March 22, 2023

அமெரிக்க அதிபர் தேர்தல் : ட்ரம்ப் பின்னடைவு – சி .என். என். கருத்து கணிப்பு

அமெரிக்காவில் இந்தாண்டு கடைசிவாக்கில் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிட தயாராகி விட்டார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் களமிறங்க உள்ளார். அதிபர் தேர்தலில் மக்களின் ஆதரவு யாருக்கு என்பது குறித்த கருத்துக் கணிப்புகளை சிஎன்என் நிறுவனம் அடிக்கடி வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை நடைபெற்ற கருத்துக் கணிப்பின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. கருத்துக் கணிப்பில் தற்போது தேர்தல் நடைபெற்றால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, ட்ரம்புக்கு ஆதரவாக 38 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர். அவரை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 14 விழுக்காடு கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைபெற்ற கருத்துக் கணிப்புகளில் ட்ரம்ப் பெற்ற மிகக்குறைவான வாக்கு சதவீதம் இதுவாகும்.

கொரோனா தாக்குதலுக்கு எதிரான டிரம்பின் நடவடிக்கைகள் மற்றும் ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப் பட்ட சம்பவம் ஆகியவற்றுக்குப் பின் நடைபெற்ற இந்த கருத்துக் கணிப்பில் ஒட்டு மொத்தமாக 57 சதவீதம் பேர் ட்ரம்பின் தலைமைக்கு எதிராக வாக்களித்து உள்ளனர். எதிர்க் கட்சியான ஜனநாயகக் கட்சியினரிடம் டிரம்புக்கு ஆதரவாக வாக்களிப்பீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஒரு சதவீதம் பேர் மட்டுமே சாதகமாக பதிலளித்துள்ளனர். இதன் மூலம் எதிர்க்கட்சியினரிடம் மிகக்குறைந்த ஆதரவைப் பெற்ற அதிபராக ட்ரம்ப் இருப்பது தெரியவந்துள்ளது.

ஃப்ளாய்டின் மரணத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களை ட்ரம்ப் கையாண்ட விதம் போராட்டத்தை தணிக்க உதவியாக இருப்பதற்கு பதிலாக தீங்கு விளைவிப்பதாக இருந்தது என 65 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்த ட்ரம்ப், சிஎன்என் கருத்துக் கணிப்பு முடிவு கள் போலியானவை என்றும், கடந்த தேர்தலில் தன்னை விட ஹிலாரி அதிக ஆதரவைப் பெற்றிருந்ததாக அந்நிறுவனம் கூறியிருந்தது பொய்யாகிப் போனதாகவும் குறிப்பிட்டுள்ளார்.