சீனாவுடனான வர்த்தப்போரை தீவிரமாக்கியது அமெரிக்கா!

சீனாவுடனான வர்த்தப்போரை தீவிரமாக்கியது அமெரிக்கா!

உலக நாடுகளில் பெரியண்ணா என்று தன்னை பிரகடனப்படுத்தியபடி அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் சர்ச்சையைக் கிளப்புவது வாடிக்கை. அந்த வகையில் சீனா வின் 20,000 கோடி டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது அமெரிக்கா அறிவித்த வரி உயர்வு வெள்ளிக் கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது. அதன்படி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சீனாவின் 5,700 வகை பொருட்களின் வரி 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அது மட்டுமின்றி வியாழக்கிழமை அமெரிக்கா – சீனா பிரதிநிதிகள் இடையே வர்த்தக பேச்சு வார்த்தை துவங்கிய நிலையில் இன்று சீனாவுக்கு எதிரான வரி உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது சீனாவின் சமைக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், கிறிஸ்துமஸ் விளக்குகள், குழந்தைகளுக்கான நாற்காலிகள் உள்ளிட்ட 5,700 பொருட்கள் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என சீன வர்த்தக அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் நேற்று அமெரிக்கா – சீன பிரதிநிதிகள் இடையே நடந்த வர்த்தக பேச்சுவார்த்தையில் பெரிதாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. வர்த்தக பேச்சு வார்த்தை தோல்வியடைந்தாலோ அமெரிக்கா – சீனா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டாலோ கூடுதலாக சீனாவின் 32,500 கோடி டாலர் பொருட்கள் மீதான வரி 25 சதவீதமாக உயர்த்தப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா – சீனா இடையே வர்த்தக ஒப்பந்தம் முடிவாகும் சூழ்நிலையில் சீனா மீண்டும் பேச்சுவார்த்தையை நீட்டித்து வருகிறது. இதை ஏற்க முடியாது என அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். சீனா முன்பு ஒப்புக்கொண்ட நிபந்தனைகளில் இருந்து பின்வாங்குவதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லித்திசைசர் கூறியிருந்த நிலையில் இன்று டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

சீனா வர்த்தக ஒப்பந்தத்திற்கு உடன்படவில்லை என்றால் ஆண்டுக்கு 12,000 கோடி டாலரை வரி மூலமாக சீனாவிடம் இருந்து அமெரிக்கா பெற்றுக்கொள்ளும். மேலும் வர்த்தகங்கள் மீண்டும் அமெரிக்காவிற்கே திரும்பும். உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் என டிரம்ப் தெரிவித்தார். குறிப்பாக சீனா மீது புதிய வரிகள் விதிக்கும் தன் முடிவு சரிதான் என்பதை அதிபர் டிரம்ப் இவ்வாறு முன்னிறுத்தியுள்ளார்.

அதே சமயம் சீன பொருட்கள் மீதான வரி உயர்வு அறிவிப்புக்கு அமெரிக்க வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிபர் டிரம்பின் இந்த அதிரடி முடிவு அமெரிக்க வணிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த திடீர் முடிவு குறித்து அமெரிக்க இறக்குமதியாளர்களுக்கு 5 நாட்கள் முன்பு தான் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என சி.என்.என் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

மேலும்அதிபர் டிரம்பின் இந்த முடிவால் அமெரிக்க தொழில்துறை, விவசாயிகள் மற்றும் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று அமெரிக்கா – சீனா வர்த்தக கவுன்சில் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!