August 15, 2022

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு தகைசால் தமிழர் விருது!

ந்தாண்டுக்கான ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான்றிதழ் வழங்குகிறார்.

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது 2021 – ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ​இந்த ஆண்டிற்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, விடுதலைப் போராட்ட வீரராக தன் இளம் வயதை சிறைச்சாலையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும், கழித்தவரும், ஏழை எளிய மக்களுக்காக குரல்கொடுத்து சமூக நல்லிணக்கத்தினையும், சுற்றுச்சூழலையும் காத்திட தொடர்ந்து பாடுபட்டுவருவதுடன், சிறந்த தன்னலமற்ற அரசியல்வாதியாகவும் பணியாற்றி, தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை அளித்த தமிழருமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு விருது வழங்க முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி 2022-ஆம் ஆண்டிற்கான “தகைசால் தமிழர் விருது” வழங்க தேர்வுக் குழுவினரால் நல்லகண்ணு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். “தகைசால் தமிழர்” விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லகண்ணுக்கு, பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.