March 29, 2023

சின்னத்திரை எனப்படும் டிவி-க்களில் காலை 9 மணி தொடங்கி இரவு 11.00 மணி வரை ஏகப்பட்ட தொடர்கள்தான் நம் வீட்டு உறுப்பினர்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. உறவினர்கள் யாராவது வந்தால் கூட விரோதிகளைப் போல பார்க்கும் மனோபாவம்தான் அதிகரித்து வருகிறது. அப்படி வரும் சீரியல்களில் இன்றைக்கு வாழ்க்கைக்கு சற்றும் தொடர்பு இல்லாத வாழ்விற்குத் தேவையற்ற விசயங்களைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன என்று முணுமுணுத்தாலும் நாமும் பொழுது போகவில்லை என்பதற்காக கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகவே சீரியல்களை தொடர்ந்து பார்த்து பழகியதோடு நமது எண்ணத்தில் நாமே ஒருவித மாயையை ஏற்றிக் கொண்டிருக்கின்றோம். இந்த மனநிலையை புரிந்து மேற்படி சப்ஜெக்டில் ஒரு பேமிலி சப்ஜெக்டை எடுத்துக் கொண்டு  தனக்கே உரிய பாணியில் ‘Coffe with காதல் ‘ என்ற தலைப்பில் ஒரு சினிமாவை வழங்கி உள்ளார் சுந்தர் சி.

இந்த சீரியலின் ..ஸாரி படத்தின் கதை என்னவென்றால் ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய் ஆகியோரின் சகோதரி டிடி. டிடி என்றழைக்கப்படும் திவ்யதர்ஷினி திருமணம் ஆகி குழந்தைப் பேறுக்காக அம்மா வீட்டுக்கு வந்திருக்கிறார். அண்ணன் ஸ்ரீகாந்த்துக்கு ஏற்கனவே சம்யுக்தாவுடன் திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது. ஜீவா வெளிநாட்டில் தன் காதலியுடன் லிவ்-இன் உறவில் இருக்க, ஒரு கட்டத்தில் அது பிரேக்கப் ஆகிறது. இந்தச் சூழலில் அவர் வீட்டுக்கு வர ஜெய்க்கும், ஜீவாவுக்கும் சேர்த்து திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. ஜெய் சொத்துக்காக வீட்டில் பார்த்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள சம்மதித்தாலும் தனது தோழியான அம்ரிதா மேல் காதல் இருப்பதைப் பின்பு புரிந்து கொள்கிறார். இதற்கிடையில் ஜெய்க்குப் பார்த்த பெண்ணுக்கும் ஜீவாவுக்கும் இடையில் காதல் வர ஒருகட்டத்தில் அதைத் தவிர்க்கிறார் ஜீவா. பின்பு தன் பிரேக்கப் விஷயத்தை வீட்டில் சொல்லி வேறு பெண் பார்க்க சொல்ல, ஸ்ரீகாந்தின் காதலியான ரைசா உள்ளே வருகிறார். இப்படி ஒரு இடியாப்பச் சிக்கல் காதல் கதையில் யார் யாருடன் சேர்ந்தார்கள் என்பதுதான் ‘காஃபி வித் காதல்’.

அண்ணன் தம்பியாக வரும் ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய் ஆகியோர் ஏற்றுள்ள கேரக்டருக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஶ்ரீகாந்த், மனைவியை இக்னோர் செய்து விட்டு ரைசா வில்சன் பின்னாள் சுற்றும் ஸ்ரீகாந்த், அதே ரைசா வில்சன் தனது தம்பிக்கு மனைவியாக போகிறாள், என்பதை அறிந்ததும் பதறும் காட்சிகள் கொஞ்சம் நம்பும்படியாக இல்லாவிட்டாலும் இருந்தாலும், காமெடியாகவே இருக்கிறது..

ஜீவா, காதலித்த பெண், விட்டு சென்ற பின் வருந்துவது, மீண்டும் வேறொரு பெண்ணை காதலிப்பது, தம்பிடம் சண்டை போடுவது என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். ஜெய், வழக்கம் போல் விட்டேத்தியாக காதலா, கனவா என்று வித்தியாசமான நடிப்பை கொடுத்து இருக்கிறார். நாயகிகளாக நடித்திருக்கும் மாளவிகா சர்மா மற்றும் அம்ரிதா ஐயர், கமர்ஷியல் படங்களுக்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள். காதல், காமெடி, ஆட்டம், பாட்டம் என்று அவர்கள் படம் முழுவதும் வருகிறார்கள். டிடி பாவம் புள்ளைத்தாய்ச்சியாகவே வாழ்ந்திருக்கிறார்.

காமெடி காட்சிகளுக்கெனவே அவதரித்து இருக்கும் கையில் எடுத்தியிருக்கும் யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி வரும் காட்சிகள் அனைத்தும் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது. ஆனால், பல கெட்டப்புகளில் வரும் யோகி பாபு, கெட்டப்பின் எண்ணிக்கையை விட காமெடி காட்சிகள் கொஞ்சம் குறைச்சல் என்பதுதான் சோகம்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பொருத்தமாக இருக்கிறது. பாடல்கள் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தாலும், படம் முடியும் போது வரும் “ரம்பம்பம்…ஆரம்பம்…” பாடல் ஸ்மைலியை வரவைக்கிறது..

தேவையான அளவு கிளாமர், பாடல், முடிந்த அளவு காமெடி என தன்னுடைய வழக்கமான டெம்ப்ளேட் ரூட்டையே இதிலும் பின்பற்றி கதை சொல்லி இருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி. இப்படம் எடுத்ததுக் குறித்து அவர், ‘படம் பார்க்கும் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கதாபாத்திரத்துக்குள் தன்னை பொறுத்திக்கொள்வது நிச்சயம். படம் தொடங்கியதில் இருந்தே ஒரு புன்னகையுடன் பார்க்கும்படியான ஒரு பீல் குட் படம் எடுக்கவேண்டும் என்ற எனது ஆசை, இந்த படம் மூலம் நிறைவேறி இருக்கிறது’ என்று சொன்னார்..!

ஆக சுந்தர் சி ஆசையை நிறைவேற்றிய படமிது

,மார்க் 3/5