சர்வதேச அளவில் முதல் மின்சார சரக்கு கப்பல்! – சீனா சாதனை!
பெட்ரோல், டீசல் போன்ற எரிவாயுக்களுக்குப் பதிலாக மின்சாரத்தைக் கொண்டு இயங்கும் வாகனங்கள், ” இ – வாகனங்கள்” அல்லது “எலெக்ட்ரிக் வாகனங்கள்” ஆகியவை.. 1800களிலேயே, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஆரம்பக்கட்ட ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டன. 1828ல் அன்யஸ் ஜெடிக் என்ற ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் முதன் முதலாக ஒரு எலெக்ட்ரிக் காரை வடிவமைத்தார். அதைத் தொடர்ந்து எத்தனையோ, ஆராய்ச்சியாளர்கள் இது போன்ற வாகனங்களை வடிவமைத்து, பலவித சோதனை முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். ஆனால், 20ம் நூற்றாண்டின் இறுதியில் பெட்ரோல், டீசலுக்கான தேவை அதிகரிப்பு, உற்பத்தி குறைவு போன்ற பிரச்னைகள் எழவே, அதற்கு மாற்றாக உருவான எலெக்ட்ரிக் வாகனங்களின் மீது வெளிச்சம் பாய்கிறது. இன்றைய காலகட்டத்தில் அது அதி அவசியமான ஒரு விஷயமாக உருவெடுக்க ஆரம்பித்திருக்கிறது.
அதையொட்டி மின்சார கார், பைக், சைக்கிள் உள்ளிட்டவைகளின் உற்பத்தி அதிகரித்துக் கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில் சீனாவில் முதல் மின்சார சரக்கு கப்பல்களை தென் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் குவாங்சோவில் அறிமுகப்படுத்தினர். இது 2000-டன் சரக்குகளுடன் 80 கி.மீ வரை பயணிக்க முடியும். மின்சார கப்பல் 70.5 மீட்டர் நீளமுள்ள கப்பல், 600 டன் எடையும் கொண்டது. இதனை 2 மணிநேரம் சார்ஜ் செய்து 80 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும்.
இந்த மின்சார சரக்கு கப்பல்களை குவாங்சோ கப்பற்படை சர்வதேச நிறுவனம் 26 டன் லித்தியம் பேட்டரி கொண்டு இயக்கப்படும் அளவுக்கு தயாரித்துள்ளது. மின்சார சரக்கு கப்பலில் ஒரு மணி நேரத்திற்கு 12.8 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். இந்த சரக்கு கப்பலில் படிம எரிபொருட்களை பயன்படுத்த தேவையில்லை. மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையேயான நீர் மற்றும் நீரின் தரத்தை இந்த வகையான கப்பல்கள் நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு பாதுகாக்க வழிவகுக்கும் என பெய்ஜிங் சுற்றுச்சூழல் வல்லுனரான வாங் யாங்சன் குறிப்பிட்டுள்ளார்.