September 21, 2021

குடை + ரெயின் கோட் = அம்பரல்லா ரெயின் கோட்

குடை பழம்பெருமை கொண்டது. முதன் முதலில் குடையை உருவாக்கியவர்கள் யார் என்ற வரலாறு கிடையாது. இந்தியர்களும், சீனர்களும் பண்டைய காலத்திலேயே குடையை பயன்படுத்தி உள்ளனர். நீண்டகாலமாக அரசர்களின் அடையாளமாகவே குடைகள் இருந்தன. அதை இன்று பயன்படுத்தும் வடிவில் வியாபார ரீதியில் தயாரித்து கொடுத்தவர் ஆங்கிலேய வியாபாரி ஜோனாஸ் ஹான்வே. இவர் 18-ம் நூற்றாண்டில் வியாபார விஷயமாக பாரசீகம் சென்றபோது அந்தக் காட்சியைக் கண்டார். சந்தை வீதியில், அங்குள்ள இளவரசர், படைவீரர்களுடன் கடந்து போனார். இளவரசரின் தலைக்கு மேலே பட்டுத்துணி மற்றும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட குடை பிடிக்கப்பட்டு இருந்தது.

வெண்கொற்றக் கொடை எனப் படும் அந்த சாதனத்தை அதுவரை கண்டிராத ஹான்வேக்கு, உடனடியாக ஒரு வியாபார சிந்தனை தோன்றியது. இளவரசரை அடையாளம் காட்டவும், அவரை வெயில் தாக்காது இருக்கவும் பிடிக்கப்பட்ட குடையை ஒவ்வொரு மனிதரும் பயன்படுத்தும் வகையில் எளிமையாக தயாரித்து விற்பனைக்கு விட்டார் ஹான்வே. ஆனால் ‘அரசன் மட்டுமே குடையை பயன்படுத்தும் அதிகாரம் பெற்றவன், மக்கள் மன்னனுக்கு சமமாக குடை பிடிக்கக்கூடாது’ என அந்த நாட்டு அரசாங்கம், ஹான்வேயை துரத்தி அடித்தது.

ஹான்வே இங்கிலாந்து திரும்பினார், பாரசீகத்தில் வெயிலுக்கு பாதுகாப் பளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட குடையை, வியாபார சிந்தனையில் இங்கிலாந்தில் கொட்டும் மழைக்கு எதிராக பயன்படுத்த முடிவு செய்தார். 1750-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு மழை நாளில், அவர் தனது தயாரிப்பு குடையை பிடித்தபடி மழைக்குப் பயப்படாமல் நடைபோட்டதை மக்களெல்லாம் கண்கொட்டப் பார்த்தனர். குடை வியாபாரம் சூடுபிடித்துக் கொண்டது.

அது போல் இப்போது பரவலாக பயன்படுத்தும் ரெயின் கோட் கண்டுபிடிப்புக்கு முன்னோடியாக இருந்தவர் ஃபிரான்சுவா ஃப்ரெஷ்நியூ என்ற பிரெஞ்சு இன்ஜினியர் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், நீர் புகாத துணியைக் கண்டுபிடித்து, பெரிய அளவில் ரெயின் கோட் உற்பத்தியைத் தொடங்கியவர் சார்லஸ் மேக்கின்டாஷ் என்ற ஆங்கிலேயர். இவர் ரெயின் கோட்டை எப்படித் தயாரித்தார் தெரியுமா? இரண்டு காட்டன் துணிகளுக்கு நடுவே ஒரு மெல்லிய ரப்பரை வைத்துத் தைத்தார். அந்த ரப்பரை மென்மையாக்கக் கொஞ்சம் டர்பன்டைனையும் கலந்தார். பின்னர் ரெயின் கோட்டாகத் தைக்க டெய்லரிடம் கொடுத்தார். டெய்லர் தைத்துக் கொடுத்தவுடன் சட்டை போல ரெயின் கோட் தயாராகிவிட்டது. இதுவே மேக்ஸ் என்றழைக்கப்படும் மேக்கின்டாஷ் ரெயின் கோட்டின் வரலாறு.

மேக்கின்டாஷ் உடைகள், மழையில் இருந்து உடலைக் காத்தன. ஆனால், மழை நின்று வெயில் அடித்தால் அவ்வளவுதான். உள்ளே வியர்த்துக் கொட்டும். ரப்பர் இளகி உடலோடு ஒட்டிக்கொள்ளும். ரப்பரின் வாசனையும் பாடாய்ப் படுத்தும்.ரப்பரைக் கண்டுபிடித்த சார்லஸ் குட்இயர்தான் இந்தப் பிரச்சினையைப் பல ஆண்டுகள் கழித்துத் தீர்த்து வைத்தார். இன்று தயாரிக்கப்படும் பெரும்பாலான மழை உடைகள் வேதிப் பொருட்கள் கலந்தவைதான். இந்தக் காலத்தில் கோட் தயாரிக்கச் செயற்கை ரப்பரும் பயன்படுகிறது.

இதையடுத்து மழையில் இருந்து தற்காத்துக்கொள்வதற்குக் குடைகளும் ரெயின் கோட்டுகளும் பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருப்பதெல்லாம் தெரிந்த விஷயம்தான். இந்நிலையில் அணமியில் சீனர்கள் குடையையும் ரெயின் கோட்டையும் இணைத்து, ‘umbrella raincoat’ ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். “குடையிலும் ரெயின் கோட்டிலும் இருக்கும் அசவுகரியத்தைப் போக்கவேண்டும் என்பதற்காகவே இது உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். குழந்தைகளும் இளைஞர்களும் இந்தப் புதிய பொருளை ஆர்வத்துடன் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் விற்பனையில் இன்னும் குடைகளும் ரெயின்கோட்டுகளுமே முன்னணியில் இருக்கின்றன. இந்த ரெயின்கோட் குடையில் உடலின் மேல் பாகம் மட்டுமே மழையிலிருந்து காக்கிறது. இடுப்புக்குக் கீழே மழையில் நனையவேண்டியிருக்கிறது என்பது சாதகமான விஷயமாக இல்லை.

ஆனால் இந்த ரெயின் கோட் குடையில் கைகளுக்கு வேலை இல்லை. ஜாலியாக மழையை ரசித்துக்கொண்டே நடந்து செல்லலாம். இது எடை குறைந்தது. மடக்கி வைத்துக்கொள்ளவும் முடியும். எவ்வளவு காற்று அடித்தாலும் குடையைப்போல் பறந்து செல்லாது. மட்கக்கூடியப் பொருளால் செய்யப்பட்டிருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை பயன்படுத்தும் விதத்தில் பல்வேறு அளவுகளிலும் வண்ணங்களிலும் கிடைக்கின்றன. எதிர்காலத்தில் குடையையும் ரெயின்கோட்டையும் தள்ளிவிட்டு, இது முதலிடத்தைப் பிடித்துவிடும்” என்கிறார் ஷான் வாங் என்ற வியாபாரி.