September 20, 2021

சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம்! – முதல்வர் திறந்து வைத்தார்

சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் உருவப்படத்தை சட்டப்பேரவையில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில், ராமசாமி படையாட்சியாரின் உருவப்படத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்.

தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் முதல்வர்களாக இருந்த தலைவர்களின் முழு உருவப்படங்கள் தமிழக சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ளன. பேரவையில் இதுவரை மொத்தம் 11 தலைவர்களின் படங்கள் திறக்கப்பட்டுள்ளன.
மகாத்மா காந்தியடிகள் படத்தை, கடந்த 1948-ஆம் ஆண்டு ஜூலை 24-ஆம் தேதி அப்போதைய கவர்னர் ஜெனரல் ராஜாஜி திறந்து வைத்தார். இதேபோன்று, ராஜாஜியின் படத்தை 1948-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி அப்போதைய பிரதமர் நேருவும், திருவள்ளுவர் படத்தை 1964-ஆம் ஆண்டு மார்ச் 22-இல் அப்போதைய குடியரசு துணைத் தலைவர் ஜாகீர் உசேனும் திறந்து வைத்தனர்.

முன்னாள் முதல்வர்கள் அண்ணாவின் படத்தை 1969-ஆம் ஆண்டு மார்ச் 22-ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியும், காமராஜர் படத்தை 1977-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-இல் அப்போதைய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவரெட்டியும், எம்.ஜி.ஆர். உருவப்படத்தை 1992-ஆம் ஆண்டு ஜனவரி 31-இல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவும் திறந்து வைத்தனர்.

முத்துராமலிங்கத் தேவர், பெரியார், அம்பேத்கர், காயிதே மில்லத் ஆகியோரின் உருவப்படங்களை, ஒரே நேரத்தில் கடந்த 1980-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி அப்போதைய கேரள ஆளுநர் ஜோதி வெங்கடாசலம் திறந்து வைத்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி, பேரவைத் தலைவர் பி.தனபால் திறந்து வைத்தார். சட்டப்பேரவையில் இதுவரை 11 முக்கியத் தலைவர்களின் முழு உருவப்படங்கள் இடம்பெற்றுள்ளன. 12-ஆவதாக சுதந்திரப் போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியாரின் உருவப்படம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யார் இந்த ராமசாமி படையாட்சி?

1918, செப்டம்பர் 16ல் பிறந்தவர் சிவ சிதம்பர ராமசாமிப் படையாட்சியார். மக்கள் இவரை எஸ்.எஸ்.ராமசாமிப் படையாட்சியார் என அழைத்தனர். சுதந்திரப் போராட்ட வீரரான இவர், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை 1951ல் தோற்றுவித்தார். 1952ல் நடந்த சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் இவரது தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி சட்டப்பேரவையில் 19 இடங்களிலும், நாடாளுமன்ற மக்களவையில் 4 இடங்களிலும் வெற்றி பெற்றது, ராமசாமிப் படையாட்சியார் சட்டமன்ற உறுப்பினரானார்.

அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 152 பேரவை இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி ஆதரவால் காங்கிரசின் ராஜாஜி தமிழக முதல்வரானார். பின்னர் 1954 ஆம் ஆண்டில் கர்மவீரர் காமராசரின் அழைப்பை ஏற்று காமராசர் தமிழக முதல்வராகவும் இவர் ஆதரவளித்தார், அதனால் காமராசரின் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப்பும் அளிக்கப்பட்டார்.பின்னர் 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் திண்டிவனம் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கும் ராமசாமிப் படையாட்சியார் தேர்வானார்.

இப்படிப் பல சிறப்புகளைப் பெற்ற இவர், கடந்த 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி மறைந்தார். அந்நிலையில் 1993 ஆம் ஆண்டில் தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து விழுப்புரத்தைத் தலைநகரமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவான போது அது, ‘விழுப்புரம் இராமசாமி படையாட்சியார் மாவட்டம்’ என்றுதான் பெயரிடப்பட்டது. பின்னரே அது ‘விழுப்புரம் மாவட்டம்’ என்று மாறியது.

தமிழக அரசியலில் மிக முக்கிய தலைவர்களில் ஒருவரான ராமசாமிப் படையாட்சியாரின் நினைவைப் போற்றும் விதமாக, அவரது பிறந்தநாளை, கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அரசு விழாவாக அறிவித்து அன்னாரின் புகழைப் போற்றினார். அத்தோடு கடலூரில் ராமசாமிப் படையாட்சியாருக்கு 2 கோடியே 15 லட்சத்தில் மணிமண்டபம் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கு அடிக்கல்லும் முதல்வரால் நாட்டப்பட்டது.இந்த மரியாதைகளின் தொடர்ச்சியாகவே இப்போது தமிழக சட்டப்பேரவையின் மண்டபத்தில் சுதந்திரப் போராட்ட வீரர், முன்னாள் அமைச்சர் ராமசாமிப் படையாட்சியாரின் திருவுருவப் படமும் திறக்கப்பட்டு உள்ளது.

அடிசினல் ரிப்போர்ட்:

1952 தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காமராசர் , வன்னியர்களுக்கு இரண்டு தொகுதி மட்டுமே தருவேன் என்று வன்னியர்களை ஏமாற்றிய போது , அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த ராமசாமிப படையாட்சியார் ,கட்சி ஆரம்பித்த ஒரே மாதத்தில் தனித்து நின்று தேர்தலைச் சந்தித்து 19 எம்.எல்.ஏக்களைப் பெற்றிருந்தார். 1954 இல் ராஜாஜிக்கு எதிராக களத்தில் இறங்கிய காமராசர் முதல்வராக ஆவதற்கு ராமசாமி படையாட்சியார் ஆதரவு தேவைப்பட்டது.

பெரியார் மூலம் ராமசாமிப் படையாட்சியாருக்கு நெருக்கடி கொடுத்தபோது – எங்கள் சமூகப் பிள்ளைகளுக்கு கல்விக்கான அரைக் கட்டணச் சலுகைத் தரவேண்டும் என்ற சாதாரண கோரிக்கையை நிபந்தனையாக வைத்து தனது ஆதரவை தந்து காமராசரை முதல்வர் ஆக்கினார் .