October 19, 2021

கோலமாவு கோகிலா – விமர்சனம்!

நம் தமிழ்நாட்டுக்கு கூப்பிடு தூரத்தில் இருக்கும் கடவுளின் தேசமான கேரளா தண்ணீரில் மூழ்கி கூக்குரல் எழுப்பி கொண்டிருக்கிறது ஒரு பக்கம்.. இன்னொரு பக்கம் மத்திய அரசை ஆளும் பாஜக என்ற கட்சியை தோற்றுவித்தவரும, முன்னள் பிரதமருமான வாஜ்பாய் காலமாகி நாடே அஞ்சலி செலுத்தி கொண்டிருக்கிறது. ஆனால் இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்று உரத்த குரல் கொடுத்து எர்லி மார்னிங் ஷோ போட்டு கொண்டாடி தீர்தார்கள் நயன்தாரா ரசிகர்கள். ஆம்.. கடந்த 17ம் தேதி கோ .கோ, அதிகாலை காட்சியெல்லாம் போட்டு அதகளம் செய்து விட்டார்கள். கோலிவுட் முக்கியஸ்தர்களிடம் இது குறித்து விசாரித்தால் , ”அகில உலக சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழி யுடன் சிவா நடித்த தமிழ் படம் இதே அதிகாலை காட்சி போட்டு கொண்டாடிய போதே எங்கள் மீதான மாயை எங்களுக்கே காணாமல் போய் விட்டது.” என்கிறார்கள். ஹூம்ம்.. அதுவும் சரிதான்.. அதனாலேயே ரஜினி நடித்த சந்திரமுகி’ படத்துல வர்ற ‘கங்கா சந்திரமுகி ரூமுக்கு போனா… கங்கா சந்திரமுகியா நின்னா… கங்கா சந்திரமுகியா தன்ன நினைச்சுகிட்டா… கங்கா சந்திரமுகியாவே மாறிட்டா’ வசனம் மாதிரி நிஜமாகவே தன்னை (லேடி) சூப்பர் ஸ்டார் என்று நம்பும் நயன்தாரா- வுக்கென ரசிகர்கள் இருப்பதால் கொண்டாடுவது தப்பே இல்லைதான்.

அது சரி.. படத்தின் கதைக்குள் நுழையும் ஒரு விஷயம் – இங்குள்ள ஏனைய ஹீரோயின்களை விட ஒரு படி மேல் ஏன் நயன்தாரா இருக்கிறார் என்றால் சமீப காலமாக அது அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படதின் கதை கேட்டு நடிக்கிறார் என்பதுதான்.

அதாவது ஒரு நடுத்தர குடும்பத்தில் இருப்பவர். அப்பா ஏ டி எம் ஒன்றில் வாட்ச் மேன். வழக்கம் போல் ஒரு காலேஜ் போகும் தங்கை. ஆனாலும்  அன்றாடம் வாழ்க்கை நடத்தவே கஷ்டப் படும் இந்த நாயகி நயன்தாராவின் அம்மா சரண்யாவிற்கு கேன்சர் இருப்பது தெரிய வருகிறது.  அதனால் அவரின் மருத்துவ செலவிற்கு லட்சக்கணக்கில் பணம் தேடி அலையும் பொழுது ஒரு போதைப் பொருள் கடத்தும் கும்பலை மீட் செய்கிரார். தன் குடும்பத் தேவைக்காக அதே போதைப் பொருளைக் கடத்த முடிவு செய்து அதை செய்யும் போது  சந்திக்கும் சில பிரச்சனைகளே படத்தின் கதை.

இப்படி ஒரு நடுத்தர் குடும்பத்து கொஞ்சம் புத்திசாலியும் நிறைந்த பெண் தன் குடும்பத்துக்காக செய்யும் காரியங்கள் நம்ப முடியாதவையாக இருக்கின்றன..கூடவே மிக தவறானவை என்றாலும் அதை நயன் செய்யும் போது ரசிக்கவே தோன்றுகிறது என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். நாயகி நயன் முகத்தில் முன்னெல்லாம் நிறைய எக்ஸ்பிரஷன்கள் வரும்.. ஆனால் இந்த படத்தில் ஜஸ்ட் ரெண்டே முக பாவனைதான்.. அப்பாவி முகம்,, எக்ஸ்ட்ரா அப்பாவி முகம்.. அம்புட்டுத்தான்.. அத்துடன், படம் நெடுக முதுகில் பையும் ஒரே மாதிரியான உடையும் வருவது கொஞ்சம் சலிப்பை தந்தாலும் கதையோட்டத்தில் இக்குறை கரைந்து போய் விடுவதென்னவோ நிஜம்.

விஜய் டிவியில் தொழில் கற்று விட்டு யாரிடமும் ஸ்ட்ரெய்டாக கோலிவுட்டுக்குள் , அதுவும் லேடி சூப்பர் ஸ்டாரை வைத்து திரில்லர் கலந்த காமெடிப் படம் ஒன்றை தந்து சகலரையும் கவர முயன்று இருக்கிறார் இயக்குனர் நெல்சன். அதற்காக அப்பாவியாக இருக்கும் நயன்தாராவைக் காதலிப்ப வராக வரும் யோகிபாபுவின் முகத்தையும், இயல்பையும் கிண்டலடித்தே தியேட்டரில் சிரிப்பலை யை ஏற்படுத்துகிறார். என்றாலும் நகைச்சுவை என்பது இது அல்ல என்று இயக்குநருக்கு போகப் போக புரியக் கூடும். அனிருத்தின் இசை பரவாய் இல்லை ரகம்தான்.

மொத்தத்தில் ஆரம்ப காட்சிகளில் கோலிவுட்டுக்கு தேவையான இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, காரம், துவர்ப்பு. என அறுசுவைகளையும் ஏனோ தானோவென்று மிக்ஸ் செய்த விருந்து  ஒன்றை படைத்தவர் இரண்டாம் பாதியில் உப்பு, மற்றும் துவர்ப்பு பதார்தங்களை அதிகம் கொடுத்து பந்தி யை டல் அடித்து விட்டார். அதிலும் கிளைமாக்ஸ் ரொம்ம்ம்பச் ரொம்பச் சாதாரணம்.

மொத்தத்தில் நயன்தாரா ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு விருந்தாக இருக்கலாம்.

மார்க் 5 / 2.75