October 16, 2021

21 ஆம் நூற்றாண்டின் உலக வெப்பநிலையில் மேலும் 0.3 டிகிரி செல்சியஸ் உயரும்!

தொடர்ந்து எத்தனையோ ஆண்டுகள் நடைபெற்ற சிக்கலான பேச்சு வார்த்தைகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு கையழுத்தானது பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்திற்கான முக்கிய நோக்கமே புவிவெப்ப மயமாதலை 2 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்துவதுதான். புவி வெப்பமடைதலுக்குக் காரணமான கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட பசுமை இல்ல விளைவு வாயுக்கள் ( green house gas) வெளியேற்றத்தை பெருமளவில் கட்டுக்குள் கொண்டுவரவே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் இணைந்திருக்கும் நாடுகள் தங்களுடைய கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை கடுமையாக குறைக்க வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தத்தின் சிறப்பம்சம். ஆனால் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை குறைப்பது பொருளாதாரத்தில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது ஒரு சவாலான காரியமாகவே பார்க்கப்பட்டு வந்தது. இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட 195 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது.

இந்நிலையில், பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிக்கொண்டது ஒரு மோசமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. அதன் விளைவாக 21 ஆம் நூற்றாண்டின் உலக வெப்பநிலையில் மேலும் 0.3 டிகிரி செல்சியஸ் உயரும் என வெள்ளியன்று ஐநா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜெனிவாவில் அமைந்துள்ள உலக வானிலை மையத்தின் வளிமண்டல ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் துறைத் தலைவர், டியோன் டெர்ப்லேன்ச் செய்தியாளர்களிடம், “பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ள டொனால்ட் டிரம்பின் முடிவு தெளிவாக இல்லை. நாங்கள் ஒரே இரவில் புதிய மாடல்களை இயக்கவில்லை, ஆனால் இந்த மோசமான சூழ்நிலையில் 0.3 டிகிரி செல்சியஸ் உயர்வு மிகவும் மோசமாகவே இருக்கக்கூடும் என்பதை இது காட்டுகிறது. தொழிற்புரட்சி காலத்திற்கு முந்தைய வெப்பநிலைகளை ஒப்பிடும்போது தற்போது உயர்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவேண்டியுள்ளது. இது ஒரு மோசமான சூழ்நிலை. இதனால் என்ன நடக்குமோ தெரியவில்லை” என்றார்.

புவிவெப்பமயமாதலைத் தடுப்பதற்கான 2015ல் பாரீஸ் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட வகையில் அனைத்து உலக நாடுகளும் 2 டிகிரி செல்சியஸ் குறைக்கும் முயற்சியை மேற்கொண்டன. தற்சமயம் அமெரிக்கா ஏகப்பட்ட பில்லியன் டாலர்கள் தொகையை செலவழிக்கிறது. ஆனால் இந்தியா, சீனா போன்ற பிற நாடுகளே பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தால் பயனடைக்கின்றன. இதனாலேயே அமெரிக்கா பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக ட்ரம்ப் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.