April 14, 2021

10 நாளில் 1,500 படுக்கைகள் கொண்ட புது மருத்துவமனை – சீனா அதிரடி – வீடியோ!

சர்வதேச நாடுகளை மிரட்டும் சீனாவில் தோன்றிய கரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைக் கவனத்தில் கொண்டு 10 நாளில் 1,500 படுக்கைகள் கொண்ட புது மருத்துவமனையை சீனா அரசு கட்டி அதை இன்று முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. பின்னர் இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவியது. இப்போது இந்தியா உள்பட 25 நாடுகளுக்கு பரவியுள்ளது. சீனா மட்டுமல்லாமல் பிற நாடுகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க மிக பெரிய அவசர மருத்துவமனை ஒன்றை 10 நாட்களுக்குள் அமைக்க திட்டமிட்டிருந்தது. இதை அடுத்து சீனாவின் ஹீபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரத்தில் 10 நாளில் 1,500 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையை திட்டமிட்டப்படியே கட்டியுள்ளன.

சீன அரசு கடந்த மாதம் 23ம் தேதி அதற்கான பணிகளை தொடங்கியது. கட்டுமான பணியாளர்கள், பிளம்பர்கள், எலக்ட்ரீசியன், பொறியாளர்கள், ராணுவம் என்று 7,000 பேர் கொண்ட குழுவினரால் 10 நாட்களில் இந்த மருத்துவமனை கட்டி முடிக்கப் பட்டு உள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மருத்துவமனை இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. காலை 10:00 மணியளவில் கரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் முதல் நபராக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

சுமார் 1,400 இராணுவ மருத்துவர்கள், செவிலியர்கள் மக்கள் விடுதலை இராணுவத்திலிருந்து புதிய மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இங்கு பணியாற்றவிருக்கும் பெரும்பாலான மருத்துவர்கள், கடந்த 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் சீனாவில் சார்ஸ் வைரஸ் காலகட்டத்தில் பணியாற்றியவர்கள் என தகவல் வருகிறது.