காலன் என்று சொல்லப்படும் ‘காலரா நோய்’ சென்னைக்குள் மறுபடியும் வந்துடுச்சு!

காலன் என்று சொல்லப்படும் ‘காலரா நோய்’ சென்னைக்குள் மறுபடியும் வந்துடுச்சு!

கடுமையான வாந்தி, வயிற்றுப்போக்கு, ஒரு சில மணி நேரத்தில் இறப்புக்குக் காரணமாக இருக்கக்கூடியதான் காலரா என்னும் நோய் சென்னையில் இரண்டு பேருக்கு (இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும்) தாக்கி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த உள்நோயாளிகள் 2 பேருக்கு காலரா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. காலராவால் பாதிக்கப்பட்ட இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு தனி அறையில் வைத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோய் பாதிப்பு குறித்து சென்னை மாநகராட்சி, சுகாதார துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

‘விப்ரியோ காலரே’ (Vibrio Cholerae) எனும் பாக்டீரியாவால் ஏற்படுகிற நோய்க்கு ‘காலரா’ என்று பெயர். குழந்தைகள் முதல் முதியோர் வரை வயது வித்தியாசமின்றி அனைவரையும் பாதித்து, மரணத்துக்கு அழைத்துச் செல்கிற ஒரு கொடிய நோய் இது. உலக அளவில் ஆண்டுதோறும் சுமார் 50 லட்சம் பேர் காலராவால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் இறந்துவிடுகிறார்கள். இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 20 ஆயிரம் பேருக்கு காலரா ஏற்படுகிறது.

இது ஒரு நோயாளியிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவுகிறது. இந்தக் கிருமிகள் நோயாளியின் மலத்தில் வசிக்கும். மலத்தில் உட்காரும் ஈக்கள், கிருமிகளைச் சுமந்து, குடிநீர் மற்றும் உணவுக்குக் கொண்டுவரும். அந்த மாசுபட்ட உணவையும் குடிநீரையும் உபயோகப்படுத்துபவர்களுக்கு காலரா ஏற்படுகிறது.

இது மட்டுமல்லாமல் கழிவுநீர்க் கால்வாய்களும், சாக்கடைகளும் குளம், குட்டை, ஏரி, நதி போன்றவற்றில் கலந்து அவற்றையும் அசுத்தப்படுத்துகின்றன. இந்த நீர்நிலைகளைக் குளிக்கவும் குடிக்கவும் பயன்படுத்துபவர்களுக்குக் காலரா ஏற்படும். இந்தியாவில் காலரா ஒரு கொள்ளை நோயாகப் பரவுவதற்கு இதுதான் காரணம். திடீரெனத் தொடங்கும் அதிக வயிற்றுப்போக்கு, கடுமையான வாந்தி போன்றவை காலராவின் முக்கிய அறிகுறிகள். தண்ணீர் பீய்ச்சி அடிப்பதுபோல் மலம் போகும். ‘சோறு வடித்த தண்ணீர்’ போல் அது இருக்கும்.

வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக உடலில் உள்ள நீர்ச்சத்து மிக விரைவில் குறைந்து போவதால், நாக்கு உலர்ந்து, தாகம் எடுக்கும். கன்னமும் வயிறும் ஒட்டிப்போகும். சிறுநீர் பிரிவது குறையும். மயக்கம் வரும். உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் போனால், பாதிக்கப்பட்டவர் மரணத்தையும் தழுவ நேரலாம்.

காலராவைத் தடுக்க தடுப்பு மருந்தும் தடுப்பு ஊசியும் உள்ளன. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இல்லாத காலரா தற்போது தலை தூக்கியுள்ளது. இது மேலும் பரவாமல் தவிர்க்க காலராவால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன், நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை ஆற வைத்து பருக வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தரமற்ற தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் பாட்டில்களை வாங்கி உபயோகிக்க கூடாது என்றும், சாக்கடை கழிவுகள் தேங்கியுள்ள சாலைகளில் செல்லும் போதும், வெளியிடங்களுக்கு போய் விட்டு வீட்டிற்கு திரும்பும் போது கால்களை தண்ணீரால் நன்றாக கழுவி சுத்தம் செய்து விட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் காலரா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனையில் வழங்கப்பட்ட உணவு, தண்ணீர் மூலம் ஏதேனும் பரவியதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்:

இந்த காலராவுக்குத் தடுப்பூசியைக் கண்டுபிடித்த   வால்டுமர் ஹாஃப்கின்  எனும் ரஷ்ய விஞ்ஞானி பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா? நாட்டில் ஏற்பட்ட மதக்கலவரங்களால் தாய்நாட்டிலிருந்து துரத்தியடிக்கப்பட்டவர். 1888ல் இவர் முதலில் சுவிட்சர்லாந்து சென்று ஜெனிவா பல்கலைக்கழகத்தில் ஒரு வருடம் வேலை பார்த்தார். அடுத்த ஆண்டு பாரிஸ் நகரில் உள்ள பாய்ச்சர் இன்ஸ்டிடியூட்டில் வேலைக்குச் சேர்ந்தார். அவர் முதலில் நூலகர் வேலைக்குத்தான் சேர்ந்தார். இவருடைய ஆராய்ச்சி மூளையைக் கண்டுகொண்ட அதன் நிறுவனத் தலைவர் எமைல் ரோச் என்பவர், இவரைத் தன்னுடைய உதவியாளராக அமர்த்திக் கொண்டார்.

அப்போது பாய்ச்சர் நிறுவனம் காலராவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி இருந்தது. இதில் தன்னை இணைத்துக் கொண்ட காஃப்கின், காலரா கிருமிகளை கடுமையான வெப்பத்தில் பலமுறை உட்படுத்தி அவற்றின் வீரியத்தைக் குறைத்துவிட்டால், அந்தக் கிருமிகளைத் தடுப்பு ஊசிக்குப் பயன்படுத்த முடியும் என்பதை 1892ல் கண்டுபிடித்தார்.

முதலில் விலங்குகளுக்கு இதைத் தடுப்பூசியாகப் பயன்படுத்தினார். பிறகு, மனிதர்களுக்குப் பரிசோதித்துப் பார்க்க விரும்பினார். அதற்கு அப்போது யாரும் உடன்படவில்லை, எனவே, தனக்குத்தானே தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

ஒரு முறை இல்லை; இரு முறை இல்லை; மொத்தம் நான்கு முறை அப்படிப் போட்டுக்கொண்டார். இதன் மூலம் இதை மனிதர்களுக்கும் பயன்படுத்தலாம் என்பதை உறுதி செய்தார். என்றாலும், நாட்டில் காலரா நோய் ஒரு கொள்ளை நோயாகப் பரவும் காலத்தில் இதைப் பயன்படுத்திப் பார்க்க நேரம் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

அந்த வாய்ப்பும் வந்தது.1893ல் இந்தியாவில் பல பகுதிகளில் காலரா மோசமாகப் பரவி ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்து போயினர். அப்போது ஆட்சியில் இருந்த பிரிட்டிஷ் அரசு காஃப்கினை இந்தியாவுக்கு வரவழைத்தது. கல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு மேற்கு வங்காளம், பஞ்சாப், அசாம் என பல மாநிலங்களில் தான் கண்டுபிடித்த தடுப்பூசியைப் பொதுமக்களுக்குப் போட்டார்.

இதைப் போட்டுக் கொண்ட சுமார் 25 ஆயிரம் பேருக்கு காலரா வரவில்லை என்பதையும், இதைப் போட மறுத்தவர்கள் பல பேர் இந்த நோயால் மரணமடைந்தனர் என்பதையும் அரசுக்குப் புள்ளிவிவரமாகத் தந்தார். 1896 வரை இந்தியாவில் இதைப் பயன்படுத்தி வெற்றியை உறுதி செய்த பிறகுதான் இதை விற்பனை செய்ய பாய்ச்சர் நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்தார்.

பாக்டீரியா கிருமிகளுக்கு எதிராக முதன்முதலில் உலகில் ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது என்றால், அது இந்த நோய்க்குத்தான். இந்தச் சாதனையைச் செய்தவர் காஃப்கின் என்ற புகழைப் பெற்றார். இந்த நேரத்தில் இவருக்கு மலேரியா தாக்கியதால், நாடு திரும்பினார். 1896ம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் பிளேக் நோய் கடுமையாகப் பரவியது.

ஏற்கனவே காலரா தடுப்புப் பணியில் இவருடைய அறிவாற்றலை உணர்ந்திருந்த அரசாங்கம் மீண்டும் இவரை இந்தியாவுக்கு வரவழைத்தது. பிளேக் நோய்க்கும் இவர் தடுப்பூசி கண்டுபிடித்து ஆச்சரியப்படுத்தினார். இப்படி இந்தியாவில் இவர் மேற்கொண்ட மருத்துவ சேவையை நினைவுபடுத்தும் விதமாக பம்பாயில் இருந்த பிளேக் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு இவர் பெயர் சூட்டப்பட்டது.

error: Content is protected !!