December 8, 2021

கஜா புயலால் வீடிழந்தவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் – முதல்வர் அறிவிப்பு

கோர தாண்டவம் ஆடிய புயலால் வீடிழந்தவர்களுக்காக ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணை முதல்வருடன் சென்று தமிழக முதல்வர் பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்தார். அம்மாவட்டத்தின் வேட்டைக் காரனிருப்பு என்ற பகுதியிலுள்ள நிவாரண முகாமுக்கு சென்ற முதல்வர் அங்கே மக்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்தார். அதிலும் நிவாரண முகாமில் மக்களோடு அமர்ந்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவையே வாங்கி சாப்பிட்டார். அப்போது உடன் இருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோரும் நிவாரண முகாம்களில் உணவை சாப்பிட்டனர்.

தொடர்ந்து அங்கு பாதித்தப் பகுதிகளை பார்வையிட்டப் பிறகு வேதாரண்யத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், நாகை மாவட்டத்தில் கஜா புயலால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு 415 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, 77, 319 குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டன. சுகாதாரத் துறை சார்பில் 1068 நடமாடும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, 57, 420பேர் இதுவரை சிகிச்சை பெற்றுள்ளனர். 326 கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 62,000 கால்நடைகள் சிகிச்சை பெற்றுள்ளன. 5 பேரிடர் மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, 127பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

கஜா புயலுக்கு நாகையில் 14பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்த முதல்வர், “1லட்சத்து 11 ஆயிரத்து 132 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஆடு, மாடு, கோழி என 21, 002 கால்நடைகள் இறந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. 3, 886 ஹெக்டரில் தென்னை மரங்களும், 4 ஆயிரம் ஹெக்டர் நெற்பயிரும் சேதமடைந்துள்ளன” என்றும் தெரிவித்தார்.

மேலும், “சேதமடைந்த பகுதிகளை சீர் செய்ய தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்துவருகிறது. சேதமடைந்த மரங்களை அகற்ற, நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழும், மர வியாபாரிகளை அழைத்து வந்தும் தமிழக அரசு உதவும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உயர் தொழில்நுட்பத்தில் மீண்டும் மா, பலா, தென்னை, முந்திரி பயிர்களை பயிரிடவும் அரசு உதவி செய்யும், ஏழை மக்களின் சேதமடைந்த குடிசை வீடுகளுக்குப் பதில், 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். சிறப்புத் தீட்டம் தீட்டி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக சிறப்பு செயலாக்க அமைப்பு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் அமைக்கப்படும் என்றும் முதல்வர் உறுதியளித்தார்.