September 18, 2021

டெல்லியில் பிரதமரிடம் நம் முதல்வர் கொடுத்த கோரிக்கைகள் என்னென்ன?

தமிழக முதல்வராக 6-வது முறையாக பதவியேற்ற பிறகு முதல்முறையாக ஜெயலலிதா டெல்லி சென்றார். முதல்வர் ஜெயலலிதாவை அதிமுக எம்.பி.க்கள் 50 பேரும் விமான நிலையத்தில் அணிவகுத்து வரவேற்றனர். விமான நிலையத்திலிருந்து முதல்வர் நேராக தமிழ்நாடு இல்லத்துக்குச் சென்றார். முதல்வருடன் தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ், நிதித்துறை செயலாளர் சண்முகம் ஆகியோரும் டெல்லி சென்றனர். இதன் பின்னர் முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடியை அவரது ரேஸ் கோர்ஸ் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது 29 தலைப்புகளில் 96 பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனுவை பிரதமரிடம் ஜெயலலிதா அளித்தார். அதன் விவரம் இதோ:

pm cm june 15
காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவையும் காலம் தாழ்த்தாமல் அமைக்க வேண்டும். மேக்கேதாட்டு பகுதியில் காவிரியின் குறுக்கே இரண்டு தடுப்பணைகளைக் கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் 2014, மே 7-ஆம் தேதி அளித்த தீர்ப்பின்படி “பேபி அணை’ பகுதியை வலுப்படுத்தும் நடவடிக்கைக்கு ரூ. 7.85 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதையொட்டி, பேபி அணை பகுதியில் நீர் வரத்தை உறுதிப்படுத்த 23 மரங்களை வெட்ட மத்திய வனம், சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கேட்டு கடந்த ஆண்டு, மே 29-இல் கடிதம் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில், விரைவில் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகாநதி- கோதாவரி- கிருஷ்ணா- பெண்ணாறு- பாலாறு- காவிரி- வைகை நதிகளை குண்டாறு வரை நீட்டிக்கும் வகையில் நதிகளை இணைக்க வேண்டும். மேற்கு நோக்கிப் பாயும் பம்பா, அச்சன்கோவில் நதிகளை தமிழகத்தின் வைப்பாற்றுக்குத் திருப்பிவிடுவது பற்றி ஆய்வு செய்ய மத்திய அரசு நியமித்த ஒன்பது பேர் கொண்ட குழு இதுவரை எவ்வித முடிவையும் எடுக்கவில்லை.

வெள்ள மேலாண்மைத் திட்டத்தின் கீழ் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை ரூ. 1,892 கோடியில் நிறைவேற்ற தமிழக அரசு உத்தேசித்துள்ளது. ஆனால், மத்தியில் முன்பு ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அந்தத் திட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை. அந்தத் திட்டத்துக்கான செலவை மறுமதிப்பீடு செய்து விரைவில் அனுப்பி வைக்கிறோம். அதற்கு முன்னுரிமை கொடுத்து அனுமதி வழங்க வேண்டும்.

இலங்கைக் கடற்படையால் 21 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குச் சொந்தமான 92 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களை விரைவில் மீட்டு படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி துன்புறுத்துதலுக்கு ஆளாவதைத் தடுக்க அவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்ட வேண்டும். அதற்கு ஏதுவாக, இலங்கையுடன் 1974, 1976 ஆகிய ஆண்டுகளில் இந்தியா செய்து கொண்ட கச்சத்தீவு உடன்பாட்டை மத்திய அரசு திரும்பப் பெற்று பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தை புனரமைக்கும் நடவடிக்கையை தமிழக மீனவர்களின் ஒப்புதல் பெற்ற பிறகே செயல்படுத்த வேண்டும். கச்சத்தீவில் இலங்கைக் கடற்படை முகாமிட்டுள்ளதை ஊடகங்கள் ஒளிரப்பியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளை கொள்முதல் செய்வதற்காக ரூ. 1,520 கோடியில் மதிப்பில் பிரத்யேக சிறப்புத் தொகுப்புதவித் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. அதற்குத் தேவையான நிதியுதவியை வழங்க வேண்டும். அதிவேக டீசல் படகுகளுக்கான டீசல் மீதான மத்திய கலால் வரியைத் திருப்பித் தர வேண்டும், ராமநாதபுரம் மூக்கையூரில் மீன்பிடித் துறைமுகம், தமிழக அரசின் மீன்பிடித் துறைமுகங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை வழங்க வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த மீனவ சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

கூடங்குளத்தில் இரண்டாவது அணு உலையை விரைவில் செயல்படுத்துதல், செய்யூரில் 4000 மெகாவாட் அல்ட்ரா மெகாவாட் மின்சார உற்பத்திக்கான ஏல நடைமுறையை விரைவுபடுத்துதல், மின் வாரியக் கடன்களை ஏற்றுக்கொள்ள வகை செய்யும் மத்திய அரசின் “உதய்’ திட்டத்தின்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனத்தின் (டிஏஎன்ஜிஇடிசிஓ) ரூ. 17,500 கோடி கடனை சில நிபந்தனைகளுக்கு உள்பட்டு தமிழக அரசே ஏற்பது ஆகிய மாநில அரசின் யோசனைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மின்னணு சாதனங்கள் உற்பத்தி முனையத்தை புனரமைப்பது, நோக்கியா நிறுவனத்தை ஏற்க முன்வந்துள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தின் யோசனையையும் பரிசீலிக்க வேண்டும்.

வரிகளுக்கான மத்திய – மாநில பங்கீடு தொடர்புடைய பதினான்காவது நிதி ஆணையத்தின் அணுகுமுறையால் தமிழகம் மோசமான விளைவுகளைச் சந்தித்துள்ளது. இதனால் ஆண்டுக்கு

ரூ. 6,000 கோடி என்ற அளவில் தமிழகம் இழப்பைச் சந்தித்து வருகிறது. எனவே, 2019-2020 நிதியாண்டு வரை 14-ஆவது நிதியாண்டின் மீதமுள்ள நான்கு ஆண்டுகளுக்கு சிறப்பு மானியமாக ரூ. 2000 கோடியை ஆண்டுதோறும் வழங்க வேண்டும். 13-ஆவது நிதி ஆணையம் பரிந்துரையின்படி உள்ளாட்சி, மாநில பேரிடர் மீட்பு நிதி போன்றவற்றுக்காக ஐந்து ஆண்டுகளுக்கு வழங்க வேண்டிய ரூ. 11,366.90 கோடி மானியத்தில் இதுவரை ரூ. 1,805.82 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு உத்தேசித்துள்ள சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) முறையால் உற்பத்தி மாநிலமான தமிழகம் ஏராளமான வருவாய் இழப்பைச் சந்திக்கும். ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோலியப் பொருள்கள் மீதான வரி விதிப்பை நிரந்தரமாகக் கொண்டு வரக் கூடாது. ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு வகை செய்யும் அரசியலமைப்பு சட்டத் திருத்தத்துக்கு முன்பாக, வரி இழப்பீடு, மாநில சுயாட்சி பாதிப்பு போன்றவை குறித்து மாநிலங்களிடையே பேசி சுமுகத் தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் இடம்பெற்றுள்ளன.

முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுடன் பேசிய பிறகு பரிசீலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.