சித்திரம் பேசுதடி 2 – விமர்சனம்!

சித்திரம் பேசுதடி 2 – விமர்சனம்!

சேரன், பிரசன்னா நடிப்பில் வெளியான ‘முரண்’ படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானவர் ராஜன் மாதவ். அடுத்ததாக விதார்த், ராதிகா ஆப்தே, அஜ்மல், காயத்ரி, அசோக் ஆகியோரை வைத்து ஒரு படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு முன்னதாக  ‘உலா’ என்று தலைப்பு வைக்கப்பட்டது. ஓரிரு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்தப் படத்தை விளம்பரப்படுத்து வதற்காக, ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணியில் விளையாடிய பிரபல கிரிக்கெட் வீரர் பிராவோவை வைத்து வீடியோ பாடல் ஒன்றும் படம் பிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை முடித்தும் ஆண்டுக் கணக்கில் வெளியிட சூழ்நிலை சரியாக அமையாத நிலையில், தற்போது படத்தின் தலைப்பை மாற்றி உள்ளனர். ‘உலா’ என்ற தலைப்பை கடாசி விட்டு, ஹிட் அடிக்கும் என்ற நம்பிக்கையில் ‘சித்திரம் பேசுதடி 2’ என்ற டைட்டிலுடன் ரிலீஸ் செய்திருக்கிறார்கள் .

48 மணிநேரங்களில் நடக்கும் நான்கு வெவ்வேறு கதைகளின் இணைப்பு தான் இதன் கதைக்களம். 2006 ஆம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி திரைப்படத்திற்கு இந்த படத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதே போல் படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லை என்றாலும், அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினையான பணம், பணம் என்ற ஒரே ஒரு வகையில், ஒருவருக்கொருவர் ஏதோ வழியில் தொடர்பு ஏற்பட, அதன் மூலமாகவும், மறைமுகமாகவும் அவர்களது பிரச்சினை எப்படி தீர்கிறது என்பது தான் ஸ்கிரீன் பிளே. இப்படத்தின் பலமே திரைக்கதையும், நடிகர்கள் தேர்வும் தான் . படத்தில் விதார்த், அஜ்மல், நந்தன் லோகநாதன், நிவாஸ் ஆதித்தன், ராதிகா ஆப்தே ஆகிய 5 பேருக்கும் சரியான விகிதத்தில் கதையை பிரித்து கொடுத்திருப்பதில் நேர்த்தி இருக்கிறது.

கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருக்கும் விதார்த்தின் நடிப்பு ஒரு விதம் என்றால், சலீம் எனும் நெகடிவ் பாத்திரத்தில் வரும் அசோக் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு மாறுவதும், நடப்பதைத் தனது இச்சைக்குச் சாதகமாக உபயோகித்துக் கொள்வதுமாக கலக்கி இருக்கிறார். சொத்தை இழந்து விட்டு பணத்திற்காக மினிஸ்டரை பிளாக் செய்யும் முயற்சியில் இறங்கும் அஜ்மல், கணவரை காப்பாற்ற போராடும் ராதிகா ஆப்தே என்று படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

விலைமாதுவாக நடித்திருக்கும் நடிகை நிவேதிதாவும், அவரை காதலிக்கும் நிவாஸ் ஆதித்தன், அவரது நண்பரான பிளேடு சங்கர், காயத்ரி, ஆடுகளம் நரேன், சுப்பு பஞ்சு, அழகம் பெருமாள் என்று படத்தில் கூட்ஸ் ரயில் போல் எக்கச்சக்கமான நட்சத்திரங்கள் . அனைவரும் ஓ கே .

ஷஜன் மாதவின் இசையில் பின்னணி இசையும், பாடல்களும் கேட்கும்படி இருக்கிறது. அதிலும், பிராவோ நடனம் ஆடும் “ஏண்டா…ஏண்டா…” பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பத்மேஷின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

நம்ம கோலிவுட்டில் இஷ்டத்துக்கு ஏகப்பட்ட ஆர்டிஸ்டிகளை வைத்து சில பல படங்கள் வந்திருக்கிறதுதான், ஆனாலும் இம்புட்டு கேரக்டர்களை வைத்து இப்படி ஒரு குழப்பமில்லாத ஒரு கதையுடனான ஒரு படத்தை இயக்கியிருக்கும் ராஜன் மாதவை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். அப்படியான படத்தில் மைனஸ் பாயிண்டே இல்லையா? என்று கேட்கலாம். மைனஸூம் உண்டு ஆனால் ப்ளஸ் நிறைய என்பதுதான் கவனிக்கத்தக்கது

மொத்தத்தில், ‘சித்திரம் பேசுதடி 2’ வை தாராளமாய் போய் ரசிக்கலாம்

மார்க் 3 / 5

error: Content is protected !!