August 20, 2022

காபி டே சித்தார்த் கொடுத்த மகிழ்ச்சி துயரமாகி போனது ஏனோ?

2000களின் தொடக்கத்தில் கோவை மாதிரி நகரத்தில் காபிடே என்பது ஒரு கனவுப்பகுதி. இன்டர் நெட்டோடு காபிக்கடை. எப்போதும் நிறைந்திருக்கிற அழகிய மங்கைகள். என்னைப் போன்ற ஏழைப் பையன்கள் உள்ளே நுழைவதற்கே அஞ்சித் தயங்குவோம். நமக்கெல்லாம் அங்கே வேலை கூட கிடைக்காது என நினைத்திருக்கிறேன். அந்த அச்சம் இன்றுவரை கூட எச்சமிச்சமாக நீடிக்கிறது. எப்போதுமே என்னைப்போன்ற லோயர் மிடில் கிளாஸ் ஆட்களுக்கு ஹேங்அவுட் ஸ்பாட்டாக சிசிடி இருந்ததேயில்லை. பெரிய இடத்து யுவன் யுவதிகள் வந்து போகிற இடமாகத் தான் இருந்திருக்கிறது.

காதல்தான் அக்கடைக்கு என்னை இழுத்துச்சென்றது. அவர்களுடைய நிர்பந்தத்தாலும், அவர் களோடு அதிக நேரம் தொந்தரவு இல்லாமல் தனியாக அமர்ந்து பேச ஏற்ற இடம் என்பதாலும்தான் பல நேரங்களில் காபிடே கடைகளை நாடியிருக்கிறேன். ப்ரபோஸ் பண்ண, பிறந்தநாள் பரிசளிக்க, ரகசிய முத்தம் தர இதைவிட சிறந்த இடம் கிடைக்காது. அங்கே ஒருநாளும் மகிழ்ச்சியோடு பில்லுக்கு பணம் கட்டியதில்லை. குடித்த எந்த வகைக் காபியும் ஒருநாளும் ருசியாக உணர்ந்த தில்லை. ஆனால் Lot happened over that sumaarana Coffee. ஏகப்பட்ட நினைவுகளை சிசிடி கொடுத்து இருக்கிறது. ரகசிய முத்தங்களுக்கும், முதல் முறை காதலை சொல்வதற்கும் மட்டுமில்லை பிரிவுகளுக்கான சந்திப்புகளுக்கான கடைசி கை குலுக்கல்களுக்கான இடமாகவும் அவை இருந்திருக்கின்றன.

காபிடேவில் எப்போது நுழைந்தாலும் அதன் ஏதாவது ஒரு மூலையில் ஒரு இளைஞன் லேப்டாப் போடு அமர்ந்திருப்பதை பார்க்கலாம். காபிடேவை தங்களுடைய அலுவலகம் போல பயன்படுத்திய எண்ணற்ற அலுவலகமில்லா இளம் தொழிலதிபர்களை அறிவேன். காலையில் லேப்டாப்போடு போய் அமர்ந்தால் நாள் முழுக்க ஒரே காபி ஓசி இன்டர்நெட்டில் தங்களுடைய நிறுவனத்தை வளர்த்து பின்னாளில் பெரிய அலுவலகங்களில் குடிபுகுந்தவர்கள் உண்டு.

பல காதலர்களின் முதல் சந்திப்புகள் மட்டுமல்ல, பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் முதல் சந்திப்புகளும் காபிடேவில்தான். மிஷ்கின் மாதிரி படைப்பாளிகளுக்கு லேண்ட்மார்க் எப்படியோ அப்படித்தான் முதலாளி ஆக விரும்பிய இளைஞர்களுக்கு காபிடே. இந்தியா மாதிரியான நாட்டில் மிடில் கிளாஸை ஈர்த்திடாத எந்த லார்ஜ் ஸ்கேல் பிஸினஸும் லாபம் ஈட்டியதாக சரித்திரம் இல்லை. ஆரம்பத்தில் அப்படியொன்றும் லாபம் ஈட்டுகிற பிஸினஸ் மாடலாக சிசிடி இருக்க வில்லை. 2000ன் பிற்பகுதியில் ஏற்பட்ட ஐடித்துறை வளர்ச்சி சிசிடிக்கு பெரிய அளவில் உதவியது. மேல் நடுத்தரவர்க்கத்தினரின் எண்ணிக்கை உயர்ந்த போது சிசிடியும் வளர்ந்தது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு காபிடேவுக்கு போட்டியாக பரிஸ்டாவும் ஸ்டார்பக்ஸும் நுழைந்த போது… அது ஆட்டம் காணத்தொடங்கியது. மேல்நடுத்தர வர்க்கத்திற்கு இன்னும் கூட அதிக ஷோக்கு அவசியமாக மாறத்தொடங்கியது. காபிடே கடைகள் முந்தைய கொண்டாட்டங்களை இழந்து ஈயாடத்தொடங்கியது.

கடந்த சில ஆண்டுகளில் காபிடே கடைகளின் அணுகுமுறையிலும் நிறையவே மாற்றங்கள். ஒரே காபியோடு அதிக நேரம் கடையில் அமர்ந்திருப்பவர்களை வித்தியாசமான மெத்தட்களில் விரட்டி அடிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறேன். எதையாவது வாங்கிக்கொண்டே இருக்க வேண்டும், அரைமணிநேரம்தான் ஓசி இன்டர்நெட் என நெருக்க தொடங்கினார்கள். காபிடேவின் அடிப்படையே வாடிக்கையாளர்களை ரிலாக்ஸ்டாக வைத்திருப்பதுதான். ஆனால் எந்நேரமும் நம்மை எதுவுமே வாங்காமல் அமர்ந்திருக்கிறோம் என்ற குற்றவுணர்வின் வழி பதட்டத்திற்கு உள்ளாக்கிக் கொண்டிருப்பார்கள் சில கடைகளில்.

விஜி சித்தார்த்தாவின் கனவுக்கடை இந்த காபிடே. இந்தியாவில் இப்படி ஒரு விஷயத்தை முயற்சி செய்து அதை வெற்றிகரமாக நடத்திக்காட்டியதெல்லாம் அபாரமான சக்ஸஸ் ஸ்டோரி. அவருடைய மறைவு பல்வேறு குழப்பங்களையே கொடுக்கிறது. எது வெற்றி… எது தோல்வி… எது முயற்சி… எது ஆறுதல்… என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.

லட்சக்கணக்கானோருக்கு ஒரு காபியோடு நிறைய ஆசுவாசத்தையும் அளவில்லா அமைதி யையும் அள்ளிக் கொடுத்த சித்தார்த்தாவுக்கு அந்த இரண்டுமே கிடைக்காமல் போனதும் அவர் தற்கொலையை தேர்ந்தெடுத்துக்கொண்டதும் சோகம்தான். என்னைப்போல எத்தனையோ பேருக்கு ஆசுவாசத்தையும் பசுமையான பல நினைவுகளை வழங்கியவர்… அவருக்கு இப்படி ஒரு மரணம் வாய்த்திருக்கக்கூடாது. அஞ்சலிகள்.

அதிஷா வினோ