March 22, 2023

நாளை முதல் புதிய நேரக் கட்டுப்பாடு; முதலமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த நபர் மதுரையில் உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து இன்று காலை விழுப்புரத்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது தேனியில் ஒருவர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த 3 பேருமே முதியவர்கள் என்ற நிலையில் அத்தியாவசிய பொருட்களான உணவு மற்றும் காய்கறி உள்ளிட்ட மளிகை பொருட்கள் போன்றவற்றை வாங்குவதற்கான காலநேரம் பற்றிய அறிவிப்பினை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டது.

தமிழகத்தில் கட்டுப்பாட்டிற்குள் இருந்த கொரோனா வைரஸ் டெல்லி மாநாடு விவகாரத்திற்கு பிறகு பல மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது வரை தமிழகத்தில் 485 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 7 பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பிவிட்டனர். இந்நிலையில், தேனி மாவட்டத்தை சேர்ந்த கொரோனா நோயாளி ஒருவரின் மனைவிக்கும் கொரோனா உறுதியான நிலையில், அவர் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று பிற்பகல் 2.25 மணியளவில் மூச்சுத்திணறல் அதிகமாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இன்று ஒரே நாளில் இரண்டு பேர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர். மொத்தம் 3 பேர் உயிர் இழந்துள்ள நிலையிலும் 21 நாள் ஊரடங்கில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவை தவிர்த்து, பிற விசயங்களுக்காக வெளியே செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின் றனர். அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வதற்கான காலநேரம் காலை 6:00 மணியில் இருந்து மதியம் 2.30 மணிவரை இருக்கும் என்று முன்பு அரசு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மக்கள் வெளியில் நடமாடும் காலஅவகாசம் ஞாயிற்றுக்கிழமை முதல் (5-4-2020) குறைக்கப்பட்டு உள்ளது என தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மக்கள் நடமாட்டத்தை மேலும் கட்டுப்படுத்த, அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6.00 மணி முதல் 2.30 மணி வரை அனுமதிக்கப்பட்டிருந்த கால அளவை நாளை ஞாயிற்றுக்கிழமை (5.4.2020) முதல் குறைத்து, காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மட்டுமே அத்தியா வசிய பொருட்களை வாங்க அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதை அனைத்து பொதுமக்களும் கடைபிடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும்போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

அரசின் விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டு அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனினும், சில நோய் தொற்று உள்ளவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பினால், இதற்காக அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் (Notified hospital for COVID-19 treatment) சிகிச்சை பெற அனுமதிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரையும் தாக்க கூடியது. அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என மத தலைவர்கள் ஒப்புதல் அளித்து உள்ளனர்.

கொரோனா பாதிப்புக்கு மத சாயம் பூசுவது தவிர்க்கப்பட வேண்டும்.

மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் சரிவர கடைப்பிடிக்காமல் நடமாடிக்கொண்டிருந்தால் 144 தடை உத்தரவை கடுமையாக அரசு கடைப்பிடிக்க வேண்டிய சூழ்நிலை வரும் எனவும் முன்னதாக முதலமைச்சர் அறிவித்திருந்தாராக்கும்