிப்பது, அதிக அளவு கதிர்வீச்சால் பாதிக்கப்படுவது, தூக்க மாத்திரைகளை அதிக அளவு எடுத்துக்கொள்வது போன்ற காரணங்களால், மூளை நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு கோமா ஏற்படலாம். இதுதவிர, மூளையில் ஏற்படும் அதிக அழுத்தமும் கோமாவை ஏற்படுத்தலாம். சில சமயங்களில் அதிக வேலை, மன அழுத்தம் காரணமாக ஏற்படும் உயர் ரத்த அழுத்தமும் மூளையைப் பாதிக்கும்.

கோமா ஸ்கோர் அளவைக் கணித்து, தேவையான சிகிச்சை கொடுக்க முடியும். பொதுவாக, மூளைக்கு மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் ரத்தம் செல்லவில்லை எனில், மூளை மற்றும் மூளைத்தண்டு நிரந்தரமாகச் செயல் இழந்து, மீள முடியாத நிலை ஏற்படும். இதனைத் தவிர்க்க, மாரடைப்பு, ஸ்ட்ரோக் மற்றும் விபத்தில் அடிபட நேர்ந்தால், விரைவில் மருத்துவமனையை நாடி, செயற்கை முறையில் ஆக்சிஜன் அளிக்க வேண்டும்.

கோமாவில், சுய நினைவு தவறுமே தவிர, உடனடியாக மரணம் ஏற்பட வாய்ப்பு மிகவும் குறைவு. கண் திறப்பது, பேசுவது, சொன்ன செயலைச் செய்வது ஆகியவற்றைப் பொருத்து, கோமாவில் எந்த நிலையில் உள்ளார் என மதிப்பிடப்படும். (பார்க்க:
டெயில் பீஸ்

கோமாவில் இருந்து ஒருவர் முழுமையாக மீள வழி உண்டா?

நிச்சயமாக மீள முடியும். கோமா ஸ்கோர் அளவைப் பொருத்தும், அளிக்கும் சிகிச்சையைப் பொருத்தும் கோமாவில் இருந்து முழுமையாக மீள முடியும். ஒருவர் ஒருமுறை கோமாவில் இருந்து மீண்ட பிறகு, மீண்டும் அவருக்கு கோமா ஏற்பட வாய்ப்பு மிகக் குறைவு. எனினும், கோமா ஏற்பட்ட காரணம் கண்டறிந்து, விழிப்புடன் இருக்க வேண்டும்.

மூளைச்சாவு எப்படி ஏற்படுகிறது?

விபத்து, கட்டி என மூளையில் ஏற்படும் பாதிப்பு காரணமாக மூளைத்தண்டுவடம் நிரந்தரமாக செயல் இழந்துவிடும். செயற்கை சுவாசம் அளிப்பதன் காரணமாக, இதயம் சிறிது நேரம் செயல்படும் நிலையைத்தான் மூளைச்சாவு என்கிறோம். மூளைச்சாவும் மரணம் அடைவது போன்றதுதான். மூளைத்தண்டுவடம் பகுதியில்தான் மெடுலா ஆப்லங்கேட்டாவும் இருக்கிறது. மெடுலா ஆப்லங்கேட்டா, 2 செமீ அளவுக்கு மிகச் சிறியதாக இருக்கும். இதயத்துடிப்பும், மூச்சு விடுதலும் சீராக இயங்க, இதுதான் காரணம். மூளைத்தண்டுவடத்தில் கட்டி ஏற்பட்டாலோ, மெடுலா ஆப்லங்கேட்டாவில் அடிபட்டாலோ, சில சமயம் மூளை உடனடியாகச் செயல் இழந்துவிடும். சில நிமிடங்களில் இதயமும் செயல் இழக்கும். அதே சமயம், மூளைச்சாவு அடைந்தவர்களுக்கு விரைவாக செயற்கை முறையில் ஆக்சிஜன் கருவியைப் பொருத்தினால், இதயத் துடிப்பு மேலும் 12-24 மணிநேரம் சீராக இயங்கும். வெகு சிலருக்கு, அரிதாக ஒரு வாரம் வரைகூட இதயத்துடிப்பு இருக்கும். ஆனால், செயற்கை ஆக்சிஜனை எடுத்துவிட்டால், இதயத்துடிப்பு நின்றுவிடும். இந்த சூழ்நிலையில்தான், நோயாளியின் குடும்பத்தினரின் அனுமதி பெற்று, சீராக இயங்கும் மற்ற உறுப்புக்களைத் தானமாகப் பெற்று மற்றறவர்களுக்குப் பொருத்தப்படுகிறது.

கோமாவுக்கும், மூளைச்சாவுக்கும் என்ன வித்தியாசம்?

கோமா என்பது நினைவு இழத்தல். அதில் இருந்து மீண்டுவர முடியும். உடனடி மரணம் கிடையாது. சிகிச்சைக்குப் பிறகு நினைவு திரும்ப வாய்ப்புகள் அதிகம். நினைவு திரும்பாமல் உயிர் இழக்கவும்கூடும். ஆனால், மூளைச்சாவு அடைந்துவிட்டால் அதற்கு சிகிச்சை இல்லை.

சாலை விதிகளைப் பின்பற்றுவதாலும், ஹெல்மெட் அணிந்து செல்வதாலும், விபத்தில் தலையில் அடிபடுவதைத் தடுக்க முடியும். ஓய்வு எடுக்காமல் சிந்தித்துக்கொண்டே இருப்பதால், மூளையில் ரத்த அழுத்தம் அதிகமாகும். இதனைத் தவிர்க்க, தியானம் செய்வது நல்லது. அடிக்கடி தலைவலி, வாந்தி, மயக்கம், வலிப்பு போன்றவை ஏற்பட்டால், மூளையில் கட்டி இருக்க வாய்ப்பு உண்டு. மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.

மூளைச்சாவு எப்படி உறுதி செய்யப்படுகிறது?

ஒருவர் மூளைச்சாவு அடைந்துவிட்ட நிலையில், அந்த மருத்துவமனையில் உள்ள பொது மருத்துவர், நரம்பியல் மருத்துவர், நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் முன்னிலையில் ‘ஆப்னியா’ பரிசோதனை செய்யப்படும். இந்தப் பரிசோதனையின்போது, ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் மற்றும் கார்பன்டை ஆக்ஸைடு அளவுகள் கணக்கிடப்படுகின்றன. அதன் பின்னர், செயற்கை சுவாசத்தைத் தற்காலிகமாக நிறுத்தி, அவரால் மூச்சுவிட முடிகிறதா என, மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் பரிசோதிக்கப்படும். தொடர்ச்சியாக மூச்சுவிட முடியவில்லை, இதயத் துடிப்பு குறைகிறது, ரத்த அழுத்தம் மாறுகிறது என்றால், உடனடியாக செயற்கை சுவாசம் அளிக்கப்படும். மூச்சு விடவில்லை என்றாலோ, மூச்சு விடுவதற்கான அறிகுறியே இல்லை என்றாலோ, மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, ரத்தத்தில் கார்பன்டை ஆக்சைடு அளவு பரிசோதிக்கப்படும். கார்பன்டை ஆக்சைடு அளவு 50-ஐத் தாண்டினால் ‘ஆப்னியா’ பரிசோதனை பாசிட்டிவ் எனக் குறித்துக்கொள்வார்கள். பெரியவர்கள் எனில், மீண்டும் ஆறு மணி நேரம் கழித்தும், குழந்தைகள் எனில் வயதைப் பொறுத்து 12-24 மணிநேரங்கள் கழித்தும் மறுபடியும் பரிசோதனை செய்யப்படும். அப்போதும் ‘ஆப்னியா’ பரிசோதனை பாசிட்டிவ் என வந்தால், மூளைச்சாவு அடைந்தது உறுதி செய்யப்படும்.

கோமா ஸ்கோர்

கோமா ஸ்கோரைவைத்தே, கோமாவைக் குணப்படுத்தும் நிலையை மருத்துவர்கள் உறுதிப்படுத்துவார்கள்.

கண்  திறத்தல்

கோ மாவில் இருப்பவர் கண்களைத் திறந்து பார்த்தால், நான்கு மதிப்பெண்கள். கூப்பிடும்போது மட்டுமே பார்த்தால், மூன்று மதிப்பெண்கள். உடலில் எங்கேனும் கிள்ளுதல் அல்லது வலி கொடுத்தலின்போது கண்களைத் திறந்து பார்த்தால், இரண்டு மதிப்பெண்கள். என்ன செய்தாலும் கண்களைத் திறக்கவே இல்லை எனில், ஒரு மதிப்பெண்.

பேசுவது

கேள்விக்குத் தெளிவாகப் பதில் சொன்னால், ஐந்து மதிப்பெண்கள். கேட்ட கேள்விக்கு, சம்பந்தமே இல்லாமல் பதில் அளித்தால், நான்கு மதிப்பெண்கள், பேசவில்லை வார்த்தைகள் மட்டும் ஒன்றிரண்டாக வருகிறது எனில், மூன்று மதிப்பெண்கள், ஏதேனும் உடலில் வலி ஏற்படுத்தினால் மட்டும் சத்தம் வருகிறது எனில், இரண்டு மதிப்பெண்கள். எந்த சத்தமும் வரவில்லை எனில், ஒரு மதிப்பெண்.

சொன்ன செயலை செய்வது

மருத்துவர் சொல்வதைக் கேட்டறிந்து, சரியாகப் பின்பற்றினால், ஆறு மதிப்பெண்கள். சொன்ன வேலையைச் சரியாக செய்யவில்லை, ஆனால், மருத்துவர் உடலில் வலி ஏற்படுத்தும்போது மருத்துவரின் கையைத் தட்டிவிட்டால் ஐந்து மதிப்பெண்கள். வலி ஏற்படுத்தும்போது இன்னொரு பக்கமாகத் திரும்புகிறார் எனில், நான்கு மதிப்பெண்கள். வலி கொடுத்ததும் இரண்டு கை விரல்களையும் இறுக்கிக்கொண்டால், மூன்று மதிப்பெண்கள். வலி ஏற்படுத்தும்போது கைகளை நீட்டினால் இரண்டு மதிப்பெண்கள். என்ன செய்தாலும் சலனமற்று எதையுமே செய்யவில்லை என்றால், ஒரு மதிப்பெண்.

மூன்று செயல்களையும் சேர்த்து பதினைந்து மதிப்பெண் என்பது அதிகபட்ச ஸ்கோர். மூன்று குறைந்தபட்ச ஸ்கோர். கோமா ஸ்கோர் 12-க்கு மேல் எனில், சிகிச்சை மூலம் மிக விரைவில் நினைவு திரும்ப வாய்ப்பு உண்டு. ஏழு முதல் 11 வரை எனில், நினைவு திரும்ப சில நாட்கள் ஆகும். நான்கு முதல் ஆறு எனில் நினைவு திரும்ப சில மாதங்கள் ஆகலாம். கோமா ஸ்கோர் மூன்று எனில், நினைவு திரும்புவது மிகவும் கடினம். தொடர் சிகிச்சை அளிப்பதன் மூலம் இந்த மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

உதய் குமார்