December 4, 2022

சோய்ச்சிரோ ஹோண்டா – தோல்விகளின் பாதையிலேயே பயணித்து சாதித்தவர்!

ன்றைக்கு முன்னணிக்கு வந்தவர்களின் பின்னணிகள் எல்லாம், தோல்வியால் தான் சூழப்பட்டிருக்கும். தோல்விகள் இல்லாத வெற்றி யாருக்கும் சாத்தியப்படாது. வாழ்க்கை என்பது திரைப்படம் அல்ல, ஒரே பாடலில் முன்னேறி விடுவதற்கு! தோல்வி தாங்கும் மனம்: தோல்வியே ஒருவர் அடைந்ததில்லை என்றால் அவர் புதியதாய் எதையும் முயற்சி செய்திராதவர் என்று தான் அர்த்தம். நாம் நடக்கும் பாதை மலர் மீது அமைய வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால் அதில் உள்ள ஒரு முள்ளைக் கூட மிதிக்கக் கூடாது என்று நினைப்பதில் அர்த்தமில்லை. வெற்றியை விரும்பும் நமக்கு தோல்வியைத் தாங்கும் மனம் இருப்பதில்லை. தோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றி தான் என்பதை உணரவேண்டும். முன்னரே சொன்னது இன்றைக்கு நாம் அண்ணாந்து பார்க்கும், உலகையே தங்கள் கட்டுக்குள் வைத்துக்கொண்டிருக்கும், பல முன்னணி தொழில் சாம்ராஜ்ஜியங்களின் துவக்கத்தை பார்த்தோமானால் விடாமுயற்சியும், அர்பணிப்பும், எதற்கும் கலங்காத மனமும் கொண்ட தனி மனிதன் ஒருவர் தான் நிச்சயம் பின்னணியில் இருப்பார். அந்த வகையில் பூகம்பத்தாலும் போரினாலும் மண்ணோடு மண்ணாகிப் போன ஒரு மண்ணிலிருந்து ஒரு பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய ஒருவரது நம்பிக்கையூட்டும் வரலாற்றை தற்போது பார்ப்போமா?.

1906 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள் ஜப்பானில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தார் சோய்ச்சிரோ. அவர் அம்மா ஒரு நெசவாளி. மிகவும் சிக்கலான நெசவுகளை லாவகமாக செய்யக்கூடிய தறி ஒன்றை தானே வடிவமைக்கும் அளவுக்கு அவர் புத்திசாலி. அப்பா இரும்பு பட்டறை வேலை செய்யும் கருமார். சைக்கிள் ரிப்பேர் செய்யும் கடை வைத்திருந்தார். இது தான் சோய்ச்சிரோவின் குடும்பம். 1930. உலகம் முழுதும் கடும் பொருளாதார மந்தநிலை ஆட்கொண்டிருந்த நேரம். (The GreatDepression). உழைப்புக்கு பெயர் போன ஜப்பானும் இதற்கு தப்பவில்லை.

சோய்ச்சிரோ அப்போது பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார். ஏழை மாணவர் அவர். அவருக்கு என்று ஒரு கனவு இருந்தது. மோட்டார் வாகனத்தின் இன்றியமையாத உதிரி பாகமான பிஸ்டன் ரிங் ஒன்றை தனது கற்பனைப்படி செய்ய வேண்டும் என்பது தான் அது. காலை முழுதும் பள்ளியில். மாலை வீட்டுக்கு வந்ததும், தனது கனவு கண்டுபிடிப்புக்கு வடிவம் கொடுப்பதில், இறங்கிவிடுவார். நள்ளிரவு தாண்டியும் அவரது ஆராய்ச்சி நீளும். ஆராச்சியில் அவரது ஆடைகள் அழுக்காகும். முகமெங்கும் கிரீஸ் அப்பிக்கொள்ளும். கையில் சிறுக சிறுக சேமித்து வைக்கும் பணமும் இந்த ஆராய்ச்சியில் செலவாகிவிடும். அவருடைய நோக்கம் என்னவென்றால் அற்புதமான பிஸ்டன் ரிங் ஒன்றை கண்டு பிடித்து அதை பிரபல மோட்டார் நிறுவனமான டோயோட்டாவுக்கு விற்கவேண்டும் என்பது தான். ஆராய்ச்சி நீண்டுகொண்டே சென்றது. இதற்கிடையே அவருக்கு திருமணம் வேறு ஆகிவிட்டது. தன் மனைவியின் நகைகளையும் தனது ஆராய்ச்சிக்காக அடமானம் வைக்க அவர் தயங்கவில்லை. ஒரு நாள் அவர் நினைத்த படி தனது பட்டறையில் ஒரு பிஸ்டன் ரிங்கை வடிவமைத்தார். அதை எடுத்துக்கொண்டு கனவுகளையும் சுமந்துகொண்டு டோயோட்டாவின் அலுவலக கதவுகளை தட்டினார். ஆனால் அங்கு அவருக்கு கிடைத்தது ஏமாற்றமே. “நாங்கள் எதிர்பார்க்கும் தரத்தில் இது இல்லை. இதை ஏற்றுக்கொள்ளமுடியாது” என்று கூறி அடிக்காத குறையாக விரட்டிவிட்டனர்.

சோய்ச்சிரோ கல்லூரிக்கு சென்றபோது சக மாணவர்கள் கேலி செய்தனர். “இதெல்லாம் ஒரு மாடல்னு இதை கொண்டு போய் வேற காட்டிட்டியா? உன்னை உதைக்காம விட்டாங்களே…” என்றனர். சோய்ச்சிரோ மனம் தளரவில்லை. தனது தோல்வியில் கவனம் செலுத்துவதற்கு பதில், தனது கனவில் மேலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இரண்டு ஆண்டுகள் இடையறாத முயற்சிகளுக்கும் தோல்விகளுக்கும் பின்னர் ஒரு நாள் டோயோட்டாவின் கான்ட்ராக்ட் கிடைத்தது. ஆனால் அந்தோ பரிதாபம்… ஜப்பானை அப்போது போர் மேகங்கள் சூழ்ந்த நேரம். பெரிய நிறுவனத்தின் காண்ட்ராக்ட் உள்ளது. உடனடியாக ஒரு தொழிற்சாலையை துவக்கவேண்டும்.

ஆனால் போர்க்காலம் என்பதால் கட்டுமான பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. ஆனாலும் மனம் தளர வில்லை சோய்ச்சிரோ. கட்டுமானத்திற்கு தேவையான கான்க்ரீட் மிக்சரை தயாரிக்க ஒரு புது யுக்தியை கண்டு பிடித்தார். அதன்படி, அவர் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஒரு பாக்டரியை கட்டி முடித்தார். ஒரு வழியாக பாக்டரியை கட்டி முடித்தாகிவிட்டது. உற்பத்தியை துவக்கவேண்டியது தான் பாக்கி. இரண்டாம் உலகப் போர் தீவிரமடைந்த நேரம் அது. ஒரே நாளில் அவரது பாக்டரி அமெரிக்க விமானங்களின் குண்டுகளுக்கு இரையாகி தரைமட்டமானது. கான்க்ரீட் தட்டுப்பாட்டுடன் இம்முறை ஸ்டீல் தட்டுப்பாடும் சேர்ந்துகொண்டது.

அப்போதும் மனம் தளரவில்லை சோய்ச்சிரோ. தனது பணியாளர்கள் அனைவரையும் அழைத்தார். “அதோ அந்த விமானங்களை பின்தொடர்ந்து ஓடுங்கள். விமானங்களில் இருந்து எரிபொருள் நிரப்பிய பின்னர் கீழே வீசப்படும் GASOLENE கேன்களை சேகரியுங்கள். அதில், நமது பாக்டரிக்கு தேவையான மூலப்பொருள் உள்ளது. அது வேறெங்கும் கிடைக்காது. அமெரிக்க அதிபர் நமக்கு தரும் பரிசு அது!” என்றார். எப்பேர்ப்பட்ட பக்குவம்! நேர்மறை சிந்தனை செய்யும் அற்புதத்தை பார்த்தீர்களா? பிரச்சனைகளில் கூட வாழ்வதற்கு ஒரு
வழியை கண்டுபிடித்துவிடுகிறது.

ஓரளவு பாக்டரியை நிர்மாணித்து மீண்டும் உற்பத்தியை துவக்கவிருந்த நேரம். இம்முறை ஜப்பானுக்கே உரிய நிலநடுக்கம். ஜப்பான் முழுதும் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் ஜப்பானே உருக்குலைந்துவிட சோய்ச்சிரோவின் பாக்டரி மட்டும் தப்புமா என்ன? பாக்டரி முழுதும் மீண்டும் தரைமட்டமானது. வேறு வழியின்றி இம்முறை தனது பிஸ்டன் தொழில்நுட்பத்தை டோயோட்டாவுக்கே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் சோய்ச்சிரோ. இறைவன் ஒரு கதவை மூடினால் நிச்சயம் மறுகதவை திறப்பான். மூடிய கதவையே பார்க்கும் நாம் திறக்கும் கதவை கவனிக்க தவறி விடுகிறோம். போர் முடிந்ததும் ஜப்பான் முழுதுமே தலைகீழாக புரட்டிபோட்டது போன்று இருந்தது. மூலப்பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவியது. அடிப்படை பொருட்களை கூட மக்கள் ரேஷனில் சென்று தான் வாங்கவேண்டிய நிலை. எனவே மக்கள் தங்கள் வாகனங்களுக்கு எரிபொருள் இல்லாமல் அவதிப்பட்டனர்.

தனக்கு என்று ஒரு மோட்டார் வாகனம் இருந்தபோதும், அதை மார்கெட்டுக்கு ஓட்டிச் சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாது சோய்ச்சிரோ மிகவும் சிரமப்பட்டார். விரக்தியிலும், தோல்வி தந்த வேதனையிலும் நாட்களை கழிப்பதற்கு பதில், ஒரு புதிய முடிவை அவர் எடுத்தார். இந்த சூழலிலிருந்து நாம் வெளியே வரவேண்டும். நமது குடும்பத்தையும் காப்பாற்றவேண்டும் என்று தனக்கு தானே சூளுரைத்துக்கொண்டார். அவர் தனக்கு தானே ஒரு வலிமையான கேள்வியை கேட்டுக்கொண்டார். “என் குடும்பத்தை நான் எப்படி காப்பாற்றுவது? என்னிடம் ஏற்கனவே இருக்கும் திறமையையும் பொருட்களையும் வைத்து நான் எப்படி வாழ்க்கையில் ஜெயிப்பது?” இது தான் அவர் தன்னைக் கேட்டுக்கொண்ட கேள்வி. கேள்வி தேடலாக மாறியது. விளைவு… விடை கிடைத்தது.

அதாவது இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த நேரம். ஜப்பான் பொருளாதாரம் சாம்பலாக்கப்பட்ட காலகட்டம். எங்கும் பெட்ரோல் தட்டுப்பாடு. கார்கள் எல்லாம் முடங்கிவிட்டன. எல்லோரும் நடக்கிறார்கள் அல்லது சைக்கிள் மிதிக்கிறார்கள். சாய்க்கிரோ ஹோண்டா, வீட்டில் அமர்ந்திருந்தார். அருகில் சைக்கிள் நின்றது. சற்றுத் தொலைவில் புல்வெட்டும் இயந்திரம் இருந்தது. அந்தப் புல்வெட்டும் இயந்திரத்தில் உள்ள மோட்டாரைக் கழற்றி, இந்த சைக்கிளில் இணைத்தால் என்ன என்று ஹோண்டா​வுக்கு ஒரு புத்தம் புது ஐடியா பளிச்சிட்டது. அடுத்த நொடியில் காரியத்தில் இறங்கினார் ஹோண்டா. புல்வெட்டும் இயந்திர மோட்டாரைக் கழற்றி எடுத்து, தனது சைக்கிளில் அவர் பொருத்திய​போது உலகின் முதல் மோட்டார் சைக்கிள் பிறந்துவிட்டது. அதை எடுத்துக்கொண்டு ஜம்மென்று சுற்றி வந்தார் ஹோண்டா.

‘‘அதேபோன்று எனக்கும் செய்துகொடு’’ என்று மொய்க்கத் தொடங்கினர் மக்கள். அவரும் சளைக்காமல் செய்துகொடுத்தார். விளைவு? அந்த ஊரில் மோட்டார் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. இதையே பெரிய தொழிலாக மாற்றினால் என்ன என்று சிந்தித்தார் ஹோண்டா. கையில் பணமில்லை. வங்கிகள் கடன் தரத் தயாரில்லை. ‘ஹோண்டா துரதிர்ஷ்டக்காரன்’ என்று எல்லோரும் சான்றிதழ் கொடுத்துவைத்திருந்தார்கள். கலங்கவில்லை ஹோண்டா. தனது தொழில் திட்டத்துக்கு பண உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து, ஜப்பானில் உள்ள 18 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்களுக்கு கடிதம் எழுதினார். முதலீடு செய்யும் சைக்கிள் கடைக்காரர்கள், மோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர்களாக நியமிக்கப்படுவார்கள் என உறுதி அளித்தார். 5 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்கள் முன்வந்து பண உதவி செய்தனர். ஹோண்டா மோட்டார் சைக்கிள் கம்பெனி உதயமானது. முதலில் தயாரான மோட்டார் சைக்கிள் குறித்து விமர்சனங்கள் வந்தபோது, தானே உலைக்கூடத்தில் அமர்ந்து, அழகான வடிவமைப்புடன் அற்புதமான மோட்டார் சைக்கிள் ரகங்களைக் கொண்டுவந்தார்.\\

இப்போதாவது ஜெயித்தாரா சோய்ச்சிரோ என்றால் அது தான் இல்லை. மோட்டார் பொருத்தப்பட்ட மோட்டார்கள் மிகவும் பெரியதாக இருந்தது. வெகு சிலரே அதை வாங்கினர். தவறு எங்கே நடந்தது என்று ஆராய்ந்த சோய்ச்சிரோ கடைசீயில் தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டார். தீவிர ஆராய்ச்சிக்கு பின்னர் தனது மோட்டார் சைக்கிள்களுக்கு ஏற்ற அழகான சிறிய என்ஜினை கண்டுபிடித்தார். அதற்கு ‘சிங்கக் குட்டி’ என்று பெயரிட்டார். (THE CUB). அந்த சிங்கக்குட்டி படு ஹிட்டானது. சோய்ச்சிரோவின் அந்த கண்டுபிடிப்புக்கு ஜப்பான் பேரரசரின் THE EMPEROR AWARD கிடைத்தது. “சரியான அதிர்ஷ்டசாலிப்பா (!) இந்த சோய்ச்சிரோ” என்று அவரது உறவினர்கள் பெருமூச்சு விட்டனர். ஜப்பானில் வெற்றிக்கொடி நாட்டிய பின்னர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கும் சோய்ச்சிரோவின் மோட்டார் சைக்கிள் எஞ்சின்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

இத்தோடு முடிந்ததா ? அது தான் இல்லை. 1970 களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஜப்பானில் அல்ல. அமெரிக்காவில். ஆட்டோமொபைல் சந்தையின் கவனம், சிறிய ரக கார்களை நோக்கி திரும்பியது. சிறிய ரக என்ஜின்களை தயாரிப்பதில் ஏற்கனவே நிபுணத்துவம் பெற்றிருந்த சோய்ச்சிரோ நிறுவனத்தினர், சிறிய ரக கார்களை தயாரித்து மார்கெட்டில் விட்டனர். இதற்கு முன்பு இப்படி சிறிய ரக கார்களை எவரும் பார்த்ததில்லை என்னுமளவுக்கு அவர்களது மாடல்கள் இருந்தன. விளைவு….நான்கு சக்கர வாகன சந்தையும் அவர்கள் கைக்கு வந்தது.

இன்று சோய்ச்சிரோவின் ஹோண்டா நிறுவனத்துக்கு அமெரிக்கா மற்றும் ஜப்பானில் மட்டும் 1,00,000 ஊழியர்களுக்கும் மேல் உள்ளனர். ஆட்டோமொபைல் துறையில் பல புதுமைகளை புகுத்தி ஏற்றம் கண்டு இன்று உலகின் முன்னனி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது ஹோண்டா. 1991 ஆம் ஆண்டு சோய்ச்சிரோ ஹோண்டா மறையும்போது, அவர் சாதித்திருந்தது என்ன தெரியுமா? சுமார் 470 கண்டுபிடிப்புக்கள். 150 பேட்டன்ட்டுகள். மிக்கிகன் பல்கலைக்கழகத்திலும் ஓஹியோ பல்கலைக்கழகத்திலும் கௌரவ டாக்டர் பட்டம். ஜப்பான் நாட்டின் மிக உயர்ந்த விருதான ‘ப்ளூ ரிப்பன்’ விருது மற்றும் பல.

ஒன்றரை லட்ச ரூபாயில் ஆரம்பித்த சோய்ச்சிரோவின் ஹோண்டா நிறுவனம், தற்போது ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடி ரூபாய்களை அனாயசமாக வர்த்தகம் செய்கிறது. இதற்கு காரணம் என்ன? சோய்ச்சிரோ ஹோண்டா என்கிற தனி மனிதன் ஒருவனின் விடா முயற்சி. அயராத உழைப்பு. பிரச்னைகளோ சூழ்நிலைகளோ தன்னை பாதிக்க அவர் அனுமதிக்கவில்லை. இடியே விழுந்தாலும் நிலை குலையாத மனப்பான்மையை அவர் பெற்றிருந்தார். பிரச்சனைகளை கண்டு அவர் ஓடியிருந்தால் இன்று ஹோண்டா என்கிற சாம்ராஜ்ஜியம் இல்லை. ஜெயிக்க வேண்டும் என்று நாம் உண்மையில் விரும்பினால், நமக்கு எப்போதும் எந்த சூழ்நிலையிலும் வழி உண்டு என்பதே ஹோண்டாவின் வரலாறு நமக்கு கற்றுத் தரும் பாடம்.

சோய்ச்சிரோ ஹோண்டாவின் நினைவு நாளின்று

நிலவளம் ரெங்கராஜன்