குடியுரிமை சட்டத் திருத்த மசோதா – மக்களைவையில் நிறைவேறியது!

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா – மக்களைவையில் நிறைவேறியது!

மக்களவையில் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக காரசாரமாக நடைபெற்ற விவாதத்திற்குப் பின், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர் களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங் களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014ம் ஆண்டுக்கு முன்வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்தது. மசோதாவை தாக்கல் செய்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் முஸ்லீம் அல்லாதவர்கள் துன்புறுத்தப்பட்டதாக கூறினார்.

ஆனால் காங்கிரஸ், தி.மு.க., தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மத அடிப்படையில் குடியுரிமை வழங்குவது அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது என்று அவர்கள் குற்றம்சாட்டினர். அதிமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தன.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவை மத ரீதியாக பிரித்தது காங்கிரஸ்தான் என்றார்.. பிரிவினை இல்லாவிட்டால் இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு அவசியமே இல்லை என்றும், வரலாற்றுத் தவறை திருத்தவே இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இந்த மசோதாவால் இந்திய முஸ்லீம்களுக்கு எந்த வித பாதிப்பும் கிடையாது என்பதை தெளிவுபடுத்திய அவர் வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், அருணாசலம், போன்ற மாநிலங்கள் இந்த மசோதாவைக் கண்டு அச்சம் அடைய தேவையில்லை என்று கூறினார்.

ஆனாலும் நள்ளிரவு வரை நடைபெற்ற விவாதத்திற்குப் பின் மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. மசோதாவை ஆதரித்து 311 உறுப்பினர்களும், எதிர்த்து 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர். மசோதா நிறைவேறியது மகிழ்ச்சியளிப்பதாகவும், ஆதரவளித்த எம்.பி.க்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதனிடையே, குடியுரிமை மசோதாவை மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பாஜக எம்பிக்கள் அனைவரும் இன்றும் நாளையும் தவறாமல் ஆஜராகும்படி கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் , மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பு சார்பில் 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கவுகாத்தி, திப்ருகார், கோலாகாட் உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் டயர்களைக் கொளுத்தியும், கற்களை வீசியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கவுகாத்தி பொறியியல் கல்லூரி, காட்டன் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் மாணவர்கள் தீபமேந்தி போராட்டம் நடத்தினர். மாணவர்கள் போராட்டம் காரணமாக கவுகாத்தி பல்கலைக் கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Related Posts

error: Content is protected !!